17/01/2022

சபையறிந்து பேசு -------- வள்ளுவர் திங்கள் 194 (கவிதை-1)

 

மாயசபைக் காணவந்த
மைத்துனன் துரியோதனன்
காலிடறி வீழ்ந்தகணம்
கைபொத்திப் பார்த்திருந்தால்
திரௌபதியின் வாழ்க்கைக்குள்
தீவந்தாச் சுட்டிருக்கும்?!
 
கௌரவ சபை கொணர்ந்த
கன்னியைக் கண்டவுடன்
விகர்ணன் வெகுண்டகணம்
கர்ணனும் சேர்ந்திருந்தால்
பாஞ்சாலி உடை களையும்
பாவங்களா நேர்ந்திருக்கும்?
 
இராவணனின் அவைதன்னில்
விபீஷணன் துரோகியெனில்
இராமனின் அவையில்
விபீஷணன் தியாகியன்றோ?!
 
எதிர்க்கட்சி ஆனவரை
எல்லாமும் அதர்மமெனில்
ஆளுங்கட்சி ஆனபின்னே
அத்தனையும் தர்மமன்றோ?!
 
மதுவிலக்கு வேண்டுமென்போர்
மது நிதி வேண்டுமென்பார்...
நீட்டு விலக்கு எங்கேயென்போர்
நீட்டி விளக்கிக் கதைவிடுவார்...
எதிர்ப்பதெங்கள் உரிமை என்போர்
எதிர்ப்பதவரை ஒடுக்கிடுவார்....
சபை அலுத்தால் துறந்திடுவோர்
சபையறிந்து பேசென்பார்...
 
✍️செ. இராசா

No comments: