17/03/2022

பேச்சு பேச்சா இருக்கணும்

 



ஒரு தாய் அல்லது தந்தை தன் குழந்தையைப்பார்த்து, சனியனே....கொன்றுவேன் பார்த்துக்க? நீயெல்லாம் எங்கே உருப்படப் போற ....என்றெல்லாம் சொல்வது இப்போது அனைத்து தரப்பிலும் காண முடிகின்றது. இப்படியெல்லாம் பிள்ளைகளைச் சொல்லலாமா என்றால், உடனே நெருப்பென்றால் சுடவா போகிறது என்கின்ற வாதங்களை வைப்பார்கள் ....அட அட அடா....சரிபோல்தான் தோன்றும். ஆனால் அது உண்மையல்ல உறவுகளே....(குறள்: தீயினால் சுட்டபுண்...) ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அதிர்வுண்டு. அதனால் தான் வள்ளுவர் பேசுவதற்கே பல அதிகாரங்கள் படைத்தார். இன்று எங்கு பார்த்தாலும் எதிர்மறை உணர்வும், எதிர்மறைப்பேச்சும், எதிர்மறைச் செயலுமாய் நம் சமூகம் எங்கோ சென்றுகொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இதன் விதை விதைக்கப்படும் இடம் பெரும்பாலும் வீடாகத்தான் உள்ளதென்பதை எத்தனைபேர் ஒத்துக்கொள்வர் என்பதை அறியேன். 
 
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். தெலுங்கானாவில் அரசு நடத்தும் உணவகங்களில் மரியாதையாக உணவு கேட்போருக்கு உணவின் விலையில் தள்ளுபடி செய்வதாகப் போட்டிருந்தார்கள். அதாவது மரியாதை கூடக்கூட விலை குறைப்பாம். இதை அங்குள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவரும் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை அறியேன். ஆனால், தன் சமூகத்தை மாற்ற வேண்டுமெனில், ஒரு அதிகாரமிக்க தலைவன் நினைத்தால் மட்டுமே அது சாத்தியமென்பதை இப்பதிவின் மூலம் நான் உணர்கிறேன். இந்த சிந்தனைப்பொறி, சிலபேரையாவது மாற்றினால், அது பெரும் சீர்திருத்தம் தானே... 
 
இங்கேகூட சில பெரியவர்கள் உள்ளார்கள். எதிர்கருத்துக்கள் சொன்னால், எதிராளிகளை மட்டுமல்ல, அவர்களின் அம்மா, அப்பா, சாதி, மதமென்று அனைவரையும் வறுத்தெடுப்பார்கள். இது அவர்களை மட்டுமல்ல அவர்சூழ் சுற்றத்தையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறதென்பதை எத்தனைபேர் அறிவாரோ..ஆம் ....சொல், வெறும் ஒலியல்ல...அவை பொருளாகி உணர்வாகும் மந்திரங்கள் என்பதைப்புரிந்து, முடிந்தவரை இன்சொல் பேசுவோம் உறவுகளே....
 
நன்றி நன்றி!
 
செ. இராசமாணிக்கம்

No comments: