#நான்_இரசித்த_கவிதை_2
ஒரு
நல்ல எழுத்து வாசிப்பவனை ஏதோவொன்று செய்ய வேண்டுமென்று ஜெயகாந்தன் அவர்கள்
சொல்வார்கள். அப்படித்தான் எல்லா எழுத்துக்களும் உள்ளதா என்றால்
இல்லையென்றுதான் சொல்வேன். இருந்தாலும் நாமெல்லாம் எழுதுவதை நிறுத்தி
விடலாமா என்றால் கூடாதுதான். காரணம் எழுதுபவருக்கும் எழுதாதவருக்குமுள்ள
வித்தியாசமென்பது வாழ்வின் தான் இரசித்தவற்றையெல்லாம் பிறர் ருசிக்கத்
தந்து ஆவணப்படுத்தும் ஓர் அழகிய கலையாக எழுத்து உள்ளதால்தான்.
ஆக....எழுதுவோம்.
ஒரு பத்து நாட்களுக்கு முன்பாக யாரோ ஒருவர் ஒரு
இதழில் தன் கவிதை வந்ததாகப் பதிவு செய்திருந்தார். அதில் அவர் கவிதையோடு
சேர்த்து மற்ற கவிதைகளும் இருந்தது. அதில் யாரோ ஒருவர் எழுதிய அந்த
ஒற்றைக்கவிதை மட்டும் என்னை ஒரு உலுக்கு உலுக்கியதென்றே சொல்லலாம்.
#அந்தக்கவிதை இதோ;
சீதை தீக்குளித்ததில்
நிரூபணமாகிவிட்டது
இராவணனின் கற்பு
வார்த்தைகள்
வேண்டுமானால் சற்று முன்னே பின்னே மாறி இருக்கலாம். ஆனால், கருத்து இதுவே.
இதை எழுதியவர் பெயரும் தெரியாத என் ஞாபக மறதிக்காக எம்மைத் தயவுகூர்ந்து
மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால் அவரின் கவிதை வரிகள் என்னை இன்னும் ஏதோ
செய்து கொண்டுதானிருக்கிறது
காரணம், இந்தமாதிரி இதுவரையிலும் இவ்வளவு சுருக்கமாக அந்த நிகழ்வை யாரும் சொன்னதே இல்லை என்பேன்.
இராமாயணத்தில்
மிக மிகக் கேவலமான ஒரு நிகழ்வாக நான் கருதுவது வாலி வதம்கூட அல்ல. தன்
மனைவியான சீதையை இராமன் தீக்குளிக்கச்சொல்லி அவள் கற்பை நிரூபிக்கச்
சொல்லும் இந்நிகழ்வு தான். (மீண்டும் ஒருமுறை அயோத்தியில் நடக்கும்
அந்நிகழ்வு நல்லவேளை கம்ப இராமாயணத்தில் இல்லை) இதற்கு என்ன சப்பைக்கட்டு
கட்டினாலும் இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வே. அதை இக்கவிதையில்
வைத்த அந்தக் கவிஞர் இராவணனைச் சொன்னது அழகிய முரண் மட்டுமல்ல. அவருக்கும்
அந்நிகழ்வின் மீதான கோபமென்றே நினைக்கிறேன்.
ஒரு பெண்ணை சந்தேகப்படும் கணவன் யாருக்காக தன் கற்பைநிரூபிக்க வேண்டும் சொல்லுங்கள்.
"சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை" என்ற
வள்ளுவரின்
வரிகள் இராமனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லைபோலும். ஒருவேளை சீதையை
இராவணன் வல்லுறவு கொண்டிருந்தால் இராமன் கொன்றுவிடுவாரா?. இந்த மன எண்ணம்
வந்த இராமனை விட அவனை மீண்டும் மன்னித்து ஏற்ற சீதைதான் இங்கே உயர்ந்தவள்
என்பேன்.
கூடுதல் செய்தியொன்று; ராமாகீன் என்னும் தாய்லாந்து
இராமாயணம் ஒன்றில் இந்த இராமன் அயோத்தி போனபிறகும் சந்தேகப்படுகிறார்.
சீதையைக் காட்டில் கொண்டுபோய் கொன்று போட்டு அவள் இதயத்தைக்
கொண்டுவரச்சொல்கிறார். இலட்சமணன் மனது கேட்காமல் ஒரு மானின் இதயத்தைக்
கொண்டு வருகிறார். இப்போது சொல்லுங்கள் காவியமே ஆனாலும் கடவுளே ஆனாலும்
தவறென்றால் தவறுதானே?
இப்போது மீண்டும் அந்தக் கவிதை வரிகளைப் படியுங்கள். இராவணனின் உயரமும் அந்தக் கவிதையின் உயரமும் சற்றே உயர்ந்துள்ளதா?!
இதுவே எழுத்தின் வலிமை!
நன்றி!
செ. இராசா
24/01/2022
நான் இரசித்த கவிதை 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment