31/03/2025

கண்ணோடு கண்மோதும் நேரம்

 

கண்ணோடு கண்மோதும் நேரம்
விர்...ரென்று மின்சாரம் பாயும்
உன்னோடு நானில்லா நேரம்
உஷ்..சென்று புஷ்வானம் ஆகும் (2)

என் அன்பே......என் அன்பே
நீ...இல்லை.....நான் இல்லை
என் அன்பே......என் அன்பே
நீ...இல்லேல்.....நான் இல்லே..

#சரணம்_1

ஆண்:
எழுதாத காகிதமாய் இருந்த
எனது மனதில்
அழகான காவியமாய் விரிந்த
அமுதக் கவியே...

பெண்:
வரையாத சுவராக இருந்த எனது மனதில்
வடிவான உருவாக வளர்ந்த முதல் கலையே...

ஆண்:
முடியாத தொடராக தொடரும் இந்த உறவை
முடிவான உறவாக மாற்ற வேண்டும் இனிதே..

பெண்:
முடிவான உறவாக முடிச்சு மூன்று போட்டே
முடிவில்லாத் தொடராக தொடங்க வேண்டும் அன்பே...

என் அன்பே......என் அன்பே
நீ...இல்லை.....நான் இல்லை
என் அன்பே......என் அன்பே
நீ...இல்லேல்.....நான் இல்லே..

✍️செ. இராசா

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்

 

இராமன் ஆண்டாலும்
இராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லை...

என்னது கவலை இல்லையா...?!!
நோ...நோ..நோ....

#பல்லவி
இராமனா இராவணனா
யாராள வேணுமுன்னு
யார்வந்து சொல்லவேணும்

இராமனா இராவணனா
யாராள வேணுமுன்னு
நாமதான் சொல்லவேணும்....போடு

போடு போடு போடு போடு
போடும் ஓட்டப் பார்த்துப் போடு
போடு போடு போடு போடு
போதும் பழசத் தூக்கிப் போடு
இராமனா இராவணனா...

#சரணம்_1
இலவசமா தாரேன்பான் பார்த்துக்க
கடனெல்லாம் ரத்தும்பான் கேட்டுக்க
மதுக்கடைய வேணாம்பான் பார்த்துக்க
மகளிருக்கே உரிமைம்பான் கேட்டுக்க

ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சா
ஒன்றியம்பான்...
தாக்கி யாரும் அறிக்கை விட்டா
சங்கிம்பான்...
நீட்ட நீக்கப் போறதுதான்
கொள்கைம்பான்
கேள்வி கேட்டா ஒன்றியம்னு
கைகாட்டுவான்...

போடு போடு போடு போடு
போடும் ஓட்டப் பார்த்துப் போடு
போடு போடு போடு போடு
போதும் பழசத் தூக்கிப் போடு
இராமனா இராவணனா...

✍️செ. இராசா

நடக்காமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்!

 

நடக்காமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்!
..நடுவினிலே முயற்சியினைத் துறக்க வேண்டாம்!
படிக்காமல் ஒருநாளும் படுக்க வேண்டாம்!
...பணியதிகம் எனச்சொல்லி ஒதுங்க வேண்டாம்!
சடக்கென்றே சினம்கொண்டு சரிய வேண்டாம்!
...சமநிலையை ஒருபோதும் இழக்க வேண்டாம்!
கடுஞ்சொல்லால் பிறர்மனதைக் கசக்க வேண்டாம்!
...கடவுளிடம் அறமின்றி இரக்க வேண்டாம்!
✍️செ.‌இராசா

30/03/2025

ஒவ்வொரு கணமும்

 

ஒவ்வொரு கணமும்
மெதுவாக நகர்கிறது
ஆயுள்

ஈயென எண்ணி

 

ஈயென எண்ணி
....இளக்காரம் கொள்வோரை
நாயென எண்ணி
....நகர்ந்திடுவாய்ச்- சீயென்றே
எள்ளி நகைப்போரை
.....ஏறெடுத்தும் பாராமல்
துள்ளி நடப்பாய்த்
.....தொடர்ந்து!

25/03/2025

எதிர்பாரா இன்பம்!

 

எதிர்பாரா இன்பம்!
.....எதிர்பாராத் துன்பம்!
எதிர்பாரா தெத்தனையோ
.....இங்கு- விதியால்
சதிராடும் வாழ்வில்
......சளைக்காமல் நாளும்
புதிர்போட நாடும்
.....புகுந்து!
✍️செ. இராசா

24/03/2025

எதிர்க்கருத்து சொன்னால்

 

எதிர்க்கருத்து சொன்னால்
......எதிரிபோல் எண்ணி
எதிர்க்கின்றார் இங்கே
......இழிவாய்- விதிமீறி
வீட்டில் மலம்கொட்டி
......வீட்டை நொறுக்குவதே
நாட்டின் நிலையிங்கு
......நம்பு!

✍️செ. இராசா

(சவுக்கு சங்கரின் வீட்டில் நடந்த நிகழ்வை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்)

20/03/2025

என்னய்யா ஊரிது?

 


என்னய்யா ஊரிது?
வெத்தலை கொடுய்யான்னா
வெறிச்சில்லப் பார்க்குறாங்கே..
அதெல்லாம் விக்கிறதில்லையாம்
அது சரின்னு
அங்கே இங்கேன்னு அலைஞ்சு
ஒருவழியாக் கண்டுபிடிச்சா
வெத்தலை இருக்காமாம்; ஆனால்
சுண்ணாம்பு இல்லையாம்...
அப்புறம் எதுக்கு..வெத்தலைன்னா
சாமிக்குப் படைக்கவாம்....
அடேய் கருப்பா...
இனி உனக்கும் கிடையாதா சுண்ணாம்புன்னேன்...

அதுக்கு மக சொல்றா
ஆன்லைனில் ஆர்டர்போடவாம்...

✍️செ. இராசா

16/03/2025

செந்தமிழ் கொஞ்சம் கவியே

 

செந்தமிழ் கொஞ்சம் கவியே
உன் கோபம் அற்புத மொழியே
நற்றிணை யாவுன் விழியே
நர்த்தனம் ஆடுது தனியே

தாரகையே நீதான்டி
தாரமென வாயேன்டி
சம்மதத்த தாயேன்டி
சங்கதியச் சொல்லேன்டி
என் சொந்தமே...
சொந்தமே....நீதான்டி

அடிக்கடி அடிக்கடி அடிமனம்
துடிக்குது
எதுக்கடி எதுக்கடி இடியென அதிருது ஓஹோ..
அடி இதுதான் காதலா
உயிர் இரண்டின் மோதலா
வலி மிகுமே ஊடலால்
வழி வருதே கூடலால்
என் சொந்தமே... என் சொந்தமே கவியென வா

மேகதூதம் படிக்க
மேனியை நான் பார்த்திட வா
வெட்டும் மின்னல் ரசிக்க
கொஞ்சம் புன்னகை காட்டிட வா

ஏ மலரும் தேனை ருசிக்க
எந்த வண்டுக்கும்
சேதிகள் சொல்லிடுமா
சந்தோச தியானம் நடத்த
இது உன் தனிமலர் அல்லவா?

கன்னி மனதை பிடிக்க
ஏன் கதகளி ஏதும் பழகனுமா?
அன்பை அள்ளி விதைக்க
அட அனுபவம் அவசியமா?

ஓ...இதுதான் காதல் உணர்வா
என் உயிரும் கொதிக்குது கனலா
வா தனிக்கும் காதல் மழையாய்
வலம் வருவோம் கொஞ்சும் அலையாய்..

✍️செ. இராசா

கண்ணாலே காண்பதும் பொய்

 

கண்ணாலே காண்பதும் பொய்
காதாலே கேட்பதும் பொய்
எண்ணாமல் நம்பாதே
எல்லாம் பொய்பொய்- இங்கே
எல்லாம் பொய் பொய்!
ஊடகத்தின் சாட்சிகொண்டே.‌..
ஊரை ஏய்க்கும் கூட்டமிங்கே...
நாடகத்தை நம்பவைத்தே
நம்மை (ஆண்ட) ஆளும் ஆட்களிங்கே...
AI காலம் வந்த பின்னே
பொய்யும் மெய்யாய் உலவுதிங்கே
AI மூலம் பாடிக் கொண்டே
ஏய்க்கும் வேலை நடக்குதிங்கே...

14/03/2025

தலைக்கவசம்

 

தலைக்கவசம் அணிங்கன்னா...
தலைக்குப் பொருந்தலைன்னேன்
அப்ப வண்டிய யாரு ஓட்றதுன்னா..
அப்படினா நீயே ஓட்டுன்னேன்...

என்ற பொண்டாட்டியா
இந்த ஊர்ல ஓட்டுதுன்னு
சுயப்படம் எடுக்கலாம்னு
கைதூக்க நினைச்சா
விர்றுன்னு போனதுல
வேகமா வந்துட்டோங்க...

அட...
அடுத்தநாள் பாருங்க
அரசாங்க அறிவிப்பு...
இணைப்பாக் கூடவே
இருவரோட ஒளிப்படமும்...

ஆச்சரியம் போங்க..
அடையாளம் தெரியாத
அந்தப் படத்திற்கு
ஆயிரம் ரூபாயாம்...
அடக் கொடுமையே....

✍️செ. இராசா

(சென்னை மாநகரில் பின்னாடி உள்ளவர்கள் தலைக்கவசம் போடலைன்னா 1000/-ரூ அபராத அறிவிப்பு சுடச்சுட உடனேயே வருகிறது உறவுகளே....ஜாக்கிரதை)

13/03/2025

 


உயரவில்லை இன்னுமென
ஓரெண்ணம் வந்தால்
உயர்வான மூங்கிலைப்பார்
உற்று- வியந்திடுவீர்
ஐந்தாண்டில் இல்லா
அதன்வளர்ச்சி மண்ணின்மேல்
ஐந்தாறு வாரம்தான்
ஆம்!

10/03/2025

இருக்கிற வரைக்கும் இறைவன் என்பார்

 

இருக்கிற வரைக்கும் இறைவன் என்பார்
....இருப்பது போனால் இகழ்ந்திடுவார்!
வருகிற வரைக்கும் வரட்டும் என்பார்
....வருவது நின்றால் மறைந்திடுவார்!
தருகிற வரைக்கும் தருமன் என்பார்
...தருவது குறைந்தால் சபித்திடுவார்!
அருகினில் இருக்கையில் அம்சம் என்பார்
...அகன்றவர் சென்றால் அவனா..ம்பார்!
✍️செ. இராசா

06/03/2025

தூக்கிச் சுமப்பவனின்

 


தூக்கிச் சுமப்பவனின்
........தோள்வலியை யாரறிவார்?
ஊக்கம் குறையாமல்
........ஓடுகின்றார்- தூக்கமின்றி
பெற்றோர்க்காய் பெற்றதற்காய்
........பெண்டுக்காய் உற்றார்க்காய்
மற்றோர்க்காய் வாழ்கின்ற
........வாழ்வு!

03/03/2025

புதியதாய்ப் பிறக்கிறேன்!

 

புதியதாய்ப் பிறக்கிறேன்! புயலெனக் கடக்கிறேன்
...புரிந்ததை விதைக்கிறேன்! புதுவிதி சமைக்கிறேன்!
முதியதாய்ப் படைக்கிறேன்! முதுமையை மதிக்கிறேன்!
...முடிந்ததை முயல்கிறேன்! முறைவழி நடக்கிறேன்!
நதியென நகிர்கிறேன்! நளினமாய்த் தெரிகிறேன்!
..நடப்பதை உரைக்கிறேன்! நடிப்பதை வெறுக்கிறேன்!
மதிப்பதை மதிக்கிறேன்! மலர்வதைத் தருகிறேன்!
..மறைவதை உணர்கிறேன்! மறுபடி பிறக்கிறேன்!
✍️செ‌. இராசா