10/03/2022

குறளுரையாடல்---தோசையில் தொடங்கி தமிழ் ஆசையில் தொடுத்த அந்தாதி


 

#தோசையில்_தொடங்கி
#தமிழ்_ஆசையில்_தொடுத்த_அந்தாதி
#குறளுரையாடல்

#ஒற்றைப்படை_அடியேன்

#இரட்டைப்படை_ அசோகன் சுப்பிரமணியன் விராலிமலை ஐயா

(அந்தாதி- இறுதி வெண்பாவின் ஈற்றும் முதல் வெண்பாவின் எடுப்பும் ஒன்றாக வந்தால்தான் அது அந்தாதி. அந்தவகையில் ஆசை என்று முடிக்கவேண்டிய இறுதிக் குறளுக்கு கவிஞரய்யா எப்படி முடிப்பாரென்று மிகவும் யோசித்தேன். ஆசு என்று முடித்து அசத்தி தானோர் #ஆசுகவி என்று நிரூபித்துவிட்டார்.)

ஆசைக்கோர் எல்லையுண்டாம் ஆனாலும் நீங்காதே....
தோசைமேல் வைத்த அவா... 😀😀
(1)

அவாவுடன் நாவில் அமுதூறும் என்னில்
ரவாசுடும் தோசை ருசி.
(2)

ருசித்துப் புசித்த ரவாதோசை பற்றி
ரசிக்கப் படைத்தீர் விருந்து!
(3)

விருந்தை தினமும் விரும்பிப் படைப்பீர்
அருந்திச் சுவைப்பேன் அகம்.
(4)

அகம்குளிர நற்றமிழால் ஆற்றுகின்றீர் சேவை
சகம்புகழ வாழ்த்துவதே சால்பு
(5)

சால்புநிறை சந்தக்கவி சாற்றிடும் பாக்களும்
வாழ்தமிழ் தாங்கும் விழுது!
(6)

விழுதாய் இறங்கி விரிந்து பரவி
உழுவோம் தமிழால் உளம்
(7)

உளத்தினை நன்றாய் உழுதே விதைப்போம்
களத்தில் விளைச்சலைக் காண்.
(8.)

காண்பவர் கண்பொறுத்து காட்சிகள் தோன்றுவதால்
மாண்புடன் வைத்தால் மதிப்பு
(9)

மதிப்பும் புகழும் மலராய்ச் சொரியப்
பதிப்போம் நிலத்தில் பணிவு!
(10)

பணிவுடைமை கொண்டாலும் பாடுவதைப் பாட
துணிவுடைமை வேண்டும் தொடங்கு
(11)

தொடங்கும் செயலினைத் தேர்ந்து தெளிதல்
முடங்கிடும் தோல்வி முயல்!
(12)

முயற்சி உடையார்தான் முன்னோக்கிச் செல்வார்
அயர்ச்சி அடையாமல் ஆற்று
(13)

ஆற்றுவோம் என்றும் அரிய கொடையினைப்
போற்றுவார் நன்றாய்ப் புகழ்ந்து!
(14)

புகழ்ச்சியை எண்ணிப் புரிந்திட வேண்டாம்
தகுதியால் நிற்பாய் தனித்து
(15)

தனித்துவம் என்றும் தரணியில் மின்னும்
கணித்தால் தெரியும் கணக்கு!
(16)

கணக்கு வழக்கெல்லாம் காலத்திற் கில்லை
பிணக்கின்றி வாழப் பழகு
(17)

பழகுதற் குண்மையே பண்புடை நட்பாம்
அழகியல் ஆற்றும் அறம்!
(18)

அறம்பற்றிச் செல்கின்ற ஆன்றோரைக் கண்டால்
மறவாமல் வாழ்த்துவதே மாண்பு
(19)

மாண்பெனும் பேரிகை மண்ணில் முழக்கிட
தேன்தமிழ் தீட்டுவீர் ஆசு!
(20)

No comments: