#CM
பேசவில்லை என்றீர்கள் பேசினால் இப்போது
பேசுகிறேன் என்கின்றீர் பேச்சு!
#OL
பேசுவதைப் பேசாமல் பேச்சில் வதைக்காதீர்
கூசுதெங்கள் காது குமைந்து!
#CM
சும்மா வரவில்லை சொல்லி அடித்துள்ளோம்
வம்பிழுத்தால் பார்த்திடுவோம் வா!
#OL
சட்டம் ஒழுங்கெல்லாம் சந்தி சிரிக்கிறது
நட்டம் அடைந்ததிந்த நாடு
#CM
இத்தனை நாட்களாய் யாரிருந்தார் சொல்லுங்கள்?
அத்தனையும் மாறும் அடங்கு.
#OL
வந்தவுடன் மாறுமென வாய்கிழிய சொன்னதுயார்?
எந்தைபோல் யாருள்ளார் இங்கு?!
#CM
கொள்ளை அடித்துவிட்டு கூப்பாடு போட்டதற்கே
தள்ளியுனை வைத்தார் தனித்து!
#OL
எங்கள் தயவால்தான் ஏறியுள்ளீர் ஆட்சியிலே
பங்கம் விளைத்திடுவோம் பார்த்து
#CM
மிரட்டல் உருட்டலெல்லாம் வீட்டோடு வையும்
இரக்கமினி காட்டோம் இதற்கு?
#OL
வெளிநடப்பு செய்கின்றோம் நீளுமிவர் பேச்சைத்
துளியளவும் கேளோம் தொடர்ந்து!
செ. இராசா
(இரசிக்க மட்டுமே... விவாதம் புரிய அல்ல)
24/06/2026
சட்டசபை காட்சிகள் (குறள் வெண்பாவில்)
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment