13/05/2024

பத்தோடு பதினொன்னா

பத்தோடு பதினொன்னா வாழாதே- நீ
கெத்தோடு திமிறாம ஓடாதே!
இத்தோடு முடிவென்று பேசாதே- நீ
எத்தோடும் இணையாக்கி நோகாதே ...✍️

எழுதாத கவிதைகளை எழுத வேண்டும்

 

எழுதாத கவிதைகளை எழுத வேண்டும்!
.....எழுதும்முன் மனதையது வருட வேண்டும்!
அழுகாத வருங்காலம் தோன்ற வேண்டும்!
.....அழுகும்முன் வருங்கவலைத் தீர வேண்டும்!
நழுவாத உறவுகளை நாட வேண்டும்!
.....நழுவும்முன் நகர்ந்துவிட எண்ண வேண்டும்!
முழுவாதத் திறன்பெருக பயில வேண்டும்!
...முழுவாழ்க்கை முடியும்முன் வாழ வேண்டும்!
 
✍️செ. இராசா

தாய்மை

 


உன்மெய் உருவாக்க
....உண்மை இறையான
தன்மை குறையாத
.....தாய்மை;தாய்- அன்பே..மெய்
தன்னுள் இடம்தந்து
.....தன்வெண் புனல்தந்து
நின்னை வளர்க்கும்தாய் மெய்!

 செ. இராசா

(செப்பலோசையில் அமைகின்ற வெண்பாவை இசைப்பாடலாக மாற்ற நினைத்து எழுதியது

12/05/2024

சங்கம்பல கண்டத்தமிழவள்

 #மெட்டு: #முத்தைத்திரு

சங்கம்பல கண்டத்தமிழவள்
எங்கும்தடம் என்றேபதிபவள்
தங்கம்;என மின்னும்மொழியவள் அறிவீரோ...

இன்னும்பல இன்னும்பலவென
இன்றும்புது மின்னல்பதிவென
என்றும்சுடர் எங்கும்ஒளியென
வருவாளே...

உள்ளம்கவர் உண்மைக்குறளவள்
பள்ளம்நிறை பச்சைத்தமிழவள்
கள்ளம்துளி இல்லாக்கவியவள்
தெளிவீரோ...

துள்ளல்பறை வெல்லும்பறையென
சொல்லும்படி துள்ளிக்குதித்திட
தெள்ளுத்தமிழ் செந்தேன்தமிழென
வருவாளே...

✍️செ.இராசா

09/05/2024

என்னை மட்டும் பிடிக்கலைன்னு சொல்லிப்புடாத

 பல்லவி
 

ஆண்
என்னை மட்டும் பிடிக்கலைன்னு சொல்லிப்புடாத- அடியே
கண்ணைக் கட்டி காட்டுக்குள்ள தள்ளிப்புடாத 

பெண்
உன்னை விட்டு விலகுவேன்னு நினைச்சுப்புடாத- அடநான்
முன்னைவிட்டு பாயும்வெடி மறந்துவிடாத‌‌..
 

ஆண்
தள்ளித் தள்ளிப் போகாம வாமா- இங்கே
உனக்காகக் காத்திருக்கேன் மாமா... 

பெண்
தள்ளி ஒன்னும் போகவில்லை ராசா- நீ
தட்டித் தூக்க நானிருக்கேன் லேசா
 

சரணம்_1 

ஆண்
அடியே அழகே நீதான்டி ஃபிகரு
பார்த்தா போதும் பத்திக்கும் ஃபயரு
கவியே கலையே உன்னோட லெவலு
அதிர வைக்கும் ஹைவோல்டேஜ் பவரு...
 

பெண்
அழகாப் பேசி வைக்காதே ஐசு
அசந்தா அள்ளி விடுவாயே லைய்சு
எதையும் நம்ப நானில்லை சைல்டு
ஏத்தி நீயும் போடாத வைடு..
 

ஆண்
உண்மை சொன்னா உருவாகும் டவுட்டு
என்ன சொன்னா அதுவாகும் ரைட்டு
ஹையோ ஹையோ வேணான்டி ஃபைட்டு
மெய்யோ பொய்யோ நான்இப்போ குயிட்டு
 

பெண்
உள்ள தெல்லாம் சொன்னாக்க மாமு
ஊரே நம்மை வைக்காதோ கண்ணு
கள்ள மில்லா உன்னோட பேச்சு
மீறிப் போனா அடிக்காதோ ஷாக்கு
 

ஆண்
தள்ளித் தள்ளிப் போகாம வாமா- இங்கே
உனக்காகக் காத்திருக்கேன் மாமா... 

பெண்
தள்ளி ஒன்னும் போகவில்லை ராசா- நீ
தட்டித் தூக்க நானிருக்கேன் லேசா

✍️செ. இராசா

07/05/2024

முத்தமிழில் எத்தமிழ்

முத்தமிழில் எத்தமிழ்தான் மூத்ததமிழ் என்பவரே..
முத்தமிழ்த்தாய் ஒன்றால்தான் மூன்று!

04/05/2024

சாதியில்லை பேதமில்லை

 

சாதியில்லை பேதமில்லை
......சத்தியமாய் என்றபடி
நாதியற்ற கூட்டத்தின்
......நாயகன்போல்- வாதிடுவோர்
சாதியென்ன சாதியென்று ‌
......சப்தமின்றி கேட்டபடி
போதிக்கும் அத்தனையும்
......பொய்!

இயலாயென இசையாயென

இயலாயென இசையாயென
......இடையேசிலர் கிளம்ப
புயலாகவே அனலாகவே
......புனைந்தார்பலர் கதையே
இயல்பாகவே ஒலிதோன்றியே
......மொழிதோன்றிய தறிந்தும்
நயமாகவே அதைமாற்றியே
.....நவில்ந்தார்இயல் முதலே!

பலகாலமாய் பலபேர்களால்
...பதிவாகிய கவிகள்
நிலையாகிட ஒருகாரணம்
...நிசமாகவே அசையே..
சிலபேர்களின் மதியாளுமை
...சிறிதாகிட கவியின்
நிலைமாற்றியே புதிதாக்கிய
...வினையால்வரும் விளைவே...!

அசை;ஈரசை அதில்;ஓரிசை
...அதுதானிசைக் கவியே..
அசைமாற்றியே அசைமாற்றியே
...அமைத்தாரதை முறையே..
இசையாகவே இயல்பாகவே
...எடுத்தாண்டதன் வழியே
திசையாவிலும் தமிழா;தமிழ்
..சிறந்தோங்கிடும் மொழியே!

✍️செ.இராசா

02/05/2024

முத்துமலை முருகனுக்கு அரோகரா அரோகரா..‌

 


 

தொகையறா

 முத்துமலை முருகனுக்கு
அரோகரா அரோகரா..‌
முக்திதரும் கடவுளுக்கு
அரோகரா அரோகரா..
சக்திசிவ மைந்தனுக்கு
அரோகரா அரோகரா..
வெற்றிதரும் வேலனுக்கு
அரோகரா அரோகரா...

கந்தனுக்கு அரோகரா
கடம்பனுக்கு அரோகரா...
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா...

வேல்முருகா...வெற்றி வேல்முருகா...
வேல்முருகா... வீர வேல்முருகா...
 

பல்லவி
வேல்வடிவ வீட்டினிலே
வீற்றிருக்கும் வேலவனே...(2)
பால்வடியும் முகங்காண
வாரோம்யா- எங்க
பாவத்தைக் களைஞ்சாலே போதும்யா..(2)

வேல்முருகா...வெற்றி வேல்முருகா...ஓம்
வேல்முருகா... வீர வேல்முருகா...
வேல்முருகா...வெற்றி வேல்முருகா...ஓம்
வேல்முருகா... வீர வேல்முருகா...
 

சரணம்_1
ஆறுபடை அத்தனையும்
ஐக்கியமாய் ஆனதுபோல்
ஏழுகோண வீடுகொண்ட
ஈசனோட திருமகனே..
இடக்கரம் வேலேந்தி
இடர்களினை துடைத்திடவே
வலக்கரம் ஆசிதர
வடிவெடித்தக் குலமகனே...

நீரில்லா ஊரினிலே
நீர்கொடுத்த நிலமகனே
நீரில்லா வாழ்வினிக்க
சாத்தியமோ?! சிவமகனே...
பாரெல்லாம் புகழ்மணக்கும் பைந்தமிழின் காவலனே
பூவெல்லாம் ஏங்குதய்யா
மாலையென மாறிடவே...

வேல்முருகா...வெற்றி வேல்முருகா...ஓம்
வேல்முருகா... வீர வேல்முருகா...
வேல்முருகா...வெற்றி வேல்முருகா...ஓம்
வேல்முருகா... வீர வேல்முருகா...
 

சரணம்_2
பத்துமலை முருகனைப்போய் பார்த்திடாத பக்தருக்கும்
முத்துமலை முருகனாக
உருவெடுத்த வடிவழகே
நித்தநித்தம் கடன்சுமையால்
வாடுகின்ற அன்பர்களின்
வேதனைய நீக்கவந்த
நேசமுள்ள இறையுருவே..

பிள்ளைவரம் வேண்டிவரும் எத்தனையோ பேர்களுக்கு
பிள்ளையென மாறிவரும்
பேரருளே.. பெருங்கடலே..
இல்லையென சொல்லுகின்ற எத்தனையோ பேர்களையும்
இல்லையென்ன இல்லையென சொல்லவைக்கும் அருள்மழையே...

வேல்முருகா...வெற்றி வேல்முருகா...ஓம்
வேல்முருகா... வீர வேல்முருகா...
வேல்முருகா...வெற்றி வேல்முருகா...ஓம்
வேல்முருகா... வீர வேல்முருகா...

✍️செ. இராசா

01/05/2024

இயலா இசையா? வெண்பாக்கள்




இயல்முதலா? இல்லை இசைமுதலா? என்றால்
இயற்கையின் தோற்றம் இசை!
(1)

பிக்பாங் பெருவெடிப்பின் பேரிசை இல்லையேல்
எக்கோளில் நாமிருப்போம் இங்கு?
(2)

ஓமென்ற ஓசை உலகத்தின் ஆதியாய்
ஆமென் எனச்சொல்வர் ஆய்ந்து!
(3)

ஓசையின் ஓரொழுங்கில் உண்டான கட்டமைப்பைப்
பாஷை எனசொல்வர் பார்
(4)

ஒலிவழி வந்தமைந்த ஒவ்வோர் மொழிக்கும்
ஒலிவரி தோற்றங்கள் உண்டு
(5)

வரிவடிவ மாற்றங்கள் வந்தாலும் நம்மில்
பெரியளவில் மாறா ஒலி
(6)

எழுப்புகின்ற ஓசை எழுத்துரு வாகி
எழுத்துருவைப் பாடல் இசை!
(7)

இசைக்குள் இசையும் இயல்புள்ள சொல்லால்
இசையும் மெருகேறும் இங்கு!
(8)

சொற்றொடர் இன்றியும் தோற்றிடலாம் என்றாலும்
நிற்காது பாடல் நிலைத்து!
(9)

இயலினிதா? இல்லை இசையினிதா? என்றால்
இயலிசை சேர்ந்தால் இனிது!
(10)

✍️செ. இராசா

உழைப்பாளர் தினம்



பல்லவி
எட்டுமணி நேர உரிமை இங்கே எவருக்கும் கிடைக்கணுங்க
சட்டப்படி ஆக்கும் கடமை நம்ம
அரசுக்கும் இருக்குதுங்க..

உழைப்பவர் அனைவரும் உயரணும்- இதை
உணர்ந்தவர் தலைவரா அமரணும் (2)

எட்டுமணி நேர உரிமை இங்கே எவருக்கும் கிடைக்கணுங்க
சட்டப்படி ஆக்கும் கடமை நம்ம
அரசுக்கும் இருக்குதுங்க..
 

சரணம்
ஜவுளிக் கடையிலும்
ஹோட்டல் பணியிலும்
மளிகைக் கடையிலும்
மால்கள் முழுவதும்
காபிக் கடையிலும்
காவல் பணியிலும்
ரோட்டுக் கடையிலும்
டியூட்டி முழுவதும்
எத்தனை பேருங்க நிக்கிறாங்க?
எவ்வளவு நேரமா நிக்கிறாங்க?
யாருங்க OTக்கு கொடுக்கிறாங்க அட
யாருங்க உண்மையா இருக்குறாங்க.‌

உழைப்பவர் அனைவரும் உயரணும்- இதை
உணர்ந்தவர் தலைவரா அமரணும்!

✍️செ. இராசா