அடியேன் கத்தார் வந்த புதிதில் மிகவும் ஆச்சரியமாக பார்த்த விடயங்களில் ஒன்று, இந்த இரமலான் நோன்பு. என்னைப் பொறுத்தவரையிலும் வளைகுடா நாடுகளில் மட்டுமே அதன் தாத்பரியத்தை முழுமையாக உணர முடியும் என்று நினைக்கிறேன். காரணம், இங்கே உள்ள அரசாங்கமும் அதன் விதிமுறைகளுமே.
அதாவது, நோன்பு நோற்கும் நேரம் முழுவதும் சாப்பாட்டுக் கடைகள் ஏதும் இயங்காது. (இப்போது சில கடைகளில் பார்சல் தருகிறார்கள். முன்பெல்லாம் இல்லை). பொதுவாக 6 மணி நேரங்கள் மட்டுமே வேலை நேரம். (சில நிறுவனங்கள் மட்டும் பாகுபாடு பார்க்கின்றன. சட்டப்படி அது தவறு)
வெளியே பார்க்கும்படி அமர்ந்து சாப்பிட்டால் அபராதம் உண்டு.
இப்படி நிறையவே அரசும் விதிமுறைகள் வைத்திருப்பதால் இந்த ஒரு மாதம் முழுவதுமே மற்றவர்களும் ஒரு மாற்று அனுபவத்தைப் பெற முடியும்.
என்னைப் பொறுத்தவரையிலும் பள்ளிக் காலத்தில் இருந்தே ஆன்மீக ஆராய்ச்சியில் இருப்பவன் என்பதாலும் இறைவன் அல்லது இறைநிலை என்பது ஒன்றே என்பதை உணர்ந்ததாலும் அனைத்து மதங்களையும் நன்றாகவே புரிந்து கொண்டவன் என்று சொல்ல முடியும். அதனால்தான் என்னால் எந்தவித குழப்பமும் இன்றி கிருத்தவ ஆலயங்களுக்கும் இஸ்லாமிய மசூதிகளுக்கும் ஆரம்ப காலங்களில் செல்ல முடிந்தது.
பொதுவாக ஆரம்ப காலத்தில் இந்த இஃப்தார் விருந்துகளுக்கு நிறையவே சென்றுள்ளேன். மேலும் இஸ்லாமியப் பண்டிகை காலங்களில் சாப்பாடு வீடுதேடி வரும். இப்போதெல்லாம் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை.
(இந்தக் கட்டுரைக்குப்பின் வரலாம்....

) அப்படி யோசித்துக் கொண்டே மாலை வேளையில் கடை வரைக்கும் போய்வரலாம் என்று கிளம்பினேன். அப்போது ஒரு கத்தாரி கார் மிக அருகே வந்தது. சரி ஏதோ கேட்கப்போகிறார் என்றே நினைத்தேன்... "சலா மலேகும்" என்றார் "அலைக்கும் சலாம்" என்றேன். "கைஃபாலக்" என்று நலம் விசாரித்தார். "ஜென் கொய்ஸ்" என்றும் நலமே என்றேன். உடனே உள்ளே இருந்து இஃப்தார் உணவுப் பொட்டலத்தை மனம் மகிழ கொடையளித்தார். மனமார ஏற்றுக் கொண்டு "சுக்ரன்" என்று நன்றியைத் தெரிவித்தேன். அப்போதே மனம் முழுவதும் நிறைந்தது. வீடு வந்தவுடன் வயிறும் நிறைந்தது.


No comments:
Post a Comment