"#நான்_எனும்_வெற்றிமகுடம்"
இந்த வாக்கியம்தான்
எத்தனை அர்த்தமானது?
"ற்" எனும் ஒற்றை நீக்கினால்
வெ(ற்)றிமகுடம் என்பது
வெறிமகுடமாகி
வெறித்துப் பார்க்கிறது
"மகு" என்பதன் மதிப்பைக் குறைத்தால்
வெற்றி(மகு)டம் என்பது
வெற்றிடமாகி
வெட்கித்தலைத் குனிகிறது
"#வெற்றிடம்"
சூனியம் என்கிற சூட்சமத்தின்
ஆச்சரியப் பாத்திரம்தான்
இந்தப் பிரபஞ்ச வெற்றிடம்
சூனியம் என்கிற பூஜ்யத்தின்
சூத்திர விசித்திரம்தான்
இந்தக் கணித வெற்றிடம்
ஒற்றைப் பொருள் என்பது
கற்றை அணுக்களெனில்
ஒற்றை அணுக்களில் இருப்பது
வெற்று வெளியேயென
வெடித்துச் சொல்கிறது
விஞ்ஞானம்!
ஒவ்வொரு கோள்களும்
ஒவ்வொரு பம்பரமெனில்
ஒவ்வொரு பம்பரமும் சுழல்வது
ஒற்றைச் சாட்டையாலென
ஓங்கிச் சொல்கிறது
உயர் ஞானம்!
வெற்றிடம் இல்லாது
எதுவும் முடியுமா?!
எப்படி முடியும்...!!!
நிரம்பிய குட்டையில்
நீரேற்ற முடியுமா?
கலங்கிய புத்தியில்
கவியேற்ற முடியுமா?
எனில் வெற்றிடம் என்பது
இங்கே வெற்று விடயமா?
யார் சொன்னார்கள்?
உரிக்க உரிக்க
ஒன்றும் இல்லைதான்
ஆனாலும் அழுக வைக்கிறதே
வெங்காயம்...
போகப் போக
புலப்படவில்லை தான்
ஆனாலும் அலுத்து (அழுது) கொள்(ல்)கிறதே
மனித மனம்...
எனில்
வெற்றிடம் என்பது
ஒற்றைப் பொருளா?
எப்படி சாத்தியம்?!
வெற்றிடம் பொருளென்றால்
வெற்றிடத்தின் எல்லை எங்கே?!
எனில்
வெற்றிடம் என்பது யாது?
ஒன்றுமில்லை...
உண்மையில் ஒன்றுமில்லை...
அந்த ஒன்றுமில்லா
உண்மையில்தான் ஒளிந்திருக்கிறது..
அந்த அதிசயம்
அந்த சிதம்பர ரகசியம்
நம் சிந்தைக்குப் புரிந்தால்
நான் எனும் வெற்றிடம்
நான் எனும் வெற்றிமகுடமே
✍️செ. இராசா
#நான்_எனும்_வெற்றிடம்
No comments:
Post a Comment