26/03/2022

கவிதை அல்லது பாடலுக்கு இலக்கணம் தேவையா?

 


கவிதை அல்லது பாடலுக்கு இலக்கணம் தேவையா எனக்கேட்போர் ஒருபக்கம் என்றால், மொத்தத்தில் இலக்கணம் தேவையா எனக்கேட்போரும் உள்ளார்கள்தானே. அவர்களுக்காகவே இப்பதிவு.

தமிழ் நாட்டில் தமிழ் தேவையா? என்னும் கேள்வியை எதிர்நோக்கும் தலைமுறைக்கு இலக்கணம் தேவையா? என்னும் கேள்வி பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லைதான்.
ஆமாம், முதலில் இலக்கணத்தின் தேவைதான் என்ன? நாங்கள்தான் இலக்கணம் இல்லாமலேயே பின்னிப் பெடலெடுக்கிறோமே. அட உங்களைவிட எங்களை அதிகமாகப் பாராட்டுகிறார்களே எங்களுக்கேன் இலக்கணம்? அதெல்லாம் சரி... முதலில் நீ...எல்லா இலக்கணமும் கற்றவனா? நீ ஏன் இதையெல்லாம் பேசுகிறாய் என்கின்ற ரீதியிலான கேள்விக்கு முதலில் விடை சொல்லிவிட்டுப் பின்னர் இக்கட்டுரையின் ஆரம்பக்கேள்விக்கு வருவோமா?!!

உண்மைதாங்க......நானும் இலக்கணத்தை ஓரளவு கற்றவனே‌. என் கவிதைப் பயணத்தை 2018ல் வெளிவந்த என் முதல் நூலாகிய "நான் எனும் மண்குடம்" என்கின்ற நூலிற்கு முன் பின் என்றே பிரிக்கலாம். அதுவரையிலும் இலக்கணம் பயிலாமலேயே ஆனால் இலக்கண வடிவத்தில் ஓசையைமட்டுமே வைத்தே எழுதிவந்தேன். என்னை எப்படியோ கவனித்த எம் குருநாதர் திரைப்படப் பாடலாசிரியர் சின்னக் கண்ணதாசர் என்று MSV அவர்களால் பட்டம் சூட்டப்பட்ட கவிஞர் திரு. விக்டர்தாஸ் அண்ணா அவர்களின் ஊக்குவிப்பும் அவர் எழுதிய அணிந்துரையும், நூல் விழா அன்று அவர் பேசிய அற்புத உரையும்தான் என்னை மாற்றியதென்றால் நம்புவீர்களா?!! ஆம். "தம்பி.. இலக்கணம் பயிலாமலேயே அற்புதமாக எழுதுகின்றார். அவர் மட்டும் இலக்கணம் பயின்றால், எங்கேயோப் போய்விடுவார்" என்றார்கள். நான் அந்த அளவு போய்விட்டேனா என்றால் அது தெரியாது. ஆனால் அந்த உரைதான் என்னை இதுவரையில் உந்தியது என்று எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்.

அதன்பின் கி.வா. ஜெகன்நாதன் அவர்களின் "கவிபாடலாம்" என்கின்ற நூல் பயின்றேன். வெண்பா இலக்கணம் முதல் விருத்தங்கள் பற்றியெல்லாம் கற்றுக்கொண்டு முகநூலில் எழுதியபோது, என்னை நெறிப்படுத்தியவர்கள் பாவலர் அணுராதா கட்டபொம்மன் மாமா அவர்களும், தம்பி ஆனந்தும்தான். அதுபோக ஹைக்கூ போன்ற மற்ற வடிவங்கள் பற்றிய இலக்கணமும் பயின்றேன். சரி சரி...சுயபுராணத்தை விட்டுவிட்டு கட்டுரையின் ஆரம்ப கேள்விக்கே வருவோம்

மோனை, எதுகை, முரண், இயைபு...இப்படி யாப்பிலக்கணம் கற்கும்போதுதான் பல பல சங்க இலக்கியக் கவிதைகளைச் சுவைபட ருசிக்க ரசிக்க முடிகிறது என்பதை அறிந்து கொண்டேன். அதுபோக, பாடலாசிரியாவோர் கற்றுக்கொண்டால் அசைகளை இடம்வலம் மாற்றும்போது எப்படி இசைப்பாடல் வருகிறது என்பதையும் உணர்ந்து கொண்டேன். தமிழை ஏன் இசைத்தமிழ் என்று அழைக்கிறார்கள் என்றால், வெறும் இரண்டே இசைகளை கணிதத்தில் வரும் நிகழ்தகவு (probability)போல் மாற்றி மாற்றி அமைக்கும்போது ஒவ்வொரு கட்டமைப்பும் ஒவ்வொரு ஓசை நயமாய் மாறுவதைக் கண்டு பிரம்மித்தேன்.

இன்னொரு அதிசயம் பாருங்கள். அந்தக் கால இலக்கியங்கள் முதல் இந்தக் கால தினசரிகள் வரை அனைத்தையும் ஒரு மென்பொருளில் போட்டால் வல்லின எழுத்துக்கள் மிகையாகவும் மெல்லின எழுத்துக்கள் குறைவாகவும் இடையின எழுத்துக்கள் நடுவிலும் பயன்படுத்துகிறதாய் ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. பேச்சுத் தமிழிலும் அப்படித்தானாம். இவையெல்லாம் ஆச்சரியமில்லையா?!! வல்லின எதுகை வைத்து எழுதிய ஒரு பாடலைக் கவனியுங்கள்...எ.கா; வெற்றிக்கொடி கட்டு பகைவரை.....ஒரு வேகம் வரும். அதுவே மெல்லின எதுகை வைத்தெழுதிய பாடலைக் கவனியுங்கள் எ.கா: அன்பே அன்பே கொல்லாதே....ஒரு மென்மை இருக்கும். ஆக இதையெல்லாம் அறிந்துகொண்டால் பயன் தருமா இல்லையா?! நீங்களே சொல்லுங்கள்.

சரி...ஆனால் இலக்கணங்கள் கையைக் கட்டுகிறதே...என்று சொல்கிறீர்களா?!. ஆனால் அங்கேயும் தளர்வுகள் உள்ளனவே... கவனித்தீர்களா?! உதாரணமாக...கட்டம் என்று வரும் சொல்லுக்கு எதுகை பட்டம் தான் போடவேண்டும் என்றில்லையே.....கருத்து வேண்டும் பட்சத்தில் சத்தம் என்ற சொல்லும் பயன்படுத்தலாமே.... அதாவது எதுகையின் வகைகளை அறிந்துகொண்டால் மற்ற வகை எதுகைகளையும் பயன்படுத்தலாமே. இப்படி நிறைய தளர்வுகள் உள்ளனவே...

ஒன்றே ஒன்று சொல்கின்றேன். புதுக்கவிதை, நவீனக்கவிதை, ஹைக்கூ....இவற்றிற்கெல்லாம்
மரபுக்கவிதை எழுதுவோர் எதிரியல்ல. என்னைக் கேட்டால் கவிதை என்றால் கவிதையே....இதில் வடிவங்கள் என்பது கவிதைக்குமேல் உள்ள ஆடைகளே... அவரவர் பார்வையில் ஆடைகள் அழகாகின்றன. மேலும் ஒவ்வொரு வடிவங்களுக்கும் ஏதோ ஓர் இலக்கணம் அல்லது விதி உள்ளதுதானே....?!! படிமம் என்கிற பெயரில் புரியாமல் செய்யும் புனைவுகள் எல்லாக் காலத்திற்கும் நிலைக்குமா என்பதையும் சுயபரிசோதனை செய்தால் கவிதைக்கு இலக்கணம் தேவையா என்பதற்கானப் பதிலை நாம் கண்டறியலாம். ஆக.... இலக்கணம் படியுங்கள்...எப்போது வேண்டுமோ அப்போது அதே இலக்கணத்தை உடையுங்கள் அல்லது மீறுங்கள். ஆனால் ஒரேயடியாக தூக்கி எறிந்துவிடாதீர்கள்... காரணம் இலக்கணம் என்பது ஒரு ஒழுங்கு. சமூகம், மொழி ....என எதிலுமே ஒழுங்கு தவறினால் என்னாகும் என்பதை நான் சொல்லித்தான் புரிய வேண்டுமா என்ன?! நீங்களே யோசியுங்கள்...!!!

நன்றி நன்றி!!!

No comments: