17/03/2022

அறிவிருக்கா?

 


 

 #அறிவிருக்கா?

காசிருக்கா? பணமிருக்கா? என்றால் வராத கோபம் அறிவிருக்கா என்றால் வருகிறதே....அந்த அறிவைப்பற்றிக் கொஞ்சம் அலசுவோமா?!!

இப்போதெல்லாம் நம் மூளை, யாரேனும் தமிழில் பேசினால்கூட ஆங்கிலத்தில் சிந்திப்பதைக் கவனித்தீர்களா?!.

இப்போது நான் "அறிவுத் திருக்கோவில்" என்று சொன்னவுடன், இதில் உள்ள அறிவு என்ற சொல்லை எப்படி நினைக்கின்றீர்கள்?! Knowledge என்றுதானே.... எனில் இதற்கான மொழிபெயர்ப்பு "Temple of knowledge" என்றுதானே வரவேண்டும். ஆனால்
"Temple of Consciousness" என்று அழைக்கின்றார்களே....அது சரியா?!

உண்மையில் consciousness என்பது உள்ளுணர்வு, பிரக்ஞை...என்கிற பொருளில் வரும் சொல்லாச்சே?! இதில் எங்கிருந்து இந்த அறிவு வந்தது? இந்த அறிவிற்காகவா வேதாத்திரி மகரிஷி கோவில் கட்டினார்??. இதுபற்றி இங்கே நாம் இன்னும் யோசிக்க வேண்டியுள்ளது.

"அறிவே தெய்வம்" என்று பாரதி பாடினாரே? இதில் உள்ள அறிவும் knowledge தானா? ஆனால் அதை Wisdom என்கிறார்களே. (ஆகா....)

உயிரினங்களை ஓரறிவு, ஈரறிவு, ...ஆறறிவு என்று புலன்களின் அடிப்படையில் வகைப்படுத்துகிறார்களே. ஆனால் அந்த அறிவை Sense என்கிறார்களே....(என்னய்யா இது??)

சரி....அப்புறம் பகுத்தறிவு என்று சொல்கிறோமே..அது என்ன? ஏற்புடையதான அறிவு என்கின்ற ரீதியில் வரும் Rational என்கின்ற பொருள்தானே.?! (பார்ரா....ஒரே கஷ்டமப்பா...)

சரி இப்போது வள்ளுவரிடம் வருவோம்....

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இக்குறளில் உள்ள அறிவு என்பது பகுத்தறிவு (Rational) என்று சொல்லலாமா?! ம்ம்.... அப்படித்தான் தெரிகிறது....ஆனால் அதே வள்ளுவரே...வெறும் இரண்டு சீர்களை மாற்றி மிகவும் அற்புதமாக ஒரு குறள் வழங்கியுள்ளார் கவனித்தீர்களா?.
இதோ......

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இப்போது சொல்லுங்கள், இந்த அறிவும் மேலே உள்ள அறிவும் ஒன்றுதானா?! அதுதான் இல்லை....இது பகுத்தறிவையும் தாண்டிய அறிவு?

அதுபற்றி அறிய நீங்கள் அக்குறளின் இரண்டு சீர்களை ஆராய வேண்டும் அது; "எத்தன்மைத் தாயினும்" என்னும் சீர்களே...

இதில் தன்மை என்று சொல்லானது Nature, இயல்பு, நிலை என்று பொருள்படுகிறது. உதாரணமாக பனிக்கட்டி, நீர், நீராவி....இது மூன்றும் தன்மையில் வேறுபட்டாலும் பொருள் ஒன்றுதானே... அதேபோல், நம்மை எடுத்துக்கொள்வோம்...நாம் நம் பெற்றோருக்கு மகனாய், மனைவிக்குக் கணவனாய், பிள்ளைகளுக்குத் தந்தையாய், அலுவலகத்தில் அதிகாரியாய், நண்பர்களுக்கு நண்பனாய் .... இப்படி வெவ்வேறு முகங்கள் இருந்தாலும் நபராய் ஒன்றுதானே.....இப்படி இந்த உலகத்தில் நாம் காணும் அனைத்துப்பொருட்களும் வெவ்வேறாய்த் தெரிந்தாலும் அணுக்களின் கூட்டு என்கின்ற அறிவியல் ஞானத்தில் பார்க்கும்போது அனைத்துமே அணு அணு அணு..... தானே. இவ்வளவுதாங்க....தன்மை என்ற சொல்லின் பொருள். இப்போது மீண்டும் அந்தக்குறளைப் படியுங்கள் உண்மை தெரியும். அதாவது பகுத்தறிவைத் தாண்டிய ஒர் பிடிபடாத உணர்வொன்று நம்மை ஆட்கொள்ளும். அதுதான் உண்மையை அறிந்த உணர்வு (மெய் ஞான உணர்வு) True wisdom consciousness. இப்போது பாருங்கள் அறிவு என்பது வெறும் knowledge அல்ல Consciousness என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது சொல்லுங்கள் அறிவிருக்கா?

No comments: