இருக்கின்ற நேரம் இருபத்தி நான்கைச்
சரியாய் வகுப்போன் தலை!
(1)
தலைமைப் பணியில் தனித்துவம் தோன்ற
கலையாய்ப் பணியைக் கருது!
(2)
கருதிய யாவையும் கைகூட வேண்டின்
செருக்கின்றி எப்போதும் செய்!
(3)
செய்கின்ற செய்கையை சிந்தையில் ஒட்டிப்பின்
செய்கின்ற செய்கை சிறப்பு
(4)
சிறப்பெனச் சொல்லி சிறுநகை பூத்தால்
உறவுகள் கூடும் உணர்
(5)
உணராமல் பேசும் உரையை விடவும்
உணர்ந்தபின் மௌனம் உயர்வு
(6)
உயர்வான எண்ணம் உயர்த்துவது திண்ணம்
முயன்றால் கிடைக்கும் முடிவு
(7)
முடிவை எதிர்நோக்கி முன்னேறிச் செல்லத்
துடிப்புடன் வேண்டும் துணிவு
(8)
துணிவைத் துணையாக்கி சோராமல் சென்றால்
பணியும் மலைகூடப் பார்
(9)
பார்க்க இயலா பதவிக்குச் சென்றாலும்
யார்க்கும் எளிதாய் இரு
(10)
செ. இராசா
23/05/2024
குறள் அந்தாதி---இருக்கின்ற நேரம் இருபத்தி நான்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment