09/03/2022

எழுதியவரைச் சார்ந்தே பார்க்கும் கோணம்

  


அனைவருக்கும் இனிய வணக்கம்!

இங்கே நாம் எதை எழுதினாலும், அதை எழுதியவரைச் சார்ந்தே பார்க்கும் கோணம் இருப்பது வருந்தத்தக்கது. உதாரணமாக நாம் பக்திப் பாடல் எழுதினால், அவர் ஆத்திகரோ என்றும், சித்தவழி ஞானப்பாடல் என்றால் நாத்திகரோ என்றும், அரசியல் எழுதினால் அக்கட்சியா இக்கட்சியா என்றும், சாதியப்பாடல் எழுதினால் அவர் இந்த சாதியோ அந்த மதமோ என்றெல்லாம் நினைப்பதோடு அல்லாமல் அதையே மற்றவர்களுக்கும் பரப்பி ஒரு மாயபிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள்.

உண்மையில் உண்மையான படைப்பாளி என்பவன் அப்படியல்ல. அவனும் இந்த சமூகத்தின் ஓர் அங்கமாய் இருப்பதால் யார் எறியும் கற்களும் அல்லது யார்மேல் எறியப்படும் கற்களும் அவனுக்கும் பங்குள்ளதாகவே உணர்கிறான். அதைத் தன் நம் சமூக்கடமை என்பதை உணர்ந்ததால்தான் அவனிடமும் அதுசார்ந்த படைப்புகள் பிறக்கின்றன என்பதை அனைவரும் உணரவேண்டும்.

நானும் கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் அங்கே நிலவும் சாதியக் கொடுமைகளைக் கண்கூடாகக் கண்டவன் என்பதாலும் இப்பதிவை மனம் திறந்து எழுகின்றேன்.

நான் சிறுவயதாக இருந்த போது, மாட்டுப்பொங்கலன்று நடந்த நிகழ்வு இது.
(இங்கே யார் யாரென்று நேரடியாகச் சொல்வதைத் தவிர்க்கிறேன்)

வருடா வருடம் மாட்டுப்பொங்கலன்று, ஒரு குறிப்பிட்ட சாதிய அமைப்பினர் மட்டும் அவர்கள் அனைவருடைய மாடுகளையும் ஒரு தொழுவத்தில் அடைத்து, சாமியாட்டம் ஆடி மாலையில் திறந்துவிடுவார்கள். மற்ற சில சாதியினர் அவரவர் வீடுகளில் பட்டியில் அடைத்து அவரவர் பங்காளிகளோடு சேர்ந்து சாமி கும்பிட்டு அவரவர் மாடுகளை கையில் பிடித்தபடியே ஊரைச்சுற்றி வருவார்கள் (திறந்துவிட மாட்டார்கள்).

இதில் ஊருக்கு வெளியே உள்ள குறிப்பிட்ட சாதியினரும் ஊருக்கு மையத்தில் உள்ளவர்களைப் போலவே, தனியாக தொழுவத்தில் அடைத்து மாலையில் மாட்டைத் திறந்துவிடுவார்கள். இவர்களும் சரி....அவர்களும் சரி...இருவர் பக்கமும் சாமியாடிகளும் உண்டு கட்டுப்பாடுகளும் உண்டு. அதாவது இந்த சாமி அந்தப் பக்கம்போய் ஆடாது. அந்த சாமி இந்தப்பக்கம்வந்து ஆடக்கூடாது (கவனிக்க). இருப்பினும், அந்நாள், இந்த வெளியே இருந்த சாமி ஊருக்குள் வந்தவுடன், உள்ளே இருந்த சாமியின் தடியைத் தொட்டுவிட்டது. அவ்வளவுதான்......அங்கே இருந்த ஒரு ஊர் பெரிய ஆளுக்கு வந்த கோபத்தைப் பார்க்கனுமே...அப்பப்பா.!!! .இரணகளமாக்கிவிட்டார். பயங்கரமாகக் கத்தி வெளியேற்றினார். அதைப்பார்த்த என் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் கொட்டியது. அப்போது எனக்கு பத்து அல்லது பன்னிரண்டு வயதிருக்கும். இதற்கான விளக்கத்தை யாரும் புரியும்படி சொல்லவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டேன்.

இதேபோல் பல இடங்களில் சாதியப் பாகுபாடுகளைப் பார்க்க வேண்டிய சூழல் அருகேயே இருந்தாலும், எங்கள் வீட்டைப் பொறுத்தவரை அப்படி இல்லவே இல்லை என்பதால் அதுபற்றிப் புரிய எமக்குக் கால தாமதமானது.

ஏன்...இவ்வளவு நாட்கள் கழித்தும் ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பாக, கத்தாரில் கூட எனக்கோர் அனுபவம் கிடைத்தது. இங்கே இருக்கும் ஒரு நபரின் உறவினர் அவர். ஊரிலிருந்து புதிதாக வந்திருந்தார். பொங்கல் விழாவான அன்று செந்தமிழ்ப்பாசறை என்னும் அமைப்பில் பறை வாசித்தார்கள். அதைக்கேட்ட மாத்திரத்தில் அந்தப்பையனுடைய முகக்கோணலைப் பார்க்கனுமே. உடனே அந்த இடத்தை விட்டே போகவேண்டும் என்றான். காரணம் இசைமட்டுமல்ல அவனின் வெறுப்புணர்வும்தான். இது அவன் ஒருவனுடைய மனநிலை அல்ல. இங்கே நம் ஒட்டுமொத்த சமூகத்தில் வாழும் பல பெரிய சிறிய மனிதர்களில் பெரும்பாலோனோர் மனநிலையும்தான்.

சரி... இதிலிருந்து எப்படி வெளிவருவது என்றால். உண்மையான கல்வியும் உண்யையான வளர்ச்சியும் மட்டுமே. இங்கே நான் உண்யை என்று கூறுவதன் அர்த்தம் புரிய வேண்டும். படித்தவர்கள் எல்லோரும் மாறிவிடுவார்கள் என்று சொல்ல மாட்டேன். காரணம் சாதீய உணர்வார்களில் பெரும்பாலானோர் மருத்துவர்கள், பொறியாளர்கள், முனைவர்கள் ஆகிய படித்தவர்களே. ஆக... தயவுகூர்ந்து படியுங்கள். அதற்கேற்ப நில்லுங்கள். (கற்க கசடற.......நிற்க அதற்குத் தக என்னும் வள்ளுவர் வாக்கிற்கணங்க)

தங்களின் கோபம் நியாயமானது தான்
ஆனால், மீண்டும் மீண்டும் சாதிய உணர்வாக்கி, அவர்களுக்குப் பதில் சொல்கிறேன் என்று நீங்களும் மாறி, புதிய புதிய இயக்கங்களாய், மதங்களாய்.... உருவாக்காதீர்கள். சமீபகாலமாக இந்தப்பக்கமும் நிறைய வெறித்தனமான ஆட்களைப் பார்க்க முடிகின்றது. அவர்கள் செய்யும் சேட்டைகளால் மீண்டும் எதிர் விளைவுகள் ஏற்படுகின்றது. இவையெல்லாம் நம் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான செய்கையென்றே நினைக்கிறேன். தயவுகூர்ந்து குறியீடுகளின் பின்னால் செல்லாதீர். அது ஆபத்தான அரசியல் விளைவாகும்.

அதே சமயத்தில், நன்றாக யோசித்துப் பாருங்கள். பறை என்ற இசைக்கருவிபற்றி சங்க இலக்கியம் முழுவதும் இருந்தாலும், அந்தக் கருவிக்கும் அதை இசைப்பவர்களுக்கும் அங்கீகாரம் இல்லை. தோல் கருவிகளான மற்ற கருவிகள் எங்கும்போகும்போது ஏன் இவை மழுங்கடிக்கப்பட்டது. நம் இசை, மொழி, கலாச்சாரம் எல்லாம்.... சாதியம், நவீனம், நாகரிகம் என்கின்ற பேரில் நசுங்க வேண்டுமா?!!... சொல்லுங்கள்!. எனில் இதை யார்தான் எந்த வெறுப்புமின்றி மீட்டெடுப்பது?!

நான் தயார்?......அப்ப நீங்க...

✍️செ. இராசா

No comments: