23/03/2022

எப்போதும் இளமையாய் இருக்க என்ன செய்வது?

 


எப்போதும் இளமையாய் இருக்க என்ன செய்வது? இந்தக் கேள்விக்கான விடையாக இக்கட்டுரை இருந்தாலும் அனைவரும் வழக்கமாய்க்கூறும் உடல் சம்பந்தமான அல்லது உணவு சம்பந்தமான குறிப்புகள் இங்கே இடம்பெறாதென்பதை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்டப் பதிவே என்பதால் தொடர்பவர்கள் தொடரலாம்..... 😊💐💐💐 நன்றி!.

ஒரு மாணவன் அல்லது இளைஞனை அவன் சார்ந்த சூழல் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கினால் அவன் தோற்றம் எப்படி இருக்கும் என்பதற்கும், அச்சூழலில் இருந்து விடுபட்டால் அத்தோற்றம் எப்படி மாறுமென்பதற்கும் இங்கு நான் வேறு யாரையும் உதாரணமாக சொல்லப்போவதில்லை. அதன் சாட்சியாக என்னையே உங்கள்முன் வைக்கின்றேன்.

கல்லூரி படிக்கும் வரையிலுமே நான் இயல்பான இளமையாகத்தான் இருந்தாலும், அதற்குப்பின் ஏற்பட்ட சிலபல சம்பவங்களால் மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளாகி திருமணத்திற்கு முன்பே மிகவும் முதிர்ச்சியான உருவ அமைப்பைப் பெற்றிருந்தேன். அந்த உருவத்தைப் பார்த்தபின்னும் என்னைத் திருமணம் செய்துகொண்ட என் மனைவியாருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருகட்டத்தில், அந்தக் கவலைகள் எல்லாமும் உண்மையில் கவலையே இல்லை என்பதை முழுமையாக உணர்ந்து, அவற்றையெல்லாம் உதறித்தள்ளி, வாழ்க்கை ஒரு வாழும் கலை என்று வாழ ஆரம்பித்தபோதுதான் என் இளமை திரும்பியது என்றால் நம்புவீர்களா?....அட சத்தியங்க.

அப்படின்னா.... நீங்கள் கவலையே கொள்வதில்லையா என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. அதிலிருந்து எப்படி வெளிவரவேண்டுமெனத் தெரிந்துகொண்டால் அப்புறமென்ன கவலை என்றே சொல்ல வருகிறேன். அதுதான் எப்படி?.....நூல் வாசிப்பும் மனவளக்கலைப் பயிற்சியுமே முக்கியக் காரணம்.

இதுபோக, சில இரகசியங்களையும் சொல்கிறேன் கேளுங்கள். ஆடை விடயத்தில் நான் முடிவெடுப்பதே இல்லை. எல்லாமே என் மனைவியார்தான்‌. உண்மையில் நம்மை, நம்மைவிட இரசிப்பவர்கள், அவர்கள் தானே?! முன்பெல்லாம் Contrast என்றால் என்னவென்றே தெரியாது. பேண்டும் சட்டையும் ஒரே நிறம்தான் போடுவேன். அதுவும் அரக்கு நிறத்தில்😀😀. இதையெல்லாம் மாற்றியவர் அவரே... (கறுப்பானவர்கள் கறுப்பு போட்டால் எடுக்காதென்று நாமாக நினைத்துக்கொள்ளும் தவறான கருத்து) ஆக..நம் இளைமைக்கு மனைவியின் பங்கும் முக்கியம் (இது புதுசா இருக்கே....😀😀😀)

சரி...எதையோ சொல்லவந்து எங்கோ போயாச்சு!.. கவலை இல்லாமல் மனதை வைத்துக்கொண்டால் முடிகூட கொட்டாதுங்க...(அதுக்காக கொட்டுனவங்க கவலையானவங்கன்னு அர்த்தமில்லை..அது ஜீன்) அப்புறம் நான் எண்ணெய் தேச்சே 15+ வருடங்கள் ஆயிடுச்சு. ஏன்னா முடி எண்ணெயால் வளருவதில்லைங்கிறத எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளில் தெரிந்துகொண்டேன்😀😀😀.

உங்களுக்கென்ன வெளிநாட்டில் இருக்கீங்க கவலையே இருக்காது அப்படீன்னு நினைச்சீங்கன்னா....அது கிடையாது காரணம். எல்லாம் நம்மிடம் உள்ள சில நல்ல கொள்கைகள் தாங்க காரணம். ஒரே வார்த்தையில் சொல்லவா....!!!
"அறம்" தாங்க காரணம்
அப்படின்னா?
ம்ம்..."தர்மம்" என்று சொல்லலாம்...
புரியலையே....
இதைச் செய்யனும்
இதைச் செய்யக்கூடாதுங்குற கொள்கை.
...ம்க்கும்...
சரி அப்படி வாழ்ந்தா என்ன இலாபம்?!
..இங்கதான் தத்துவம் இருக்கு...

"தர்மத்தின் பலனல்ல சந்தோசம்
தர்மமாய் வாழ்வதே சந்தோசம்"
-அவ்வளவுதாங்க வாழ்க்கை.
ஆம்....இப்படி இருந்தால் போதும் எப்போதும் கவலையில்லாமல் இளமையா இருக்கலாம். புரியுதா?....
(அங்க யாருங்க கல்லைத் தூக்குறது..) நான்தான் அப்பவே சொன்னேனே....மனம்தான் எல்லாமென்று. இன்னும் எத்தனைபேர் 70+லும் இளமையாக உள்ளார்கள் தெரியுமா?

உங்களைச் சுற்றிப்பாருங்கள் தெரியும்!!

✍️செ. இராசா

No comments: