23/08/2026

சிறிய வழிகாட்டலில் பெரியமாற்றம்


​2001, மே மாதம்... பொறியியல் படிப்பை முடித்த உடனேயே, என் தந்தை என்னை ஒரு பொறியாளரிடம் உதவியாளராகச் சேர்த்துவிட்டார். சொந்த ஊரான அம்மன்பட்டியில், எங்கள் மனோகரன் மாமா அவர்களின் தோட்டத்தில் நெற்களம், பாலம் மற்றும் நுழைவு வாயில்கள் அமைக்கும் பணியே எனது முதல் களப்பணியாகும்.

​அப்போது ஏரியூரிலிருந்து 'தேவா' என்னும் பையன் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தான். அவனிடம், "தம்பி, எதுவரை படித்துள்ளீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவன், பன்னிரெண்டாம் வகுப்பில் கிட்டத்தட்ட 1000 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாகக் கூறினான். "அப்படியானால் நீங்கள் மேற்படிப்பு படிக்கலாமே!" என்றேன்.
​அதற்கு அவன், "இல்லை அண்ணா... எங்கள் குடும்பத்தின் சூழ்நிலை அப்படி. நான் சம்பாதித்தால்தான் வீட்டில் அனைவரும் சாப்பிட முடியும்; அதுபோக தங்கைகளும் இருக்கிறார்கள்" என்று தனது குடும்பச் சுமையை வருத்தத்துடன் கூறினான்.

​நான் அவனிடம், "இல்லை தம்பி, நீங்கள் படித்தால் உங்கள் வாழ்க்கையே மாறும். என்னை நம்புங்கள்!" என்றேன். உடனே அவன், "படிப்பதற்குப் பணம் வேண்டுமே அண்ணா?" என்றான்.
​நான், "கவலைப்படாதீர்கள்... நான் எங்கள் அப்பாவிடம் பேசி ஏதாவது செய்கிறேன். சனி, ஞாயிறு மற்றும் உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் வேலை பார்க்கவும், உங்கள் வருமானத்திற்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்" என்று வாக்குறுதி அளித்தேன்.
​
அந்தச் சமயத்தில்தான் என் தம்பியும் டிப்ளமோ படிக்கக் கல்லூரி தேடிக்கொண்டிருந்தான். சிவகங்கை அருகே மானாமதுரையில், நான் சார்ந்த சமுதாய மாணவர்களுக்குக் கொஞ்சம் சலுகை வழங்கும் அடிப்படையில் கல்வி கற்கும் வசதி இருந்தது. தேவா வேறு சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், என் தந்தை மூலமாக அங்கு முயற்சி செய்யச் சொன்னேன். அவனும் தனது குடும்ப நிலையை அங்கு விளக்கிக் கூறினான். அவனது தீராத கல்வி ஆர்வத்தையும் முயற்சியையும் பார்த்த கல்லூரியினர், அவனுக்கு இலவசமாகவே சீட்டு வழங்கினர்.

​இடைஇடையே வேலை பார்த்துக் கொண்டும், படிப்பில் முழு கவனம் செலுத்தியும் அவன் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான். அதன் பிறகு அவனுக்கு B.E (இளங்கலை பொறியியல்) படிக்கவும் சீட் கிடைத்தது; படிப்பையும் வெற்றிகரமாக முடித்தான்.

​பின்னர் பெங்களுரில் டாட்டா குழுமத்தில் பணிபுரிந்து, சவுதி, ஓமன் போன்ற வெளிநாடுகளிலும் வேலை பார்த்து, தற்போது தன் சொந்த ஊரில் ஒரு கட்டிட நிறுவனத்தைத் தொடங்கி தனது புதிய பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் தம்பி தேவேந்திரன் அவர்களை மனமார வாழ்த்தி மகிழ்கிறேன்! ஒருவேளை நான் வழிகாட்டாவிட்டாலும், அவருடைய விதிப்படி வேறு யாரேனும் அவருக்கு வழிகாட்டியிருக்கலாம். ஆனாலும், அவரே எடுத்த தொடர் முயற்சிதான் அவரை இன்று இந்த உயர்ந்த இடத்திற்குக் கொண்டுவந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

​இதன் மூலம் நான் கூற வருவது என்னவென்றால்:
​நாம் எப்போதும் நம்மால் முடிந்ததை பணமாகவோ, உழைப்பாகவோ, நல்ல ஊக்கமான வார்த்தைகளாகவோ அல்லது மனமார்ந்த வாழ்த்துகளாகவோ வழங்குவது இந்தப் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ​ஆகவே, நம்மால் முடிந்தவரையிலும் நல்ல எண்ணங்களை விதைப்போம்; நேர்மறையான சூழலை உருவாக்குவோமாக...!!!

வாழ்க வளமுடன்
வாழ்த்துகள் தம்பி!

✍️செ. இராசா

(தாங்கள் பிறருக்கு ஓர் முன்னுதாரணம்)

தொடர்புக்கு:

Devendran, DS Builders,
9150424423
7871424424
See less

No comments: