05/02/2022

புளியம்பழம்

 


உனை நினைத்தாலே போதும்..
நாக்கடியில் நதி சுரக்கும்
நீர்க்கடியில் இதழ் குளிக்கும்
பற்றிடக் கரம் ஏங்கும்...
பற்றினால் உடை விலகும்..
விரல்சேர்ந்து கொடை பிடிக்கும்
சிரம்புகுந்து தனை நனைக்கும்
பற்களிடைத் துண்டாக்கும்
பையப் பைய நீர் கலக்கும்..
கண்ணிமைகள் கதவடைக்கும்...
இன்பத்திலே பழம் இனிக்கும்
இறுதியிலே அது புளிக்கும்...

#புளியம்பழம்

கண்ணேறு

கண்ணேறு கொள்வோர்முன் காட்டுவதை விட்டுவிட்டு
முன்னேறிச் செல்லல் முறை

அதிகாரம் காலமறிதல்




 
தமிழ் மகள் இலக்கிய அமைப்பு, ,மல்ரி சிமார்ட் சொலுஷன் அமைப்பு மற்றும் ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகாட்ஸ் இணைந்து வழங்கும்
*உலகச் சாதனை நிகழ்ச்சி*
திருக்குறளில் மரபுக்கவிதை.
ஒரு அதிகாரம் ஒரு பா ஒரு கவிஞர்.
காலம் உணர்ந்து
.......கடமை புரிவோர்க்கே
ஞாலம் எனச்சொன்ன
......ஞாலமறை- மூலமதைக்
காலம் தவறாமல்
......கற்றுணர்ந்த பேரென்றும்
ஞாலத்தில் நிற்பார்கள் நன்று!
(1)
 
விடியும்முன் காகத்தை
.........வென்றிடும் ஆந்தை
விடிந்தபின் சண்டையெனில்
........வீழ்ந்து- மடிவதுபோல்
வெற்றிமேல் வெற்றியுடன்
.......வீறுகொண்ட ஹிட்லரை
வெற்றாக்கி விட்டதோர் போர்!
(2)
 
பேசுகின்ற நேரத்தில்
.........பேசாமல் பின்வந்துப்
பேசுகின்றப் பேச்சைப்
.........பெரிதாகப்- பேசுபவர்
பேசுவதை எல்லோரும்
..........பேசாமல் விட்டுவிட்டால்
பேசுவரோ பின்னென்றும் பேச்சு?!
(3)
 
செய்கின்ற நேரத்தில்
........செய்வதைச் செய்தால்தான்
செய்தபலன் அத்தனையும்
.......செய்ததுபோல் - கொய்திடலாம்
செய்வோம் எனச்சொல்லிச்
.......செய்யாமல் விட்டுவிட்டால்
தெய்வமா செய்யும் செயல்?
(4)
 
எல்லாம் இருந்தும்
.......எதிரிமுன் பின்வாங்கி
நல்லதோர் நேரத்தில்
.......நச்சென்று- வல்லமையில்
பாயும் கிடாபோல்
......பலத்தோடு பாய்ந்தால்தான்
மாயும் பகைவரின் வம்பு
(5)
 
தவம்செய்யும் ஞானிபோல்
.........தன்னோக்கில் நின்று
கவனமாய்க் கொக்குபோல்
.........கவ்வி- புவனத்தில்
வந்ததன் நோக்கத்தை
.......வாழ்கின்ற நாட்களுக்குள்
சிந்தையில் பற்றச் சிறப்பு
(6)
 
✍️செ. இராசமாணிக்கம்
 
 


03/02/2022

பாசத்தின் முன்னே..

 


 நாம்தூக்கிய பிள்ளைகள்
நம்மைத் தூக்கையில் ஆனந்தமே...

*
பாரம் பெரிதல்ல
பாசத்தின் முன்னே..

*
உள்ளத்தில் உரமிருந்தால்
உயரங்கள் எளிதே...


பழக்கடை

 

பழக்கடை ஒன்றிற்குப் போனால்
....பார்க்கலாம் பற்பல பழங்கள்!
பழவகை ஒன்றிற்குள் போனால்
....பார்க்கலாம் பற்பல வகைகள்!
பழங்களை ஒவ்வொன்றாய் உண்டால்
....பார்க்கலாம் பற்பல ருசிகள்!
பழச்சுவை ஒவ்வொன்றைப் போல்தான்
...பார்க்கிறோம் பற்பலக் கவிகள்!

✍️செ. இராசா


சிறு அங்கீகாரம் -- SINGLE FRAME PHOTOGRAPHY

 


இராமானுஜருக்கு ஓர் பாடல்



ஸ்ரீ ரங்க ரங்கதிரு சேவகனே
சீர் செய்ய வந்தகுரு வானவனே
நாத்திகர் போற்றுகின்ற ஆத்திகனே
கோத்திரத் தீயணைக்க வந்தவனே..

ஸ்ரீ ராம ராமராம ராமானுஜா
ஸ்ரீ ரங்க ரங்கநாத ராமானுஜா

தன்னலம் கண்டிடாத தத்துவனே
சொன்னசொல் மந்திரத்தைச் சொன்னவனே
விக்ரகம் மீட்டுவந்த வித்தகனே
திக்கெட்டும் உய்யவழி செய்தவனே...

ஸ்ரீ ராம ராமராம ராமானுஜா
ஸ்ரீ ரங்க ரங்கநாத ராமானுஜா

மார்க்கங்கள் தாண்டிவென்ற மகராசனே
ஏற்கின்ற பாதைதந்த இறைநேசனே..
சாத்திர நேர்த்திசெய்த சாமர்த்யனே
ஆத்திரம் என்றுமில்லா ஆனந்தனே..

ஸ்ரீ ராம ராமராம ராமானுஜா
ஸ்ரீ ரங்க ரங்கநாத ராமானுஜா

✍️செ. இராசா

(உலகிலேயே மிகப்பெரிய இராமானுஜ சமத்துவச் சிலை 216 அடி உயரத்தில் ஹைதராபாத்தில் வருகிற 5 ஆம் தேதி திறக்கவுள்ள நிலையில் இப்பாடல்)

02/02/2022

#தமிழ்நெஞ்சம் என் கவியைத் தன் நெஞ்சில் தாங்கியமைக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி🙏🙏🙏

 



கதிரவன் எழும்முன்

கதிரவன் எழும்முன்
காணொளியில் ஓர் கானம்...
மெல்லிசைப் பின்புலத்தில்..
துள்ளியதோர் ஓர் குரல்...
வருடும் நாதத்தில்
மறந்தது காலம்...
உருகிய தருணத்தில்
ஊற்றியது கண்ணீர்...
....
நகைத்தாள் இல்லாள்
உதைத்தாள் சொல்லால்
விளக்கேற்றா கண்களில்; நீர்
வடிப்பது பொய்யென்றாள்...

விளக்குவதைக் கேளென்றேன்
விளங்காவிடில் விலக்கென்றென்..

இசையே ஈசனென்றேன்...
ஈசனே இசையென்றேன்..
அவ்விரண்டும் ஒன்றென்றேன்..
அத்வைதம் அதுவென்றேன்..

என்னமோ? என்றுரைத்தாள்
எண்ணமே.....எல்லாமென்றேன்

01/02/2022

பொறுமை இழந்து பொறாமை புகுந்தால்
சிறுமை அடையும் செயல்