30/03/2022
இட்லி வெண்பாக்கள்
29/03/2022
பக்கத்து இலைக்குசிலர் ......பாயாசம் கேட்பதனால்
பக்கத்து இலைக்குசிலர்
......பாயாசம் கேட்பதனால்
அக்கறை என்றெல்லாம்
.......அர்த்தமில்லை- மக்கா
கவனக் குரலெழுப்பி
.......கைகாட்டித் தன்னைக்
கவனிக்கச் சொல்லுமவர் கண்!
செ. இராசா
ண்ணப்ப_நாயனார்
28/03/2022
வெளியூர்வாழ் ஜீவன்கள்
இப்படியே வாழ்வோமா?
......இங்கிருந்து போவோமா?
அப்படியே போனாலும்
......அங்கேவூர்-எப்படியோ?
இப்படியே பேசித்தான்
.....இத்தனைநாள் ஓட்டிட்டோம்!
அப்படியே பேசிடுவோம்...ஆம்!
#வெளியூர்வாழ்_ஜீவன்கள்
இந்தக் கவிஞனும்.... தக்காளியைப்போல்தான்;
பார்த்ததும் வேகத்தி
27/03/2022
அவையடக்கம்
சிங்களப்பாட்டு மெட்டு: Manike Mage Hite
26/03/2022
கவிதை அல்லது பாடலுக்கு இலக்கணம் தேவையா?
கவிதை
அல்லது பாடலுக்கு இலக்கணம் தேவையா எனக்கேட்போர் ஒருபக்கம் என்றால்,
மொத்தத்தில் இலக்கணம் தேவையா எனக்கேட்போரும் உள்ளார்கள்தானே.
அவர்களுக்காகவே இப்பதிவு.
தமிழ் நாட்டில் தமிழ் தேவையா? என்னும்
கேள்வியை எதிர்நோக்கும் தலைமுறைக்கு இலக்கணம் தேவையா? என்னும் கேள்வி
பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லைதான்.
ஆமாம், முதலில் இலக்கணத்தின்
தேவைதான் என்ன? நாங்கள்தான் இலக்கணம் இல்லாமலேயே பின்னிப் பெடலெடுக்கிறோமே.
அட உங்களைவிட எங்களை அதிகமாகப் பாராட்டுகிறார்களே எங்களுக்கேன் இலக்கணம்?
அதெல்லாம் சரி... முதலில் நீ...எல்லா இலக்கணமும் கற்றவனா? நீ ஏன்
இதையெல்லாம் பேசுகிறாய் என்கின்ற ரீதியிலான கேள்விக்கு முதலில் விடை
சொல்லிவிட்டுப் பின்னர் இக்கட்டுரையின் ஆரம்பக்கேள்விக்கு வருவோமா?!!
உண்மைதாங்க......நானும்
இலக்கணத்தை ஓரளவு கற்றவனே. என் கவிதைப் பயணத்தை 2018ல் வெளிவந்த என்
முதல் நூலாகிய "நான் எனும் மண்குடம்" என்கின்ற நூலிற்கு முன் பின் என்றே
பிரிக்கலாம். அதுவரையிலும் இலக்கணம் பயிலாமலேயே ஆனால் இலக்கண வடிவத்தில்
ஓசையைமட்டுமே வைத்தே எழுதிவந்தேன். என்னை எப்படியோ கவனித்த எம் குருநாதர்
திரைப்படப் பாடலாசிரியர் சின்னக் கண்ணதாசர் என்று MSV அவர்களால் பட்டம்
சூட்டப்பட்ட கவிஞர் திரு. விக்டர்தாஸ் அண்ணா அவர்களின் ஊக்குவிப்பும் அவர்
எழுதிய அணிந்துரையும், நூல் விழா அன்று அவர் பேசிய அற்புத உரையும்தான்
என்னை மாற்றியதென்றால் நம்புவீர்களா?!! ஆம். "தம்பி.. இலக்கணம் பயிலாமலேயே
அற்புதமாக எழுதுகின்றார். அவர் மட்டும் இலக்கணம் பயின்றால், எங்கேயோப்
போய்விடுவார்" என்றார்கள். நான் அந்த அளவு போய்விட்டேனா என்றால் அது
தெரியாது. ஆனால் அந்த உரைதான் என்னை இதுவரையில் உந்தியது என்று எங்கு
வேண்டுமானாலும் சொல்வேன்.
அதன்பின் கி.வா. ஜெகன்நாதன் அவர்களின்
"கவிபாடலாம்" என்கின்ற நூல் பயின்றேன். வெண்பா இலக்கணம் முதல் விருத்தங்கள்
பற்றியெல்லாம் கற்றுக்கொண்டு முகநூலில் எழுதியபோது, என்னை
நெறிப்படுத்தியவர்கள் பாவலர் அணுராதா கட்டபொம்மன் மாமா அவர்களும், தம்பி
ஆனந்தும்தான். அதுபோக ஹைக்கூ போன்ற மற்ற வடிவங்கள் பற்றிய இலக்கணமும்
பயின்றேன். சரி சரி...சுயபுராணத்தை விட்டுவிட்டு கட்டுரையின் ஆரம்ப
கேள்விக்கே வருவோம்
மோனை, எதுகை, முரண், இயைபு...இப்படி
யாப்பிலக்கணம் கற்கும்போதுதான் பல பல சங்க இலக்கியக் கவிதைகளைச் சுவைபட
ருசிக்க ரசிக்க முடிகிறது என்பதை அறிந்து கொண்டேன். அதுபோக,
பாடலாசிரியாவோர் கற்றுக்கொண்டால் அசைகளை இடம்வலம் மாற்றும்போது எப்படி
இசைப்பாடல் வருகிறது என்பதையும் உணர்ந்து கொண்டேன். தமிழை ஏன் இசைத்தமிழ்
என்று அழைக்கிறார்கள் என்றால், வெறும் இரண்டே இசைகளை கணிதத்தில் வரும்
நிகழ்தகவு (probability)போல் மாற்றி மாற்றி அமைக்கும்போது ஒவ்வொரு
கட்டமைப்பும் ஒவ்வொரு ஓசை நயமாய் மாறுவதைக் கண்டு பிரம்மித்தேன்.
இன்னொரு
அதிசயம் பாருங்கள். அந்தக் கால இலக்கியங்கள் முதல் இந்தக் கால தினசரிகள்
வரை அனைத்தையும் ஒரு மென்பொருளில் போட்டால் வல்லின எழுத்துக்கள்
மிகையாகவும் மெல்லின எழுத்துக்கள் குறைவாகவும் இடையின எழுத்துக்கள்
நடுவிலும் பயன்படுத்துகிறதாய் ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. பேச்சுத் தமிழிலும்
அப்படித்தானாம். இவையெல்லாம் ஆச்சரியமில்லையா?!! வல்லின எதுகை வைத்து
எழுதிய ஒரு பாடலைக் கவனியுங்கள்...எ.கா; வெற்றிக்கொடி கட்டு பகைவரை.....ஒரு
வேகம் வரும். அதுவே மெல்லின எதுகை வைத்தெழுதிய பாடலைக் கவனியுங்கள் எ.கா:
அன்பே அன்பே கொல்லாதே....ஒரு மென்மை இருக்கும். ஆக இதையெல்லாம்
அறிந்துகொண்டால் பயன் தருமா இல்லையா?! நீங்களே சொல்லுங்கள்.
சரி...ஆனால்
இலக்கணங்கள் கையைக் கட்டுகிறதே...என்று சொல்கிறீர்களா?!. ஆனால் அங்கேயும்
தளர்வுகள் உள்ளனவே... கவனித்தீர்களா?! உதாரணமாக...கட்டம் என்று வரும்
சொல்லுக்கு எதுகை பட்டம் தான் போடவேண்டும் என்றில்லையே.....கருத்து
வேண்டும் பட்சத்தில் சத்தம் என்ற சொல்லும் பயன்படுத்தலாமே.... அதாவது
எதுகையின் வகைகளை அறிந்துகொண்டால் மற்ற வகை எதுகைகளையும் பயன்படுத்தலாமே.
இப்படி நிறைய தளர்வுகள் உள்ளனவே...
ஒன்றே ஒன்று சொல்கின்றேன். புதுக்கவிதை, நவீனக்கவிதை, ஹைக்கூ....இவற்றிற்கெல்லாம்
மரபுக்கவிதை
எழுதுவோர் எதிரியல்ல. என்னைக் கேட்டால் கவிதை என்றால் கவிதையே....இதில்
வடிவங்கள் என்பது கவிதைக்குமேல் உள்ள ஆடைகளே... அவரவர் பார்வையில் ஆடைகள்
அழகாகின்றன. மேலும் ஒவ்வொரு வடிவங்களுக்கும் ஏதோ ஓர் இலக்கணம் அல்லது விதி
உள்ளதுதானே....?!! படிமம் என்கிற பெயரில் புரியாமல் செய்யும் புனைவுகள்
எல்லாக் காலத்திற்கும் நிலைக்குமா என்பதையும் சுயபரிசோதனை செய்தால்
கவிதைக்கு இலக்கணம் தேவையா என்பதற்கானப் பதிலை நாம் கண்டறியலாம். ஆக....
இலக்கணம் படியுங்கள்...எப்போது வேண்டுமோ அப்போது அதே இலக்கணத்தை உடையுங்கள்
அல்லது மீறுங்கள். ஆனால் ஒரேயடியாக தூக்கி எறிந்துவிடாதீர்கள்... காரணம்
இலக்கணம் என்பது ஒரு ஒழுங்கு. சமூகம், மொழி ....என எதிலுமே ஒழுங்கு
தவறினால் என்னாகும் என்பதை நான் சொல்லித்தான் புரிய வேண்டுமா என்ன?!
நீங்களே யோசியுங்கள்...!!!
நன்றி நன்றி!!!
திருக்குறளை தேசிய நூலாக
எந்தச் சான்றிதழையும் பட்டங்களையும் இதுவரையிலும் இங்கே நானாக பதிவிட்டது கிடையாது...
ஆனால்,
யாம் பெரிதும் போற்றும் வள்ளுவம் சார்ந்த உலகசாதனை நிகழ்வில் கலந்து
கொண்டதற்கானச் சான்றிதழ் என்பதாலும் வள்ளுவ நிகழ்வுகள் மேலும் மேலும் பரவ
வேண்டும் என்பதாலும் இங்கேப் பதிவிடுகின்றேன்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பதற்கான முயற்சியே இந்நிகழ்வு
என்பதையும் தெரிவித்துக் கொண்டு
எமக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கிய நிறுவனத்தாருக்கும் கவிஞர். முல்லை நாச்சியார் அக்கா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
அதிகாரம் எண் : 49
அதிகாரத்தின் பெயர்: காலமறிதல்
நேரிசை வெண்பாக்கள்
காலம் உணர்ந்து கடமை புரிவோர்க்கே
ஞாலம் எனச்சொன்ன ஞாலமறை- மூலமதைக்
காலம் தவறாமல் கற்றுணர்ந்த பேரென்றும்
ஞாலத்தில் நிற்பார்கள் நன்று!
(1)
விடியும்முன் காகத்தை வென்றிடும் ஆந்தை
விடிந்தபின் சண்டையெனில் வீழ்ந்து- மடிவதுபோல்
வெற்றிமேல் வெற்றியுடன் வீறுகொண்ட ஹிட்லரை
வெற்றாக்கி விட்டதோர் போர்!
(2)
பேசுகின்ற நேரத்தில் பேசாமல் பின்வந்துப்
பேசுகின்றப் பேச்சைப் பெரிதாகப்- பேசுபவர்
பேசுவதை எல்லோரும் பேசாமல் விட்டுவிட்டால்
பேசுவரோ பின்னென்றும் பேச்சு?!
(3)
செய்கின்ற நேரத்தில் செய்வதைச் செய்தால்தான்
செய்தபலன் அத்தனையும் செய்ததுபோல் - கொய்திடலாம்
செய்வோம் எனச்சொல்லிச் செய்யாமல் விட்டுவிட்டால்
தெய்வமா செய்யும் செயல்?
(4)
எல்லாம் இருந்தும் எதிரிமுன் பின்வாங்கி
நல்லதோர் நேரத்தில் நச்சென்று- வல்லமையில்
பாயும் கிடாபோல் பலத்தோடு பாய்ந்தால்தான்
மாயும் பகைவரின் வம்பு
(5)
தவம்செய்யும் ஞானிபோல் தன்னோக்கில் நின்று
கவனமாய்க் கொக்குபோல் கவ்விப்- புவனத்தில்
வந்ததன் நோக்கத்தை வாழ்கின்ற நாட்களுக்குள்
சிந்தையில் பற்றச் சிறப்பு
(6)
✍செ. இராசமாணிக்கம்
கத்தார்
25/03/2022
பணம்தந்து பாட்டெழுத
பணம்தந்து பாட்டெழுத பாவலன்நான் எண்ணவில்லை!
குணம்குன்றி யுள்ளோரைக் கூட்டாக்கும் எண்ணமில்லை!
மனம்கண்டு சேர்வோரை வாழ்த்தாமல் விட்டதில்லை!
இனம்கண்டு சேர்வோரை என்றைக்கும் விட்டதில்லை!
24/03/2022
பெண்களின் எதிர்காலம்
வேகமாய் வருகிறது
பயம்
(1)
மழலையர் உலகம்
வேகமாய் இயங்குகிறது
கைப்பேசி
(2)
இளைஞர் உலகம்
பற்றி எரிகிறது
சிகரெட்
(3)
வெயிலின் தாக்கம்
பொங்கி வருகிறது
பீர் பாட்டில்
(4)
தமிழக நிதிநிலை
கூடிக்கொண்டே போகிறது
கடன்
(5)
இலங்கை நிலைமை
சரியாகிவிட்டது
கணிப்பு
(6)
தாக்குதல் வேகம்
கூடிக்கொண்டே போகிறது
அமெரிக்கத் தலையீடு
(7)
செ. இராசா
அகவை தின வாழ்த்துகள் நண்பா
நட்பென்றால் யாதென்று
.....வள்ளுவர்சொல் கண்டறிய
நட்பாக உள்ளோரில்
.....நன்றாக - உட்சென்றால்
நட்பில்மெய் நட்பாக
.....வந்துமுன் நிற்கின்ற
நட்பென்றால் என்றும் சிவா!
அகவை தின வாழ்த்துகள் நண்பா
23/03/2022
எப்போதும் இளமையாய் இருக்க என்ன செய்வது?
எப்போதும்
இளமையாய் இருக்க என்ன செய்வது? இந்தக் கேள்விக்கான விடையாக இக்கட்டுரை
இருந்தாலும் அனைவரும் வழக்கமாய்க்கூறும் உடல் சம்பந்தமான அல்லது உணவு
சம்பந்தமான குறிப்புகள் இங்கே இடம்பெறாதென்பதை முன்கூட்டியே தெரிவித்துக்
கொள்கிறேன். இது முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்டப் பதிவே என்பதால்
தொடர்பவர்கள் தொடரலாம்..... நன்றி!.
ஒரு
மாணவன் அல்லது இளைஞனை அவன் சார்ந்த சூழல் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கினால்
அவன் தோற்றம் எப்படி இருக்கும் என்பதற்கும், அச்சூழலில் இருந்து
விடுபட்டால் அத்தோற்றம் எப்படி மாறுமென்பதற்கும் இங்கு நான் வேறு யாரையும்
உதாரணமாக சொல்லப்போவதில்லை. அதன் சாட்சியாக என்னையே உங்கள்முன்
வைக்கின்றேன்.
கல்லூரி படிக்கும் வரையிலுமே நான் இயல்பான
இளமையாகத்தான் இருந்தாலும், அதற்குப்பின் ஏற்பட்ட சிலபல சம்பவங்களால்
மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளாகி திருமணத்திற்கு முன்பே மிகவும்
முதிர்ச்சியான உருவ அமைப்பைப் பெற்றிருந்தேன். அந்த உருவத்தைப்
பார்த்தபின்னும் என்னைத் திருமணம் செய்துகொண்ட என் மனைவியாருக்கு முதலில்
என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருகட்டத்தில்,
அந்தக் கவலைகள் எல்லாமும் உண்மையில் கவலையே இல்லை என்பதை முழுமையாக
உணர்ந்து, அவற்றையெல்லாம் உதறித்தள்ளி, வாழ்க்கை ஒரு வாழும் கலை என்று வாழ
ஆரம்பித்தபோதுதான் என் இளமை திரும்பியது என்றால் நம்புவீர்களா?....அட
சத்தியங்க.
அப்படின்னா.... நீங்கள் கவலையே கொள்வதில்லையா என்று
நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. அதிலிருந்து எப்படி வெளிவரவேண்டுமெனத்
தெரிந்துகொண்டால் அப்புறமென்ன கவலை என்றே சொல்ல வருகிறேன். அதுதான்
எப்படி?.....நூல் வாசிப்பும் மனவளக்கலைப் பயிற்சியுமே முக்கியக் காரணம்.
இதுபோக,
சில இரகசியங்களையும் சொல்கிறேன் கேளுங்கள். ஆடை விடயத்தில் நான்
முடிவெடுப்பதே இல்லை. எல்லாமே என் மனைவியார்தான். உண்மையில் நம்மை,
நம்மைவிட இரசிப்பவர்கள், அவர்கள் தானே?! முன்பெல்லாம் Contrast என்றால்
என்னவென்றே தெரியாது. பேண்டும் சட்டையும் ஒரே நிறம்தான் போடுவேன். அதுவும்
அரக்கு நிறத்தில்.
இதையெல்லாம் மாற்றியவர் அவரே... (கறுப்பானவர்கள் கறுப்பு போட்டால்
எடுக்காதென்று நாமாக நினைத்துக்கொள்ளும் தவறான கருத்து) ஆக..நம் இளைமைக்கு
மனைவியின் பங்கும் முக்கியம் (இது புதுசா இருக்கே....)
சரி...எதையோ
சொல்லவந்து எங்கோ போயாச்சு!.. கவலை இல்லாமல் மனதை வைத்துக்கொண்டால்
முடிகூட கொட்டாதுங்க...(அதுக்காக கொட்டுனவங்க கவலையானவங்கன்னு
அர்த்தமில்லை..அது ஜீன்) அப்புறம் நான் எண்ணெய் தேச்சே 15+ வருடங்கள்
ஆயிடுச்சு. ஏன்னா முடி எண்ணெயால் வளருவதில்லைங்கிறத எண்ணெய் வளமிக்க
வளைகுடா நாடுகளில் தெரிந்துகொண்டேன்.
உங்களுக்கென்ன
வெளிநாட்டில் இருக்கீங்க கவலையே இருக்காது அப்படீன்னு
நினைச்சீங்கன்னா....அது கிடையாது காரணம். எல்லாம் நம்மிடம் உள்ள சில நல்ல
கொள்கைகள் தாங்க காரணம். ஒரே வார்த்தையில் சொல்லவா....!!!
"அறம்" தாங்க காரணம்
அப்படின்னா?
ம்ம்..."தர்மம்" என்று சொல்லலாம்...
புரியலையே....
இதைச் செய்யனும்
இதைச் செய்யக்கூடாதுங்குற கொள்கை.
...ம்க்கும்...
சரி அப்படி வாழ்ந்தா என்ன இலாபம்?!
..இங்கதான் தத்துவம் இருக்கு...
"தர்மத்தின் பலனல்ல சந்தோசம்
தர்மமாய் வாழ்வதே சந்தோசம்"
-அவ்வளவுதாங்க வாழ்க்கை.
ஆம்....இப்படி இருந்தால் போதும் எப்போதும் கவலையில்லாமல் இளமையா இருக்கலாம். புரியுதா?....
(அங்க
யாருங்க கல்லைத் தூக்குறது..) நான்தான் அப்பவே சொன்னேனே....மனம்தான்
எல்லாமென்று. இன்னும் எத்தனைபேர் 70+லும் இளமையாக உள்ளார்கள் தெரியுமா?
உங்களைச் சுற்றிப்பாருங்கள் தெரியும்!!
செ. இராசா
மூச்சுவிட்டு மூச்சுவிட்டு
22/03/2022
குறளுரையாடல் --- ஈற்றெடுப்பு அந்தாதி -----மையக்கரு கவி
#குறளுரையாடல்
#ஈற்றெடுப்பு_அந்தாதி
#மையக்கரு_கவி
#ஒற்றைப்படை_இராசா
#இரட்டைப்படை_அசோகன்
#22_03_2022
கவிக்குக் கவியாய் கவிமழை பெய்யும்
கவிஞனுக்கு எல்லாம் கவி
(1)
கவிதை மனத்தைக் கவர்ந்தே இழுக்கும்
புவியில் தமிழே பொலிவு
(2)
பொலிவுடன் ஏற்றிப் புகழை அடையும்
வலிமையை என்றும் வணங்கு
(3)
வணங்குதல் என்றும் விளக்கின் சுடராம்
இணங்கித் தருமே இனிப்பு.
(4)
இனிப்புச் சுவைக்குள் இருக்கும் வகைபோல்
இனிதே கவியால் இயம்பு
(5)
இயம்பிடும் சொல்லினில் இன்தமிழ் வேண்டும்
சுயம்பெனச் சுற்றும் சுகம்.
(6)
சுகம்பல தந்திடும் சுத்தத் தமிழால்
சகத்தில் நிலைப்பீர் தனித்து
(7)
தனித்தே இருப்பின் தனித்துவ மில்லை
அணைப்பீர் உறவை அகத்து.
(
அகத்தில் பதிகின்ற அத்தனையும் பின்னால்
பகரும் கவிப்பொருள் பார்
(9)
பாரினில் யாவரும் பண்புடைத் தோழரே
யாரிதைச் சொல்வார் யுகம்.
(10)
யுகத்தில் கலியுகமாம் யோகிகள் சொல்வர்!
அகத்தில் கவியுகமாய் ஆற்று!
(11)
ஆற்றுக என்றும் அறச்செயல் நன்றெனப்
போற்றிடும் பொன்போல் புவி.
(12)
புவியுலகில் காண்கின்ற பொய்களை எல்லாம்
கவியுலகால் சீர்செய்து காட்டு
(13)
காட்டுக மண்ணில் கனிவுடன் அன்பினை
நீட்டும் புகழை நெகிழ்ந்து.
(14)
நெகிழ்ந்து கவிக்கையில் நீரெனப் பாய்ந்து
தகிக்கும் இதயம் தழுவு
(15)
தழுவிடும் பண்பினைத் தாரணி வாழ்த்தும்
முழவினைக் கொண்டு முழங்கு.
(16)
முழங்கும் பறைபோல் முழங்கிடும் சொல்லைப்
புழங்கும் முறையில் புகுத்து
(17)
புகுத்துவோம் என்றும் பொலிவாய் மனிதம்
வகுத்தோர் வழியினில் வாழ்.
(18)
வாழ்வே கவியென்று வாழ்கின்ற பேருக்கு
வாழ்க்கையில் எல்லாம் வரம்
(19)
வரமாய் உளத்தில் வசிக்கும் தமிழில்
கரப்போம் தினமும் கவி!
(20)
இருவரும் இணைந்து
வாழ்த்துப் பத்து