08/01/2020

கூட்டம்

*
எங்கே இல்லை கூட்டம்?!

பக்தியின் பேரில் கூட்டம்
பகுத்தறிவின் பேரில் கூட்டம்
திருமண அரங்கிலும் கூட்டம்
திரைப்பட அரங்கிலும் கூட்டம்
தேனீர்க் கடையெல்லாம் கூட்டம்
தேடிடும் கடையெல்லாம் கூட்டம்
கல்விக் கூடத்திலும் கூட்டம்
கண்ட இடமெல்லாம் கூட்டம்

மனிதத் தலைகளால் மட்டுமா
மண்டிக் கிடக்கிறது இந்தக் கூட்டம்?!

அன்னமிட்டு அன்னமிட்டு
அன்னைபோல் அன்பாடும்
தாவரத்தின் கூட்டங்களாய்;

மகரந்தப் பொடிதூவி
மாங்கல்ய மணமாற்றும்
தேனீக்களின் கூட்டங்களாய்;

புழுவாய்ப் பூச்சியாய்
பறவையாய்ப் பாம்பாய்
எத்தனையோ கூட்டங்களாய்
இப்படி இணைந்து கூட்டிய
கூட்டங்கள்தானே எல்லாம்..

இங்கே..
சிற்றுயிர்கள் கூட்டமின்றி
பேருயிர்கள் இல்லை..
சில்லறைகள் கூட்டமின்றி
கல்லறையும் இல்லை

இவ்வளவு ஏன்?!
இங்கே
தனி மனிதன் கூட
தனி மனிதன் இல்லை...

கோடான கோடி உயிரணுக்கள்
கூட்டமாய் ஓடியபோது
தளபதிபோல் ஓடி வந்து
தல தூக்கிய தருணத்தில்
செல்களின் கூட்டமாய்
திசுக்களின் கூட்டமாய்
இப்படிக் கூட்டமாய்த் திரண்ட
ஒற்றைப் பிண்டம்தானே இந்த மனிதன்!

கோடான கோடி இறைத்துகள்கள்
கூட்டமாய்க் கூடியபோது
விண்துகளின் கூட்டமாய்
அணுக்களின் கூட்டமாய்
பஞ்ச பூதங்களாய்ப் பரிணமித்து
பல கூட்டமாய்த் திரண்ட
ஒற்றை உருண்டைதானே இந்தப்புவி?

ஆம்..
எங்கே இல்லை கூட்டம்?

ஒலிகளின் கூட்டம்தான் மொழி
துளிகளின் கூட்டம்தான் மழை
கற்களின் கூட்டம்தான் மலை
சொற்களின் கூட்டம்தான் கவி
கவிகளின் கூட்டம்தான் காவியம்
நிறங்களின் கூட்டம்தான் ஓவியம்
கணங்களின் கூட்டம்தான் காலம்
கனங்களின் கூட்டம்தான் ஞாலம்
மௌனத்தின் கூட்டம்தான் ஞானம்

இங்கே
நீயும் ஓர் கூட்டம்
நானும் ஓர் கூட்டம்

வா....
நாம் இருவரும் சேர்ந்தே
கூட்டுவோம் பெருங் கூட்டம்....

✍️செ. இராசா

No comments: