09/01/2020

உன் சுவாசக் காற்றால் என்னை வருடி



உன் சுவாசக் காற்றால்
என்னை வருடி
முத்து இதழ்களால்
முத்திரை பதிப்பாயே...
எங்கு சென்றாய்?

உன் கை விரல்களால்
என்னைத் தீண்டி
மோன நிலையிலே
மோகனம் புரிவாயே....
எங்கு சென்றாய்?

ஒவ்வொரு முறையும்
என்னை இசைத்து
உயிர்க்கும் அதிசயத்தை
உணர வைப்பாயே...
எங்கு சென்றாய்?

என்னவனே....எங்கு சென்றாய்?
உன் கரமேந்தி கவி ஊற்று
என் சிரமாட்டாத் தாலாட்டு
வா...
உன் #புல்லாங்குழல் நான்!

செ. இராசா

08/01/2020

ஒன்று

#ஒன்று பிடித்தால்
எந்த ஒன்று பிடிக்குமோ
அந்த ஒன்றைப் பேசுங்கள்!
அந்த ஒன்றை மட்டும் பேசுங்கள்!

ஒன்று உயர்வாகத் தோன்றினால்
எந்த ஒன்றைத் உயர்த்த வேண்டுமோ
அந்த ஒன்றை உயர்த்துங்கள்!
அதற்காக மற்ற ஒன்றைத் தாழ்த்தாமல்
அந்த ஒன்றை மட்டும் பேசுங்கள்!

ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்
இங்கே ஒவ்வோர் ஒன்றும்
ஒவ்வொரு தனித்தன்மை உள்ளவையே!
இந்த ஒன்று இப்படி
அந்த ஒன்று அப்படி அவ்வளவே...

உறுதியாக ஒன்று சொல்கிறேன்!
இறுதியாக ஒன்று சொல்கிறேன்!
ஒன்று ஒன்றாய் பாருங்கள்
ஒவ்வோர் ஒன்றும் நன்றாகப் புரியும்!!

✍️செ. இராசா

(தம்பி ஓடிப்போயிரு இல்ல அடி விழும்....😊😊😊புரியுது புரியுது...)

கூட்டம்

*
எங்கே இல்லை கூட்டம்?!

பக்தியின் பேரில் கூட்டம்
பகுத்தறிவின் பேரில் கூட்டம்
திருமண அரங்கிலும் கூட்டம்
திரைப்பட அரங்கிலும் கூட்டம்
தேனீர்க் கடையெல்லாம் கூட்டம்
தேடிடும் கடையெல்லாம் கூட்டம்
கல்விக் கூடத்திலும் கூட்டம்
கண்ட இடமெல்லாம் கூட்டம்

மனிதத் தலைகளால் மட்டுமா
மண்டிக் கிடக்கிறது இந்தக் கூட்டம்?!

அன்னமிட்டு அன்னமிட்டு
அன்னைபோல் அன்பாடும்
தாவரத்தின் கூட்டங்களாய்;

மகரந்தப் பொடிதூவி
மாங்கல்ய மணமாற்றும்
தேனீக்களின் கூட்டங்களாய்;

புழுவாய்ப் பூச்சியாய்
பறவையாய்ப் பாம்பாய்
எத்தனையோ கூட்டங்களாய்
இப்படி இணைந்து கூட்டிய
கூட்டங்கள்தானே எல்லாம்..

இங்கே..
சிற்றுயிர்கள் கூட்டமின்றி
பேருயிர்கள் இல்லை..
சில்லறைகள் கூட்டமின்றி
கல்லறையும் இல்லை

இவ்வளவு ஏன்?!
இங்கே
தனி மனிதன் கூட
தனி மனிதன் இல்லை...

கோடான கோடி உயிரணுக்கள்
கூட்டமாய் ஓடியபோது
தளபதிபோல் ஓடி வந்து
தல தூக்கிய தருணத்தில்
செல்களின் கூட்டமாய்
திசுக்களின் கூட்டமாய்
இப்படிக் கூட்டமாய்த் திரண்ட
ஒற்றைப் பிண்டம்தானே இந்த மனிதன்!

கோடான கோடி இறைத்துகள்கள்
கூட்டமாய்க் கூடியபோது
விண்துகளின் கூட்டமாய்
அணுக்களின் கூட்டமாய்
பஞ்ச பூதங்களாய்ப் பரிணமித்து
பல கூட்டமாய்த் திரண்ட
ஒற்றை உருண்டைதானே இந்தப்புவி?

ஆம்..
எங்கே இல்லை கூட்டம்?

ஒலிகளின் கூட்டம்தான் மொழி
துளிகளின் கூட்டம்தான் மழை
கற்களின் கூட்டம்தான் மலை
சொற்களின் கூட்டம்தான் கவி
கவிகளின் கூட்டம்தான் காவியம்
நிறங்களின் கூட்டம்தான் ஓவியம்
கணங்களின் கூட்டம்தான் காலம்
கனங்களின் கூட்டம்தான் ஞாலம்
மௌனத்தின் கூட்டம்தான் ஞானம்

இங்கே
நீயும் ஓர் கூட்டம்
நானும் ஓர் கூட்டம்

வா....
நாம் இருவரும் சேர்ந்தே
கூட்டுவோம் பெருங் கூட்டம்....

✍️செ. இராசா

07/01/2020

வளரும் வேகத்தில்
மறைந்தே போகிறது
குழந்தை உள்ளம்

தகதிமி தகதிமி ஆட்டம்-




தகதிமி தகதிமி ஆட்டம்- இது
தரிகிட தகதிமி ஆட்டம்!
அணுவிலே தொடங்கிய ஆட்டம்- இது
அண்டத்தில் ஆடிடும் ஆட்டம்!

சூனிய மாயையின் ஆட்டம்- இது
சூட்சம லோகத்தின் ஆட்டம்!
எங்கோ தொடங்கிய ஆட்டம்- இது
எங்கிலும் ஆடிடும் ஆட்டம்!

காண்போர் கண்டிடும் ஆட்டம்- இது
காணார் காணா ஆட்டம்!
துளியில் தொடங்கிய ஆட்டம்- இது
வளியில் ஆடிடும் ஆட்டம்!

அம்பல வாணரின் ஆட்டம்- இது
சம்பளம் வாங்கா ஆட்டம்!
கருவிலே தொடங்கிய ஆட்டம்- இது
இரவிலும் ஆடிடும் ஆட்டம்

✍️செ.இராசா

இணையத் தமிழர்--கரீம்

ஜனவரி 10ஆம் தேதி “இணையத் தமிழர்” விருது வாங்க இருக்கும் அன்பு நண்பர் கரீமுக்காக Kareemtime அவர்களுக்காக எழுதிய பாடல்
**************************************
(அரபு நாட்டில் ஓட்டுனர் வேலைக்கு வந்து இணையத்தின் வழியாக ஒரு கலக்கு கலக்கி அனைத்து அரபியர்களும் Autograph வாங்கும் அளவிற்கு உயர்ந்த நண்பரை நாம் வாழ்த்த வேண்டாமா?!)
*************************************
கரீம் கரீம் கரீம்!
கரீம் கரீம் கரீம்!

இணையத் தமிழன் நீ- எங்கள்
இதயத் தமிழன் நீ!
அரபுத் தமிழன் நீ- எங்கள்
அழகுத் தமிழன் நீ!.......(கரீம்)

சென்னைத் தமிழன் நீ- எங்கள்
சிங்கத் தமிழன் நீ!
அகிலத் தமிழன் நீ- எங்கள்
அன்புத் தமிழன் நீ!....(கரீம்)

உன்னைத் தெரியாதோன் ஊருக்குள் இல்லை!
உனக்கு(ம்) எப்போதும் நீதான் எல்லை!
மண்ணின் வாசந்தான் மணம்மாற வில்லை!
எமக்கும் எப்போதும் நீதான் முல்லை!

வண்ணக் கனவென்றே வாய்பேச வில்லை
எண்ணத் தமிழாலே எய்தாய் வில்லை!
சின்னக் கனவென்றே நீஎண்ண வில்லை!
மின்னல் சிரிப்பாலே செய்தாய் எல்லை!

✍️செ. இராசா

பட்டிக்காட்டு மண்ணவிட்டு



பட்டிக்காட்டு மண்ணவிட்டு
பட்டணந்தான் வந்தாலும்
கெட்டுப்போயி நிக்கவில்லை
கேட்டுப்பாரு தங்கரதம்!
கெட்டுப்போயி நிக்கவில்லை
கேட்டுப்பாரு தங்கரதம்!

அம்மன்பட்டி மண்ணவிட்டு
எங்கெங்கோ போன மச்சான்
எந்த ஊரு போனாலும்
என்னுசுரு சொல்லும் மச்சான்!
என்ன என்ன செஞ்சாலும்!
என்னுசுரும் சொல்லும் மச்சான்!

✍️செ.இராசா

05/01/2020

வான்புகழ் பெற்றிடயென் வாழ்த்து!



தெள்ளுதமிழ்ச் சோலைக்குள்
.........செந்தமிழ் வண்டாகி
வள்ளுவப் பூமேலே
..............வந்தமரும் சான்றோரே
தேன்தமிழ்ச் சொல்லெடுத்து
..............செய்கின்ற நற்கவியால்
வான்புகழ் பெற்றிடயென் வாழ்த்து!

04/01/2020

சாணுயரம் இல்லாத ..........சாமானை வைத்திங்கு



சாணுயரம் இல்லாத
..........சாமானை வைத்திங்குக்
காணுகிறார் கண்டபடிக்
........கோணுகிறார்- நாணுகிறார்
தானாகத் தன்பாட்டில்
........தந்தனத்தோம் போட்டபடி
சீனாகப் போடுகிறார் சீ!

✍️செ. இராசா

02/01/2020

வாருங்கள் விளையாடுவோம்.



எது கிடைக்கிறதோ
அதைப் பொறுத்தே நகர்வு
ஆனால்...
எது கிடைக்குமென
எவருக்கும் தெரியாது..

இங்கே அனைத்தும்
நம் கையில்தான் உள்ளதென்றாலும்
உண்மையில்..
நம்பிக்கையில்தான் உள்ளது எல்லாம்

எத்தனையோ பாம்புகள்
இறக்கிவிடத் துடித்தாலும்
எத்தனையோ ஏணிகளும்
இடை இடையே இல்லாமல் இல்லை...

தொடர்ந்து நகர்வோம்..
வருவது வரட்டும்!
தொடர்ந்து உருட்டுவோம்..
விழுவது விழட்டும்!

பரமபத விளையாட்டில்
பகடைகளின் கணக்கு
பரந்தாமனின் விளையாட்டில்
பாவ புண்ணிய கணக்கு...

வாருங்கள் விளையாடுவோம்...!!!