11/06/2026

என் அத்தமக போல ஒரு பொண்ணு

 

என்
அத்தமக போல ஒரு பொண்ணு - அவ
என்மேலதான் வச்சிருக்காக கண்ணு
என்
மாமன்மகள் போல ஒரு பொண்ணு
இந்த
சுத்துப்பட்டில் யாரிருக்கா எண்ணு?
அவ நடக்கும் நடையில
என் உசுரு குலுங்குது
அவ சிரிக்கும் சிரிப்புல
என் மனசு குளிருது
நான் என்னான்னு சொல்ல- அவ
இல்லைன்னா இல்லை
நான் என்னான்னு சொல்ல- அவ
இல்லை நான் இல்லை
ஒக்கூரு சந்தையில
ஒன்னாப் போகும் வேளையில
தோளுமேல கையப் போட்டா
ஷாக்கடிக்கிது மனசுக்குள்ள...
பாகனேரி கோவிலுல
பொங்க வைக்கும் வேளையில
பார்வையில பத்த வச்சா
பத்திக்கிச்சு உசுருக்குள்ள...
மதுர மல்லிபோல
மணமணக்கும் பேசயில
வீணா வாய்கொடுத்தா
வெடிவெடிக்கும் வார்த்தையில..
அயிரை மீனப்போல
ருசியிருக்கும் கொஞ்சயில
யாரும் வம்புசெஞ்சா
பொறிபறக்கும் பார்வையில...
நான் என்னான்னு சொல்ல- அவ
இல்லைன்னா இல்லை
நான் என்னான்னு சொல்ல- அவ
இல்லை நான் இல்லை....
தேனில் ஊறவச்ச
நெல்லிக்கனி போலிருப்பா..
ஆர்வம் மீறுச்சுனா
அப்படியே மாறிநிப்பா..
பாசம் காட்டுறப்ப
பச்சப்புள்ள போலிருப்பா
பாதை மாறுச்சுனா
காதலுக்கே தீயவைப்பா..
கன்னக் குழிக்குள்ள
தள்ளிப்புட்டா கள்ளி கள்ளி
என்னை உருவாக்க
ஏத்திவிட்டா சொல்லி சொல்லி
கண்ணத் தொறந்தாலே
காணுகிறேன் உன்னை உன்னை
என்னைத் தொறந்தாலும்
கண்டிடலாம் பெண்ணே உன்னை
நான் என்னான்னு சொல்ல- அவ
இல்லைன்னா இல்லை
நான் என்னான்னு சொல்ல- அவ
இல்லை நான் இல்லை.
✍️செ. இராசா

No comments: