26/01/2022

ஒட்டகக்கறி நல்லதா?

 



இந்தக்கேள்வியைக் கேட்டதுமே நம்மவர்களில் பலர் அபச்சாரம் அபச்சாரமென்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள் என்றே நினைக்கிறேன். தயவுகூர்ந்து அனைவருமே இக்கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு நான் கூறுவதில் தவறேதேனும் இருந்தால் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
 
மனிதனுடைய அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றையும் உற்று நோக்கினால் ஒரு உண்மை புலப்படும். அதாவது அந்த இயற்கை சூழ்நிலையைப் பொறுத்தே இந்த மூன்றும் அமைந்திருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். இந்த மூன்றிலுமே வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாக உள்ளது. 
 
அந்த காலத்தில் உறைவிடங்கள் என்பது அங்கங்கே கிடைக்கும் மண்ணையும் கல்லையும் கொண்டு கட்டப்பட்டது. அது குளிருக்கு சூடாகவும் சூட்டில் குளிராகவும் இருந்தது இயற்கையின் கொடையே. உடை விடயத்திலும் அப்படியே....நம்ம ஊரில் சூடு அதிகமாக உள்ளதால் காற்றோட்டமான வேட்டி சட்டை, குளிர் பிரதேசங்களில் கம்பளி போன்ற ஆடைகள், மணல் புயல் அடிக்கும் வளைகுடா நாடுகளில் காதிற்குமேல் ஒரு துணி. அது பறக்காமல் இருக்க தலையில் ஒரு சுருமாடு போன்ற அமைப்பு. இப்படி எல்லாமே...
உணவிலும் அப்படியே....நம் பக்கம் எளிதில் சீரணமாகும் இட்லி போன்ற உணவுகள். குளிர் நாடுகளில் குளிரிலும் தாங்கக்கூடிய சப்பாத்தி அல்லது பிரட் போன்ற உணவுகள்.
 
இப்படி அந்தந்த ஊரில் எதுஎது கிடைக்கிறதோ அந்தந்த ஊர்வாழ் மக்கள் அதையெல்லாம் சாப்பிட்டவரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் இருந்தோம். உதாரணமாக, கேரளா என்றால் மரவள்ளிக் கிழங்கு, தேங்காய் எண்ணெயும், தமிழ்நாடு என்றால் நிலக்கடலை, நம் பாரம்பரிய நெல்லரிசி, பனைங்கருப்பட்டி இப்படி....ஆனால், என்று இவையெல்லாம் மாறியதோ, அன்று பிடித்தது சனி. இதில் நாமெல்லாம் ஓரளவு கொடுத்து வைத்தவர்கள்தான். காரணம் பெரும்பாலும் அனைத்து வகையான உணவுகளையும் நம்மால் விளைவிக்க முடியும். ஆனால், வளைகுடா நாடுகளில் அப்படியல்ல. (நான் கூறுவது ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பாக என்று வைத்துக் கொள்வோம்) அவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தது எதுவென்றால், கடல் மீன்கள், பாலைவனத்தில் விளையும் பேரிச்சம்பழம், ஒருவகையான உருளைக்கிழங்கு மற்றும் ஒட்டகம். இவ்வளவுதான். அங்கே இதை மட்டுமே கொடுத்த இயற்கை எவ்வளவு ஆற்றலை அந்த உணவில் கொடுத்திருந்தால் அவர்களால் வாழ முடியுமென்று யோசித்துப் பாருங்கள்.
 
உண்மைதான், பேரிச்சம் பழத்தின் நன்மைகளைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. ஆனால், இந்த ஒட்டகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பாலைவனத்தில் செறுப்பே போடாமல் நீரே குடிக்காமல் எவ்வளவு கஷ்டத்தில் வாழப்பழகியுள்ளது. அதன் பாலிலும் மாமிசத்திலும் எவ்வளவு ஆற்றல் உள்ளது தெரியுமா?!. குறிப்பாக ஆண்களுக்கு 90 வயதுவரைகூட ஆற்றல் இருக்குமாம் (உடனே சிரிக்க வேண்டாம்). உயிராற்றலின் சக்திபற்றி வேதாத்திரி மகரிஷி வழங்கிய காயகல்பக் கலை அறிந்தவர்கள் உணர்வார்கள். ஓஷோகூட காமத்திலுருந்து கடவுளுக்கு என்றநூலில் உயிராற்றலின் பெருமையைக் கூறியுள்ளார். 
 
ஷேக்மார்களின் ஆற்றல் இரகசியம் இப்போது புரிகிறதா?!. ஆம்...ஆண்ம பலத்தை ஆன்மீக பலமாக மாற்றும் ஆற்றல் நம் இயற்கை சார்ந்த உணவுகளுக்கு உண்டு என்பதை மறவாதீர்கள். என்னைப்பொறுத்தவரை சைவம் அசைவம் என்பதெல்லாம் நாம் வைத்துக்கொண்ட கட்டுப்பாடே. எஸ்கிமோவாய்ப் பிறந்தால் பச்சை மீனை மட்டும்தான் சாப்பிட வேண்டும். Nanook of the North என்னும் படம் பாருங்கள். உங்களுக்கே புரியும். ஆக நான் கூற வருவது என்னவென்றால் ஒட்டகக்கறி மட்டுமல்ல, நாம் பிறந்த மற்றும் வளரும் சூழலில் இயற்கையாய் விளைகின்ற அனைத்து வகைக் காய்கறிகளும் நல்லதே. 
 
இயற்கையோடு வாழ்வோம் இளமையாய் இருப்போம்.
 
வாழ்க வளமுடன்!
 
✍️செ. இராசா

No comments: