15/03/2026

எத்தனையோ முறை கத்தாரில்.....




எத்தனையோ முறை கத்தாரில் இருந்து இந்தியா வந்திருந்தாலும் இம்முறை வந்தது உண்மையில் மறக்கமுடியாத அனுபவமாகவே இருந்தது. பொதுவாக ஊருக்கு போய்வரும் பதிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றே நினைத்தாலும் இந்தப் பதிவின் அவசியம் கருதியே பதிவிடுகின்றேன்.

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்"
என்கிற குறளுக்கு முற்றிலும் மெய்யாகத் திகழும் கத்தார் நாட்டிற்கும் மன்னருக்கும் இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் கத்தார் அரசு செய்யும் சேவையையும் அவர்கள் எங்களுக்கு அளித்த பாதுகாப்பையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
ஆம்...
மக்களை எப்படி எப்படி வழி நடத்த வேண்டும், வணிக வளாகங்களை எப்படி இந்தச் சூழலில் கண்காணிக்க வேண்டுமென ஆரம்பித்து மீண்டும் இயல்புநிலை திரும்ப அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் சிறப்பாகவே செய்கின்றார்கள்.
நான் மார்ச் 9ல் ஊருக்குப் போவதற்காக ஓமன் ஏர்லைன்ஸில் பயணச்சீட்டு வைத்திருந்தேன். போர்ச்சூழலால் ரத்து ஆனாலும் விலை ஏதும் மாறாமல் மாற்று ஏற்பாடாக கத்தார் ஏர்வேஸில் இருந்து ஓமன்வரை கூட்டிவந்து பின்னர் அங்கிருந்து ஓமன் ஏர்வேஸில் சென்னை வந்தடைய வழிவகை செய்ததெல்லாம் ஆச்சரியமாக உள்ளது. (அவர்கள் நினைத்திருந்தால் பணத்தை திருப்பி செலுத்தி இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது). பாதுகாப்பு கருதி பல விடயங்களை இங்கே கூற முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓமனில் 19 மணி நேர இடைவெளிக்குப்பின் இன்றுதான் வந்தடைந்தேன் என்றாலும் இது முற்றிலும் புதிய அனுபவமே. காரணம் கிளம்பும்போதே டம் டம்மென்று சப்தம். பயமாகவே இருந்தது. சாமியைக் கும்பிட்டுக் கொண்டேன். கடைசி நிமிடம் வரை பயணம் இருக்குமோ இருக்காதோ என்கிற சந்தேகமும் இருந்தது. ஆகவேதான் யாரிடமும் இம்முறைத் தெரியப்படுத்தவில்லை. ஆக.... யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாமாக.
அப்புறம் என்னாச்சு?!!
அப்புறம் என்ன?.......இறைவனின் அருளாலும் கத்தார் அரசின் அற்புதமான முயற்சியாலும் அடியேன் வீடுவந்து சேர்ந்தமைக்கு எம் இனிய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
வாழ்க வளமுடன்!

No comments: