
வேங்கைவயல் சம்பவத்தில்
......நீதிகண்ட பின்னரும்
போங்குயென்று சொல்லுகின்ற
......போக்குயென்ன நியாயமோ?
தீங்குசெய்த மாக்களெல்லாம்
......சேர்ந்துசெய்த செய்கையை
தாங்குகின்ற நாலுபேரின்
.....தன்மையென்ன தன்மையோ?
வாகுவான வாய்ப்பிருந்தும்
......மாறிடாத யாருமே
சாகுமாறு வந்தபோதும்
......தாழ்வதில்லை என்றுமே!
பாகுபாடு தீதுயென்று
.....பாயுமந்தச் சட்டமே
பாகுபாடு கொண்டதென்றால்
......பாவமிங்கே யாவுமே!செ. இராசா
(திடீரென்று புகழ்பெற்ற ஒரியா மொழிப் பாடல் மெட்டுக்கு நான் தமிழில் எழுதியது. இதேபோல் நம் பாட்டும் என்றாவது ஒருநாள் புகழ் பெறாமலாப் போய்விடும் என்கிற தன்னம்பிக்கையை ஊட்டிய பாடல்)
தமிழை வெறுத்தத் தலைவனை
....தந்தை யாக்கி மகிழ்வதும்
அமிலம் உமிழ்ந்த சொற்களை
....அர்த்தம் மாற்றி உரைப்பதும்
நிமிர்ந்து பேசும் எவரையும்
....விரைந்து சென்று தடுப்பதும்
தமிழன் மேலே வருவதை
.... தவிர்க்கும் சூழ்ச்சி புரியுதா?!
வள்ளுவன் வாழ்ந்த மண்ணிலே
....வந்த வரெல்லாம் ஆள்வதா?!
கொள்ளையர் வாழ எண்ணியே
....கொள்கையில் மாற்றம் வருகுதா?
பள்ளியை அரசு மூடியே
....பானமாய் விற்று செழிக்குதா?!
துள்ளிடும் காளையர் கிறங்கவே
.... சூட்சும வஸ்து கிடைக்குதா?செ. இராசா
#மெட்டுக்கு_எழுதிய_பாடல்
அல்லா தந்த அற்புத மார்க்கம் வந்துவிட்டால்- நீர்
எல்லாநலனும் இங்கேக் கிடைக்கக் கண்டிடலாம்....(2)
எங்கும் யாவும் படைத்தோனே
எம்மைக் கரையேற்று(ம்) ரஹ்மானே (2)
அல்லா தந்த அற்புத மார்க்கம் வந்துவிட்டால்- நீர்
எல்லாநலனும் இங்கேக் கிடைக்கக் கண்டிடலாம்....
வேதம் நபியை அடைந்திடவே
விருப்பமும் கொண்டாய் -அவர்
வழியினாலே உலகமுய்யும்
மார்க்கத்தைக் கொடுத்தாய்..
வாழும் போதே ஏற்றிடாத
மாந்தரும் கண்டாய்..
கால நேரம் ஏற்க வைக்கும்
கணிப்பையும் தந்தாய்...
ஏழ்மையை எண்ணிட
ஈகையைப் போற்றிட வைத்தவனே
எங்கள்
நேர்மையைக் காத்திட
நேசத்தைக் காட்டிட அருள்வோனே
எங்கும் யாவும் படைத்தோனே
எம்மை கரையேற்று(ம்) ரஹ்மானே (2)
அல்லா தந்த அற்புத மார்க்கம் வந்துவிட்டால்- நீர்
எல்லாநலனும் இங்கேக் கிடைக்கக் கண்டிடலாம்..செ. இராசா