07/07/2018

வெண்ணிலா நீ!--களஞ்சியம் கவிதைப் போட்டியில் பங்குபெற்ற கவிதை



நீலவானில் உலவுகின்ற
நிலவினைப்போல்- எந்தன்
நினைவு வானில் சுற்றுகின்ற வெண்ணிலா நீ!

அண்டத்திலே மின்னுகின்ற
மீன்களைப்போல்-உயிர்ப்
பிண்டத்திலே ஒளிர்கின்ற உள்ளொளி நீ!

மேகத்திலே தோன்றுகின்ற
மின்னலைப்போல்- தமிழ்
மோகத்திலே வெடிக்கின்ற காவியம் நீ!

புவியுலகை இயக்குகின்ற
சூரியன்போல்- தமிழ்க்
கவியுலகை ஆளுகின்ற கம்பனும் நீ!

ஈரடியில் உலகளந்த
இறைவனைப்போல்- எழில்
ஈரடியில் குறள்படைத்தப் புலவனும் நீ!

சிறகடித்து உயருகின்ற
பறவையைப்போல்- சிந்தைச்
சிறகாலே விண்ணுயர்ந்த பாரதி நீ!

தட்டிதட்டிச் செதுக்குகின்ற
சிற்பியைப்போல்- தமிழ்
பட்டறையில் படைப்போரின் நற்றமிழ் நீ

பொறுமை


போற்றிய பலரை மனதில் நினைத்து
தூற்றிய சிலரை மறந்திடுவாய்- நீ
ஆற்றிடும் கடமையை மனதில் நினைத்து
தூற்றிடும் சொற்களைப் பொறுத்திடுவாய்

புகழ்ச்சி வார்த்தையை ஏற்றது பொலவே
இகழ்ச்சி வார்த்தையும் ஏற்றிடுவாய்-மனம்
மகிழ்ச்சி நிலையில் நின்றிட வேண்டின்
நெகிழ்ச்சித் தன்மையும் கற்றிடுவாய்!

06/07/2018

சென்று வா மகளே


சென்று வா மகளே..சென்று வா...
அன்பால் வென்று வா.. மகளே வென்று வா..

தாய்தந்தை உறவெல்லாம் கண்டு வா- நீயும்
தாயோடு மகிழ்வாகச் சென்று வா....

ஆட்டோடு அன்பாகப் பேசி வா- நீயும்
மாட்டுக்கும் புல்கொஞ்சம் போட்டு வா..

கருப்பனின் வாலினைத் தடவி வா- அவன்
குரைத்தால் அவனோடு கொஞ்சி வா..

தமிழைச் சரியாக கற்று வா- நீயும்
தந்தைக்கும் தமிழமுது கொண்டு வா....

05/07/2018

பிறந்த நாள் வாழ்த்துகள்: இம்ரான் கான்


இதயத்தில் இருக்கின்ற உறவுகளில்
இளவளாய்த் துடிக்கின்ற இம்ரானே...
இயற்கைக் களஞ்சியமாம் புதுவயலில்
இரண்டாம் இரணியனாய் இருப்பவனே..

கட்டிடத்தின் தொழில்நுட்பம் கற்றாலும்
கம்பிவடத் தொழிலும்கற்ற வித்தகனே
பட்டிதொட்டி எங்கெங்கு சென்றாலும்
பண்பாட்டைத் தொழைக்காத நல்லவனே

அகவையில் ஒன்றுகூடும் இந்நாளில்
அகமதில் மகிழ்வோடு வாழ்த்துகின்றேன்
சகமதில் பிறப்பெடுத்த இந்நாளில்- நபி
முகமதின் வழிநடக்க வாழ்த்துகிறேன்

வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்

தம்பியுடன் உள்ள ஒரு காணொளி

https://youtu.be/UhK6oKA5phU

✍️செ. இராசா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

04/07/2018

தமிழரின் அடையாளம்




தமிழரின் அடையாளம்
தலைநிமிர்ந்து நிற்கிறது
தஞ்சைப் பெரியகோவில்

வண்ணப் பூவே....வாசம் வீசு....

🎼🎤🎼🎤🎸🎺🎼🎧🎻🎼🎧🎼

வண்ணப் பூவே....வாசம் வீசு....
எண்ணப் பூவே.....காதல் பேசு

உந்தன் பூவிழிப் பார்வையில்
தோன்றிடும் ராகங்கள் நூ...று
உன்னைப் பாடிடும் வேளையில்
தோன்றிடும் இன்பங்கள் நூ...று

வண்ணப் பூவே....வாசம் வீசு....
எண்ணப் பூவே.....காதல் பேசு

தேடி வரும் வேளையில்
ஓடி விடும் காதலா...
நாடி வந்த என்னிடம்
மாட்டிக்கொண்டாய் மன்மதா...

கோடி நூறு ஆசையில்
பாடி வந்த பைங்கிளி
கட்டிக்கொண்ட உன்னிடம்
கட்டுப்பட்டேன் நானடி

வண்ணப் பூவே....வாசம் வீசு....
எண்ணப் பூவே.....காதல் பேசு...

🎶🎻🎺🎻🎤🎺🕺💃💥🎸🎼🎼

சிறுவர் பாடல்- தமிழ் பாப்பா


பாப்பா பாப்பா தமிழ் பாப்பா
பாடம் படிக்கும் தமிழ் பாப்பா
பிறமொழி படிப்பது சரி பாப்பா
பிறந்தமொழி விடுவது சரியாப்பா?

ஆங்கிலம் என்பதோர் மொழி பாப்பா
அதைநாம் கற்றிடல் நலம் பாப்பா
ஆயினும் தாய்மொழி தமிழ்தான்பா
அதைநாம் விடுவது சரியாப்பா?

அறம்பற்றி சொல்வது குறள் பாப்பா
அறிந்தால் உயருமுன் குரல் பாப்பா
ஔதாரியம் நிறைந்தது தமிழ் பாப்பா
ஔவையை விடுவது சரியாப்பா?

தூக்கணாங் குருவிகளே..



சொந்தமானக் காதலிக்கு
சொந்தவீடு கட்டித்தந்து
தூளியிலே ஆடுகின்ற
தூக்கணாங் குருவிகளே...

புல்லாலும் இலையாலும்
மெல்லமெல்லக் கூடுகட்டி
அன்பானக் காதலிக்கு
அர்ப்பணிக்கும் காதலரே..

அலகில் பொருள் சுமந்து
அழகாய் நெசவு செய்து
குட்டிக்குட்டி வீடுகட்டும்
கட்டிடக் கலைஞர்களே...

காற்றிலும் மழையிலும்
வேற்றினப் பகைவரிலும்
இடர்தாங்கிக் குடிலமைக்கும்
இயற்கை ஆர்வலர்களே..

மின்மினிப் பிடித்து வந்து
மின்விளக்கு செய்து வைத்து
தன்குடில் இருள்நீக்கும்
மின்னியல் பொறியாளர்களே..

பதினெட்டு நாட்களுக்குள்
கச்சிதமாய்ப் பணி முடிக்க
திட்டமிட்டு வேலை செய்யும்
திட்டவியல் வல்லுனர்களே...

புல்லையும் ஆயுதமாய்
வல்லவர்கள் கொள்வதுபோல்
புல்லாலே கோட்டைகட்டும்
புள்ளினம் நீங்களன்றோ?!

02/07/2018

முகநூலும் முழுவாழ்க்கையும் ஒப்பீடு


முழு வாழ்க்கை மாயையினை
முகநூலில் கண்டிடலாம்..
அகவாழ்க்கை புறவாழ்க்கை
அனைத்தையுமே கற்றிடலாம்...

அனைவருக்கும் தனியான
அடையாளம் இங்குண்டு...
அசலுக்கும் நகலுக்கும்
அரங்கேற்ற இடமுண்டு

அடியெடுத்து வைத்தவுடன்
அறிந்தவரே பழகிடுவர்..
அடுத்தடுத்து மற்றவரும்
அறிய அறிய இணைந்திடுவர்

இவரென் நண்பரென்று
இறுமாப்பு கொண்டிருந்தால்
பத்தோடு பதினொன்றாய்
அத்தோடு நமை வைப்பர்

இவருமா நண்பரென்று
இதழோரம் புன்னகைத்தால்
அன்பாலே பலநேரம்
ஆச்சரியம் தந்திடுவர்...

பெண்ணியம் பேசிக்கொண்டே
கன்னியையும் வர்ணிப்பர்..
சமயத்தை சாடிக்கொண்டே
சமயம்பாத்து கழுத்தறுப்பர்...

அறிவுரையும் தத்துவமும்
அள்ளி அள்ளி வீசிடுவர்...
அறிவாளி பட்டமெல்லாம்
அவருக்கே சூட்டிடுவர்...

அரசியல் நிகழ்வுகளில்
அனைவரும் கொந்தளிப்பர்...
அடுத்தடுத்த நிகழ்வுகளில்
அனைத்தையும் மறந்திடுவர்...

ஒத்த கருத்துடையோர்
ஒன்றாக இணைந்திடுவர்..
வேற்று கருத்தென்றால்
வேறு குழு சென்றிடுவர்...

விருதுகள் விற்குமிடம்
விருப்போடு சென்றிடுவர்..
விற்பனை தீருமெனில்
வெறுப்போடு விலகிடுவர்..

மழையே பொழிந்தாலும்
மறைவாக சிலரிருப்பர்...
இடியே இடித்தாலும்
இமைமூடி சிரித்திடுவர்..

அடுத்தவர் வளர்ச்சியினை
அமைதியாகப் பார்த்திடுவர்..
சிறிதளவு தானுயர்ந்தால்
சுய புராணம் பாடிடுவர்..

பிறப்புக்கு வாழ்த்து சொல்லி
இறப்புக்கு இரங்கல் சொல்லி
இரண்டையும் கடந்து செல்லும்
இவ்வுலகம் மாயமன்றோ?

01/07/2018

நண்பா....(கற்பனையே)



நண்பா நண்பா என் நண்பா- நீ
நண்பனை வதைத்தது ஏன் நண்பா?

உடையதை விளம்பிடும் என்னிடமே- நீ
உண்மையை மறைத்தது ஏன் நண்பா!

உரிமையாய்ப் பழகிடும் என்னிடமே- நீ
உள்ளதை ஒளித்தது ஏன் நண்பா?

அப்படி இப்படி இருந்தாலும்- நீ
எப்படி ஒதுக்குவாய் சொல் நண்பா

தப்பும் தவறும் புரிந்தாலும்- உனை
எப்பவும் நினைப்பேன் போ......நண்பா

✍️செ. இராசா