எதிர்ப்பே இல்லாமல்
எதுதான் சாத்தியம்?
யோசித்துப்பார்...!!!
எத்தனையோ விந்தணுக்கள்
எதிர்ப்போடு போட்டியிட
அத்தனையும் தோற்கடித்து
எப்படி நீ கருவானாய்?!
பத்து மாதம் படுத்திருந்த
பனிக்குடத்தை கிழித்துவிட
என்றைக்கு முடிவெடுத்து
அன்றைக்கு வெளிவந்தாய்?!
உருண்டு புரண்டு உட்கார்ந்து
இரண்டு காலில் நீ நடக்க
எத்தனை மணித்துளிகள்
எதிர்ப்போடு நீ இருந்தாய்?
பிடிக்காத படிப்பெல்லாம்
படிக்கச்சொல்லி படுத்தையிலே
எப்படியோ படித்த கதை
இப்போது ஏன் மறந்தாய்?
கண்ணியத்தின் சோதனையை
கண்ணிமைகள் அறிந்தாலும்
உணர்வோடு சண்டையிட்ட
உண்மையினை ஏன் மறந்தாய்?
கைபிடித்த மனைவியோடு
கைகலப்பு வந்தாலும்
முரணோடு முத்தமிட்ட
முன்னுரையை ஏன் மறந்தாய்?!
இப்போது பலபேர்கள்
தப்பாக நினைத்தாலும்
எப்போதும் முயன்றாலோ
தப்பாமல் நீ நிற்பாய்?
எதிர்ப்பே இல்லாமல்
எதுதான் சாத்தியம்?
எதிர்ப்பே சத்தியம்!
#எதிரியை_நேசி
(வேறு)
ஆம்...
முட்டையை உடைக்காமல்
குஞ்சுகள் பிறப்பதில்லை!
கொட்டையைக் கிழிக்காமல்
செடிகள் துளிர்ப்பதில்லை!
ஆசையைத் துறக்காமல்
அமைதி கிடைப்பதில்லை!
எதிர்ப்பே இல்லாமல்
ஏதுவும் நடப்பதில்லை!
No comments:
Post a Comment