இராசமாணிக்கம் மனிதர் தரப்பிலிருந்தும் அகரம் அமுதன் கொரோனா தரப்பிலிருந்தும் நிகழ்த்திய வாத வெண்பாக்கள்....
இராசமாணிக்கம்:
வாழ்த்தெல்லாம் கூறி 
........வரவேற்ற எங்கள்மேல் 
காழ்ப்புணர்ச்சி கொண்டாக் 
.......கடுப்பேற்றிச் - சூழ்கின்றாய்
புத்தாண்டு வந்தாக்க 
......போவேன்னு பார்த்தாக்க
வெத்தாத் திரிவதேன் வென்று! 
(1)
வென்று- வட்டார வழக்கில் வெண்ணெய்
அகரன் அமுதன்:
வென்றுன்னா திட்ற?
   வெறும்பய(ல்)ன்னா குட்ற? நான்
நின்றுவிளை யாடறத
   நீபாரேன்; - இன்றுமுதல்
ஒங்கயெல் லாரையும்
   உண்டில்ல என்றாக்கித்
திங்கத்தான் போறேன்
   செதச்சு!
(2)
இராசமாணிக்கம்:
சிதைச்சிரு வாராம்ல*....
.......செஞ்சிடுவோம் வச்சுச்
சிதைக்கிறது யாருன்னு 
.......செத்த** - இதைக்கேளு
மூன்றாம் அலையில்
.......முடிச்சிடுவோம் உன்கொட்டம்
நான்காம் அலையில்லை நம்பு!
(3)
வாராம்ல- மதுரை வழக்கு
செத்த- சற்றே
அகரம் அமுதன்;
பாடாப் படுத்தட்டா?
   பாடம் நடத்தட்டா?
கோதாவில் நானிறங்கிக் 
   குத்தட்டா? - வாடா!வா!
நாலாம் அலையில்ல
   நானூறும் நான்வருவேன்
'காலா'நான் ஆகிவிட்டேன்
   காண்டு!
(4)
இராசமாணிக்கம்:
சும்மா இருக்காம 
.......சுத்தித் திரிஞ்சீன்னா
கம்முன்னு தூங்கவொன்னும்
......கைலாஷா- அம்பியில்லை
ஃபாரின் பறந்தாலும்
........பட்டிதொட்டி போனாலும்
நேரில் சுளுக்கெடுப்போம் நில்லு!
(5)
அகரம் அமுதன்;
பூஸ்ட்டெல்லாம் போட்டதார்?
   பொந்துள் ஒளிந்ததார்?
மாஸ்க்கெல்லாம் மாட்னதார்
   மாணிக்கா! - ஈஸ்ட்டுவெஸ்ட்டு
நார்த்து சவுத்தெல்லாம்
   நான்தானே ஆள்கிறேன்
பார்த்துப் படுத்துறேன்
   பாடு!
(6)
இராசமாணிக்கம்:
எத்தனை பேரோட 
........எப்படிநீ வந்தாலும்
அத்தனை பூஸ்டரா
........அங்கங்கே- வித்திடுவோம்
உன்னைப் படைச்சதே 
.......உங்கப்பன் நான்தானே
என்ன பெருசா இளிப்பு?!
(7)
அகரம் அமுதன்;
மாஸ்க்கநீ மாட்டிக்கோ;
   வீட்டநீ பூட்டிக்கோ;
டாஸ்க்குநீ வெக்காத
   தாவிக்கோ; - கோஸ்ட்டுநான்
கொன்றுவேன் பாத்துக்கோ
   குச்சிஐஸ் போலெலும்ப
மென்றுவேன் பாத்துக்கோ
   மேன்!
(8.)
இராசமாணிக்கம்;
சானிடைசர் போட்டுன்னை
....சாகடிச்சுப் பார்த்தாலும்
தீனிதிங்கும் பேய்போல
...திங்கவந்தாய்- மேனியை
ஊருவிட்(டு) ஊருபோயி 
....ஊறுசெய்யும் உன்னைய
யாருவந்து கொல்லுவரோ இங்கு?!
(9)
அகரம் அமுதன்;
இப்ப உணர்வெழுதா?
   எம்மேல் பயமெழுதா?
தப்புநீங்க செய்ய நேக்கு
   தண்டனையா; - கப்சிப்னு
லாக்டவுனில் பிந்திருந்தா
   வால்சுருட்டிக் குந்திருந்தா
சோக்காநான் காட்டுவேனா
   சூர்!
(10)
இராசமாணிக்கம்;
கண்ணில் தெரியாக் 
......கடவுள்போல் நீயிருந்து
வண்ணங்கள் பாராமல் 
.....வந்தவுன்னை- எண்ணுகையில்
நன்றாய்ப் புரிகிறது 
......நாடிவந்த காரணங்கள்
இன்னலில் தானே இறை!
(11)
அகரம் அமுதன்;
மாஸ்க்கை இறைவனுக்கும்
   மாட்டிவிட்டீர்; நீங்களெல்லாம்
பூஸ்டை எடுத்தெடுத்துப்
   போட்டுவிட்டீர்; - வேஸ்டினிமேல்
இங்கேயே நானிருந்தால்
   என்வயிறு தான்காயும்
எங்கேணும் போறேன்
    எழுந்து!
(12)
 இராசமாணிக்கம்!
போய்வாரும் சாமி 
......பொழப்பெல்லாம் போயிடுச்சு
நாய்போல வாழ்விப்போ 
.....நாராசம்*- ஆய்டுச்சு
பூஸ்டரே போட்டாலும் 
.....போகநீ மாட்டாயோ
காஸ்ட்லிக் கிருமியே கோ(Go)
(13)
நாராசம்- சென்னை வழக்கு- கெட்டு
அகரம் அமுதன்:
போசொன்னால் போவேனா?
   பூஸ்ட்டர்க்கே சாவேனா?
நீசொல்லி நான்இங்கே
   நிற்பேனா? - யார்சொல்லும்
ஏறேதே என்செவியில்;
   வாராதே என்வழியில்;
மீறாதே எல்லை;
   விலகு!
(14)
இராசமாணிக்கம்:
ஆக்கிய எம்மால் 
.........அழிக்கத் தெரியாதா?!
பாக்கியே இல்லாமல் 
........பக்காவாய்த்- தூக்கட்டா
கொஞ்சநாள் போனபின் 
........கொன்றுலாம்னு பார்த்தாக்க
அஞ்சாமல் போற அடங்கு!
(15)
அகரம் அமுதன்;
தூணிலும் நானே
   துரும்பிலும் நானே நீ(ர்)
வீணிலும் வீணே
   விழுங்குகிறேன்; - மானிடர்
தேவையில்லா ஆணி
   செருப்பொட் டியசாணி;
பூவைப்பாழ் செய்த
   புழு!
பூ - உலகம்.
(16)
 இராசமாணிக்கம்;
புழுசாணி என்றாப் 
........புறம்பேசு கின்றாய்
அழுக்கான உம்மை 
........அழிக்க- எழுந்தோம்
இழுக்காக எண்ணி 
......இனியாட வேண்டாம்
முழுமையாய் வைப்போம் முடிவு!
(17)
அகரம் அமுதன்;
கேக்கல; கொஞ்சம்நீ
   கிட்டக்க வந்துபேசு
பாக்கலாம்; என்ன?
   பயம்வருதா? - தீக்க என்னைத்
தேடவெல்லாம் வேணாம்;
   தெருமுனைக்கு வாதம்பி
ஓட விடுறேன்
   உனை!
(18)
இராசமாணிக்கம்:
ஒசாமா நிலையென்ன 
..........ஓரமா யோசி
நிசாமா* நினைச்சாக்க 
.........நில்நீ- அசால்டா
தெரியுமா யாருனு?!
.......தீர்த்திடுவோம் போபோ
சரியா வரலைன்னா சாவு!
(19)
நிசாம்- நிஜாம் (பெரிய ஆளா)
அகரம் அமுதன்:
நானே பெருநோயி
   நானூறு கால்பேயி
பேனேபோல் என்னைப்
   பெயர்ப்பாயா? - சீனேநீ
போடாமல் வீட்டுக்குள்
   பொட்டிப்பாம் பானீன்னா
ஏடா!நான் காண்பேன்
   இறப்பு!
(20)
இராசமாணிக்கம்:
டீலொன்று போட்டுத்தான்
....டீட்டெய்லாப் பேசினோம்!
காலன்நீ; காப்போன்நான்;
....கைகுலுக்கிப்- பாலமிட்டோம்!
பாரம் குறைந்தபின்னும்
....பாரிலென்ன வேலையினி?!
ஓரம் ஒதுங்கில்லை ஓடு!
(21)
அகரம் அமுதன்:
பூமி சுத்தம் ஆனபின்பே
   போவேன்; அதுவரைக்கும்
சாமி மீது ஆணையும்மைச்
   சாகடிப்பேன்; - தீ மிதிச்சித்
தேரிழுத்தா மாய்வேனா?
   தெண்டனிட்டா ஓய்வேனா?
ஃபாரினும்என் முன்வாங்கும்
   பல்பு!
(22)
இராசமாணிக்கம்;
பூச்சாண்டி காட்டாமல் 
......போய்விடுநீ சீக்கிரமா!
மூச்சுமுட்டி மூச்சுமுட்டி 
......மூக்கெல்லாம்- காச்சிடுச்(சு)
ஏற்கனவே போர்பூசல்
.......ஏராளம் இங்கிருக்க
சீற்றமுற வேண்டாம் சினந்து!
(23)
அகரம் அமுதன்:
கொஞ்சநாள் இங்கிருந்து
   கொன்னுட்டுப் போயிடுறேன்
கெஞ்சிநீ கேட்டா
   கிளம்பிடுறேன் - அஞ்சாம
ஆட்டம்நீ போட்டீன்னா
   ஆப்புவெக்கப் பாத்தீன்னா
மாட்டேன்நான் போக
   மறுத்து!
(24)
இராசமாணிக்கம்:
காரியமா?..வீரியமா?!
.... கண்மூடி யோசிச்சா
காரியம்தான் நிற்கிறது 
....கண்முன்னே- சாரி*யம்மா 
போய்வான்னு சொன்னாக்க 
.....போனதுபோல் வந்திடுவ 
போய்த்தொலைன்னு வாழ்த்துகிறேன் போ!
(25)
*Sorry
செ. இராசமாணிக்கம்
No comments:
Post a Comment