22/10/2024

மீன்

மீன்


தசாவதாரத்தில்
முதல் அவதாரமே
மீன் என்னும்
மச்ச அவதாரம்தானே?

பாண்டியர் கொடியில்
பட்டொளி வீசிப் பறப்பதுவும்
இந்த மீன்தானே?

அன்றைய வள்ளுவர் முதல்
இன்றைய கவிஞர்கள்வரை: இன்னும்
கண்களின் உருவகங்கள்
கயல்விழி தானே?

இது
கடல் சூழ் உலகென்றால்
மீன் சூல் கடலென்பேன்...
சரி தானே?!

உங்களுக்கொன்று தெரியுமா?
கல்கத்தாவில் மீனை
அவாவும் சாப்பிடுவா..
அட..அவாவுக்கும்
அவா இருக்கும்தானே
அதுமட்டுமா?!.
மருத்துவத்தில்கூட
மீனுக்கே முக்கிய இடமாம்...

இங்கே
மீனவர்கள் வலையில் மாட்டுவது
வெறும் மீன்கள் அல்ல
பலபேரின் நம்பிக்கை...

இங்கேயும்..
தொண்டைக்குள் தூண்டில்விடும்
நம்பிக்கைத் துரோகங்கள்
இல்லாமல் இல்லை
என்ன செய்ய
சிலபேருக்கு இது பொழுதுபோக்கு
பலபேருக்கு இதுவே பிழைப்பு..

அதிபத்த நாயனார்க்குத்
தங்க மீன் கிடைத்ததாம்....

இரண்டு மீன்களையும்
ஐந்து அப்பங்களையும் கொண்டே
பலபேர் பசி தீர்த்தாராம் இயேசு..

தேனில் ஊறவைத்த மீன்களை
இராமனுக்காய்க் கொண்டுவந்து
பாசத்தைப் படையலிட்டாராம் குகன்!

இப்படி
மீனை வைத்துதான்
எத்தனைக் கதைகள்?!!

மீன் செத்தாக் கருவாடு
நீ செத்தா வெறுங்கூடு
இப்படி
மீனை வைத்துதான்
எத்தனை தத்துவங்கள்?!

தண்ணியில மீனழுதால்
கண்ணீரைக் கண்டது யார்?
இப்படி
மீனை வைத்துதான்
எத்தனை பாடல்கள்?!

யார் சொன்னது.
மீனின் அறிவு குறைவென்று?
கண்ணாலே குஞ்சு பொரிக்கும்
மணத்தாலே இலக்கடையும்
ஒலியாலே உரையாடும்
சுவைகண்டே இரை தேடும்
தொடுமுன்னே விரைந்தோடும்
எனில்..
மீன்களின் அறிவுதான் எத்தனை?

ஆறறிவுள்ளதாய்
அலட்டிக் கொள்ளும் நீங்கள்தான்
கடலையும் பிரித்து
எல்லையென்பீர்..
ஆனால்..
அவைகளுக்கில்லை இல்லை
ஆழமும் நீளமும் மட்டுமல்ல
அகலமும் அகிலமுமே அதன் எல்லை!

மாறுவோம்...
நாமும் அந்த மீனைப்போல...

No comments: