31/07/2025

அவன் யார்?

 


மறக்க முடியவில்லை
அந்தக் காட்சியை...

ஒல்லியான தேகம்
உடைந்துபோன முகம்
சோகம் நிறைந்த கண்கள்
சொல்லமுடியா வலியென
அந்தத் தேநீர் கடையில்
என்னருகே அமர்ந்திருந்தான்...

புரோட்டாவைப் பிச்சு
தேநீரில் நனைத்தவாறே
ஒவ்வொரு துண்டாய்
உள்ளே போட்டான்....

அந்நேரம் அவன் பசி
கொஞ்சம் கொஞ்சமாய்
விடுதலை பெற்றாலும்
அவன் மட்டும்
அப்படியே அமர்ந்திருந்தான்...
எதையோ நினைந்தவாறே...

அவன் யார்?
யாராய் இருந்தால் என்ன?
அவனொன்றும் சொல்ல வேண்டாம்..
நானறிவேன்...

சின்னக் குழந்தை போல

 

சின்னக் குழந்தை போலத்தான்
...சிந்தை முழுதும் ஏற்றிடுவாய்
முன்னர் சென்று பாயத்தான்
...முடிந்த வரைக்கும் ஓடிடுவாய்!
அன்னைத் தமிழை ஊன்றத்தான்
...ஆழ்ந்து நாளும் ஓதிடுவாய்!
உன்னை உன்னுள் காணத்தான்
...உயிரை நினைந்தே ஓர்ந்திடுவாய்!

29/07/2025

பாவலனுக் கென்ன வேலை?

 

பாடுபொருள் இல்லாமல் பாடுகிற காலத்தில்
....பாவலனுக் கென்ன வேலை?!
காடுவயல் எல்லாமும் காய்கின்ற நேரத்தில்
....காவலனுக் கென்ன வேலை?!
தேடுகிற அப்போதே தேடியது கிட்டுமெனில்
...தெய்வமதெற் கென்ன வேலை?
நாடுகிற அத்தனையும் வாய்ப்புவரம் ஆகுமெனில்
...நாளையதெற் கென்ன வேலை?!

28/07/2025

குரு


Shared with Public
பெற்றோருக்குப் பின்
கற்றோர்கள் போற்றுவது
குருவைத்தான்...
குருவும் ஆசிரியர்தான்; அதற்காக
ஆசிரியர்கள் எல்லாம்
குரு அல்ல...
வெளிச்சம் பற்றி
விளக்குபரல்ல குரு; இருளை
வெளிச்சம் பாய்ச்சி
விலக்குபவரே குரு...
குருக்கோள் பூசாரிகளல்ல குரு
குறிக்கோள் ஆச்சாரியரே குரு
மாலைபோட்டு மலையேற்றும்
குருசாமியல்ல குரு
மாலை பிறர்போட ஏற்றிவிடும்
குலசாமியே குரு
குருபார்த்தால் கோடி நன்மையாம்
இது;
பஞ்சாஞ்க உண்மை மட்டுமல்ல
நெஞ்சார்ந்த உண்மையும்தான்..
கடைசிவரை கைபிடித்துக்
கூட வருபவரல்ல குரு
பிடித்த கையை தளர்த்தி; எல்லாம்
கூட வைப்பவரே குரு
குருவின் பின் குருவென
குரு பரம்பரை வளர்க்கும்
மட குருக்கள் எல்லாம்
மட....குருக்களே...
அதற்காக..
குரு வழி குருக்களைக்
குறை சொல்ல முடியுமா என்ன?!
கம்பவாரிதியின் குரு
ராதாகிருஷ்ணன் என்பர்
அவரின் குரு கிவா. ஜெகன் நாதன்
அவரின் குரு உ வே. சாமிநாத ஐயர்
அவரின் குரு மீனாட்சிசுந்தரம் பிள்ளை ‌.
இப்படி ஞானவழி குருக்களும்
இல்லாமல் இல்லையே?!
சரி...
படிப்புதான் குருவின் தகுதியா?
யார் சொன்னது?
படித்த மகா கவிக்கு
படிக்காத குள்ளச்சாமிபோல்
மன்னன் ராபர்ட் புருசுக்கு
சாதாரண சிலந்திபோல்
யார் வேண்டுமானாலும்
யாருக்கும் குருவாகலாம்.
ஆம்...
கண்களைத் திறக்க வைக்கும்
காரண கர்த்தா அவர்.
புண்களை மறக்க வைக்கும்
பூரண புத்தா அவர்.
அதுமட்டுமா?!
குறைகளைக் களைபவர் குரு!
பறைவதைப் பறைபவர் குரு!
நிறைகளை நிறைப்பவர் குரு!
மறைகளை விதைப்பவர் குரு!
அன்றைய துரோணாச்சாரியர்கள்
வேண்டுமானால் விரல் கேட்கலாம்
பாவம்....
இன்றைய குருமார்கள் கேட்பதென்ன?
நீங்களே சொல்லுங்கள் ?!!!
✍️என்றும் சீடனாய்
செ. இராசா.

24/07/2025

பைப்பத் திறந்தாலே

 


பைப்பத் திறந்தாலே
.....பத்திக்கும்; ஆனாலும்
வைஃப்ப நினைச்சபடி
.....வாழ்ந்திடலாம்- லைஃப்புல
சோதனை கூடவே
.....சொல்லாமல் வாழலையா?!
வேதனை போகும்
......விடு

✍️செ. இராசா

வளைகுடா நாடுகளில் கோடை கால இடர்களில் இதுவும் ஒன்று

23/07/2025

உற்றோர் உதறிடலாம்

 

உற்றோர் உதறிடலாம்
.......உண்மை உணராமல்
மற்றோர் உதவிடலாம்
......மாறாக- உற்றுணர்ந்தால்
செய்கின்ற செய்கை
......திரும்பிவரும் என்றாலும்
செய்பலன் பாராமல்
......செய்!

22/07/2025

சொத்துசொத்து சொத்துயென்று

 

சொத்துசொத்து சொத்துயென்று
.....சூதுசெய்யும் சுற்றமே!
செத்தபின்னே எந்தசொத்தும்
.....சேர்ந்திடாது முற்றுமே!
இத்தசொத்தைப் பற்றயெண்ணி
.....எண்ணுமெண்ணம் குற்றமே!
ஒத்திசைந்து தீர்வுகண்டால்
.....ஓடுமுந்தன் பற்றுமே!

12/07/2025

ஜெனிகா ஜெனிகா ஜெனிகா

 


ஜெனி ஜெனி ஜெனி ஜெனி
ஜெனி ஜெனி ஜெனி ஜெனி ஜெனிகா
ஜெனி ஜெனி ஜெனி ஜெனி
ஜெனி ஜெனி ஜெனி ஜெனி ஜெனிகா
இறைவனின் படைப்பினில் எழில்மிகு படைப்பெது ஜெனிகா
இதைவிட உலகினில் எமக்கெது பெரியது ஜெனிகா
அழகிய தமிழ்மகள் ஜெனிகா
அதிசய அணங்கிவள் ஜெனிகா
அகரமாய் உதித்தவள் ஜெனிகா
அகமெலாம் ஒளிர்பவள் ஜெனிகா
ஜெனிகா ஜெனிகா ஜெனிகா..
கண்ணிரு விழிகளில் நிறைந்தாய்
என்னரும் உயிரென விளைந்தாய்
அன்புரு வடிவென தவழ்ந்தாய்
அன்னையாய் மறுபடி பிறந்தாய்
ஜெனிகா ஜெனிகா ஜெனிகா..
இனி..
ஏழிசை எல்லாமே ஜெனிகா
இன்னிசை வெண்பாவே ஜெனிகா
மாயவன் பூங்குழல்
ஊதிடும் ஓசையும்
தோற்றிடும் உன்னாலே
ஜெனிகா ஜெனிகா ஜெனிகா ஜெனிகா

08/07/2025

சிக்கலில்லா மனுஷன்

 

பல்லவி
சிக்கலில்லா மனுஷன் இங்கே யாருங்க- சிக்கல்
சிக்கலுனு புலம்புறத நிறுத்துங்க...

சிக்கலில சிரிக்கக் கொஞ்சம் பழகுங்க- சிக்கல்
சீக்கிரமே ஓடுறதப் பாருங்க...

ஒன்னும் ஒன்னும் இரண்டு- அட
வந்து போகும் டிரெண்டு
ஒன்னு போனா ஒன்னு -இதுக்கு
எண்டே இல்லை எண்ணு!

சரணம்
எண்ணம் போல வாழ்க்கையின்னு ஏன் சொன்னாங்க?.
எண்ணம் என்ன செய்யுமுன்னு கண்டுகொண்டாங்க..
ஆசையத்தான் சீரமைக்க ஏன் சொன்னாங்க?
முறையில்லாத ஆசையால தீங்கு வருதுங்க...

கோபப்பட வேணாமுன்னு ஏன் சொன்னாங்க?
உறவு கெட்டுப் போகுமுன்னு உதறச்சொன்னாங்க...

கவலையொழிக்க வேணுமுன்னு ஏன் சொன்னாங்க?
உடல உயிர பறிக்குமுன்னு களையப் சொன்னாங்க...

நான் யாரு
நான் யாரு
நான் யாருன்னு
நமக்கு உள்ளே போகச்சொன்னாங்க....போயி
உண்மையென்ன உணரச் சொன்னாங்க...

07/07/2025

ஸ்ரீ வாஞ்சியம்

 


வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்

எமனுக் கருளிய புண்ணிய தளமே ஸ்ரீ வாஞ்சியம்
அவரவர் வினைகளை அகற்றிட வாரும் ஸ்ரீ வாஞ்சியம்

திருமகள் ஊடலை வாஞ்சையாய் மாற்றிய ஸ்ரீ வாஞ்சியம்
பிரிந்தவர் வாழ்வினில் சேர்ந்திட வைக்கும் ஸ்ரீ வாஞ்சியம்

வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்

#வேறு
இருவினை களையும்
திருவினை புரியும்
.........ஈசனே நமசிவாய
இருமனம் இணையும்
திருவருள் வழங்கும்
.........நேசனே நமசிவாய

ஓம் ஓம் நமசிவாய
ஸ்ரீ வாஞ்சிய நமசிவாய
ஓம் ஓம் நமசிவாய
ஸ்ரீ வாஞ்சிய நமசிவாய
(2)

வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்

#வேறு

அண்டம் பிண்டமாய்
அங்கும் இங்குமாய்
எங்கெங்கும் நிறைந்தாய் பரமேஸ்வரா‌.

அன்றும் இன்றுமாய்
இன்றும் என்றுமாய்
என்றென்றும் இருப்பாய் லிங்கேஸ்வரா...

அங்கம் தங்கமாய்
மின்னும் வைரமாய்
எங்கெங்கும் ஜொலிப்பாய் மகாதேவா

சொந்த பந்தமாய்
அந்தம் ஆதியாய்
என்றைக்கும் வருவாய் தயாபரா

பற்றித் தாவிட பற்றித் தாவிட
பற்றை கூட்டிடும் பற்றில் விடுபடப்
பற்றிடும் தெய்வமே வாஞ்சிநாதா...

வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்

#வேறு

(ஒவ்வொரு வரி முடிவிலும் வேண்டுமெனில் ஸ்ரீ வாஞ்சியம் சேர்க்கலாம்)

அணுமுதல் அண்டமாய் ஆனவன் நீயே!
சிணுங்கிடும் பிஞ்சிலே தேனுமிழ் நீயே!
கதிரவன் தீயிலே காண்பவன் நீயே!
மதியிலே மார்க்கமாய் வந்தவன் நீயே!
அருவமாய் ஆகிய ஆதியும் நீயே!
இருவினை நீக்கிடும் பரம்பொருள் நீயே!
மங்கள நாயகி மன்னவன் நீயே!
காசியை விஞ்சிடும் அற்புதம் நீயே!

நாதா வாஞ்சி நாதா
நாதா வாஞ்சி நாதா

வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்

செந்தமிழ் ஆண்டவனே

 

செந்தூரில் வாழ்கின்ற
.....செந்தமிழ் ஆண்டவனே!
எந்தவூர் போனாலும்
.....ஈர்ப்பவனே!- சிந்தனையால்
போற்றுகிறேன்! போற்றுகிறேன்!
......பூதூவிப் போற்றுகிறேன்!
ஊற்றெடுக்கும் நற்றமிழை
......ஊற்று!