எந்தச் சான்றிதழையும் பட்டங்களையும் இதுவரையிலும் இங்கே நானாக பதிவிட்டது கிடையாது...
ஆனால்,
யாம் பெரிதும் போற்றும் வள்ளுவம் சார்ந்த உலகசாதனை நிகழ்வில் கலந்து
கொண்டதற்கானச் சான்றிதழ் என்பதாலும் வள்ளுவ நிகழ்வுகள் மேலும் மேலும் பரவ
வேண்டும் என்பதாலும் இங்கேப் பதிவிடுகின்றேன்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பதற்கான முயற்சியே இந்நிகழ்வு
என்பதையும் தெரிவித்துக் கொண்டு
எமக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கிய நிறுவனத்தாருக்கும் கவிஞர். முல்லை நாச்சியார் அக்கா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
அதிகாரம் எண் : 49
அதிகாரத்தின் பெயர்: காலமறிதல்
நேரிசை வெண்பாக்கள்
காலம் உணர்ந்து கடமை புரிவோர்க்கே
ஞாலம் எனச்சொன்ன ஞாலமறை- மூலமதைக்
காலம் தவறாமல் கற்றுணர்ந்த பேரென்றும்
ஞாலத்தில் நிற்பார்கள் நன்று!
(1)
விடியும்முன் காகத்தை வென்றிடும் ஆந்தை
விடிந்தபின் சண்டையெனில் வீழ்ந்து- மடிவதுபோல்
வெற்றிமேல் வெற்றியுடன் வீறுகொண்ட ஹிட்லரை
வெற்றாக்கி விட்டதோர் போர்!
(2)
பேசுகின்ற நேரத்தில் பேசாமல் பின்வந்துப்
பேசுகின்றப் பேச்சைப் பெரிதாகப்- பேசுபவர்
பேசுவதை எல்லோரும் பேசாமல் விட்டுவிட்டால்
பேசுவரோ பின்னென்றும் பேச்சு?!
(3)
செய்கின்ற நேரத்தில் செய்வதைச் செய்தால்தான்
செய்தபலன் அத்தனையும் செய்ததுபோல் - கொய்திடலாம்
செய்வோம் எனச்சொல்லிச் செய்யாமல் விட்டுவிட்டால்
தெய்வமா செய்யும் செயல்?
(4)
எல்லாம் இருந்தும் எதிரிமுன் பின்வாங்கி
நல்லதோர் நேரத்தில் நச்சென்று- வல்லமையில்
பாயும் கிடாபோல் பலத்தோடு பாய்ந்தால்தான்
மாயும் பகைவரின் வம்பு
(5)
தவம்செய்யும் ஞானிபோல் தன்னோக்கில் நின்று
கவனமாய்க் கொக்குபோல் கவ்விப்- புவனத்தில்
வந்ததன் நோக்கத்தை வாழ்கின்ற நாட்களுக்குள்
சிந்தையில் பற்றச் சிறப்பு
(6)
✍செ. இராசமாணிக்கம்
கத்தார்
No comments:
Post a Comment