20/11/2024

எப்பொருள் யார்வாட்சப்

 


எப்பொருள் யார்வாட்சப் செய்யினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

✍️செ. இராசா

முற்றிலும் பொய்யான தகவலைப் பரப்புகின்றனர் உறவுகளே...

இதுபற்றி எனக்கு இரண்டுபேர் இன்று அனுப்பி வைத்தனர். கத்தாரில் மரமே இல்லையென்று யார் சொன்னது?!. முற்றிலும் பொய்யான தகவல் இது.
யாருக்கு சந்தேகமோ வாங்க‌...நான் காட்டுகிறேன்

19/11/2024

பெற்றவர் வாழ்த்தவே

 

பெற்றவர் வாழ்த்தவே
....சுற்றமும் போற்றவே
......பெற்றவை போத வில்லையே!
பற்றிட எண்ணுதே
.....அற்பனின் உள்ளமே
.......பற்றிடும் நேரம் தொல்லையே!
கற்றவைக் கொஞ்சமே
....கற்பனை விஞ்சுமே
........கற்றிடக் காலம் எல்லையே!
உற்றதைக் கொள்ளவே
......மற்றதைத் தள்ளவே
.......உற்றுணர் ஞானம் வல்லையே!

18/11/2024

பிரபலங்கள் யார்க்கும்

 

பிரபலங்கள் யார்க்கும் பிறபலன்கள் உண்டாம்

தரமற்ற செய்தியைத் தள்ளு

14/11/2024

அணுமுதல் அண்டமாய் ஆனவன் நீயே!

 


அணுமுதல் அண்டமாய் ஆனவன் நீயே!
சிணுங்கிடும் பிஞ்சிலே தேனுமிழ் நீயே!
கதிரவன் தீயிலே காண்பவன் நீயே!
மதியிலே மார்க்கமாய் வந்தவன் நீயே!
தமிழனைக் காட்டிடும் சான்றுகள் நீயே!
நிமிர்ந்திட வைத்திடும் வள்ளுவம் நீயே!
கவியிலே கண்டிடும் கற்பனை நீயே!
செவியிலே கேட்டிடும் சப்தமும் நீயே!
அருவமாய் ஆகிய ஆதியும் நீயே
இருள்வினை நீக்குவா யே!
✍️செ. இராசா

11/11/2024

குறைகூறும் கூட்டத்தை

 

குறைகூறும் கூட்டத்தைக்
....குறையென்றே எண்ணாமல்
.......குறிக்கோளை நீ அடைவாய்!
மறைகூறும் ஞானத்தை
.....மடைமாற்றிப் பாராமல்
........மனமேற்றி நீ எழுவாய்!
பறைசாற்றும் வீரத்தை
.....பதிலென்றே எண்ணாமல்
........படியேறிப் பதிலளிப்பாய்!
இறைதேடும் நாட்டத்தில்
......இமியளவும் சோராமல்
..........இனியேனும் விரைந்திடுவாய்!

09/11/2024

வாய் செய்யும் தவறு

 

வாய் செய்யும் தவறுக்குத்
தண்டனை அனுபவிக்கிறது
வயிறு

07/11/2024

நிலையாமைப் பத்து


உன்முன்னே வந்தவரும் உன்னோடே வந்தவரும்
இன்றெங்கே உள்ளார் இயம்பு?
(1)

உன்பின்னே யாரென்றும் உம்மோடு யாரென்றும்
என்றறிவோர் யாரோ இயம்பு?
(2)

வந்தவர்கள் போகுமிடம் வாராதோர் வாழுமிடம்
எந்தயிடம் கண்டால் இயம்பு?!
(3)

சென்றவர்கள் சொன்னதில்லை செல்பவர்கள் சொல்லயில்லை
என்னவழி உண்டோ இயம்பு?
(4)

வந்தவரும் சென்றவரும் வந்துவந்து சென்றுவிட்டால்
தந்தவர்யார்? வாடகையைத் தா!
(5)

இந்தா எனத்திரும்பி இப்போது பார்த்தாலோ
முந்திவந்து தள்ளிவிடும் மூப்பு!
(6)

பள்ளி மறவாத பாலகனாய் நானிருக்கப்
பள்ளி முடித்தமகன் பார்
(7)

உயர்ந்த இலக்கிற்காய் ஓடுகின்ற கால்கள்
வயதை உணராது நம்பு
(8)



நீர்க்குமிழி வாழ்வில் நிஜமாக நிற்பதென்ன
பேர்சொல்லும் செய்கைதான் பேறு
(9)

வந்தபின் தங்கி மறுபடியும் போவதெனும்
மந்தை வழிமுறையை மாற்று!
(10)

06/11/2024

காட்டில் இருந்தவனின் கால்களை

 

காட்டில் இருந்தவனின்
.... கால்களைக் கட்டிவைத்துக்
கூட்டில் அடைத்திடவா
...கொண்டுவந்தீர்- நாட்டமுற
என்னாசி வேண்டுகின்ற
....என்னருமை தோழர்காள்!
என்னை விடுவிப்போர்
....யார்?

சுற்றித் திரிந்த
......சுதந்திரத்தைப் பூட்டிவிட்டுக்
கற்றுக் கொடுத்தீர்
..‌.....கலையொன்றை- அற்புதமாய்
நிற்கும் இடம்நின்றே
.......நிம்மதியாய் வாழ்வதற்கு
மற்றவர்மேல் து(ந)ம்பிக்'கை
......வை!

04/11/2024

எப்போதும் நீயே கொடுக்கிறாயா?

 

எப்போதும் நீயே கொடுக்கிறாயா?
கொஞ்சம் நிறுத்திப்பார்...
வள்ளல் என்ற வாயெல்லாம்
கஞ்சன் எனச்சொல்லும்!
எப்போதும் இற(ர)ங்குகிறாயா?
கொஞ்சம் மாற்றிப்பார்...
உறவெனச் சொன்னதெல்லாம்
உதறிவிட்டுப் போகும்!
எப்போதும் சகித்துக் கொள்கிறாயா?
கொஞ்சம் முறைத்துப்பார்..
பழகிய உறவெல்லாம்
பாடம் புகட்டிவிடும்!
எப்போதும் இயங்குகிறாயா?
கொஞ்சம் மௌனித்துப்பார்..
பாராட்டிய கூட்டமெல்லாம்
பாராமல் போகும்!

03/11/2024

சேவலும் கோழியும் என்ன பேசி இருக்கும்.

 


என்னையப் பார்க்காம
.....எங்கடி பாக்குற
உன்னத்தான் கேட்கேன்
......ஒழுங்காசொல்- என்னன்னு
கொண்டை பெருத்தவன்லாம்
......கொத்தீட்டு போகவா
அண்ட இடங்கொடுத்தேன்
.....அன்று?!

பம்பாவில் அவதரித்து

 

பம்பாவில் அவதரித்து
......பந்தளம் குடிபுகுந்து
அம்பாரி மேலவந்த ஐயப்பா-உன்னை
நம்பியவர் கெடுவதுண்டோ ஐயப்பா!

வலிக்கு மருந்தென்று
.....புலிப்பால் கொணர்ந்தன்று
புலிமேல் ஏறிவந்த ஐயப்பா-உன்னைப்
புரிஞ்சவுங்க பயந்ததுண்டோ ஐயப்பா!

சாமி சரணம் ஐயப்பா!
ஐயப்ப சரணம் ஐயப்பா!
வாழ்வு வரணும் ஐயப்பா
வணங்கும் சாமி நீயப்பா....
சாமியே ஐயப்போ
.....ஐயப்போ சாமியே
சாமியேய்...சரணமய்யப்பா

வாபரின் தோழனான
.....சாஸ்தா எங்க சாமி
ஆபத்தில் ஓடிவரும்
......ஐயா எங்க சாமி
அழுத மலையேத்தும்
.....அப்பா நம்ம சாமி
அழுத்த வினைநீக்கத்
.....தப்பாதெங்க சாமி

கரிமலை நீலிமலை
.....கடந்துவாறோம் சாமி
கருப்பண்ண சாமியையும்
.....வணங்கிவாறோம் சாமி
பதினெட்டாம் படியேறி
......பார்க்க வாறோம் சாமி
கதியத்த எங்களநீ
......காக்கவேணும் வாநீ

02/11/2024

வருவதும் போவதுமாய்

 

வருவதும் போவதுமாய்
....வந்துவந்து போகும்
கருமம் பிடிச்சயிந்தக்
....காய்ச்சல்- இருக்கிறதே
கார்த்திகையில் கைகோர்த்தால்
....கட்டாயம் தங்கிவிட்டு
மார்கழியின் பின்தான்
.....விடும்!

உயிரணுவை ஊசிமூலம் செலுத்துறான்

 

உயிரணுவை ஊசிமூலம்
செலுத்துறான்- பாவம்
உயிர்களோட சுதந்திரத்தைப் பறிக்கிறான்!

பாலுக்காக பசுக்களைத்தான் வதைக்கிறான்- பாவம்
காலுக்குள்ள மெஷினைமாட்டி கறக்குறான்!

பாலு மாட்டுப் பந்தம்- பால்
கறக்குவரை சொந்தம்!
காளை மாட்டு சொந்தம்-அது
கறிக்கடைக்கே என்றும்....

இதுக்குப் பேச யாரு- அட
இங்கே இருக்காக் கூறு?

ஆசையில்லை ஆசையில்லை ஆசையென்ப தில்லையே‌..

 

ஆசையில்லை ஆசையில்லை ஆசையென்ப தில்லையே‌..
ஆசைகொள்ளும் சூழலுள்ளே வாழுகின்ற போதிலும்
ஆசையில்லை ஆசையில்லை ஆசையென்ப தில்லையே‌
காசையள்ளி லஞ்சமென்று கொட்டுகின்ற போதிலும்
ஆசையில்லை ஆசையில்லை ஆசையென்ப தில்லையே‌
ஓசையின்றி சேட்டைசெய்யும் ஆட்களுள்ள போதிலும்
ஆசையில்லை ஆசையில்லை ஆசையென்ப தில்லையே‌
மீசையின்னும் வெள்ளையின்றி காட்சிதந்த போதிலும்
ஆசையில்லை ஆசையில்லை ஆசையென்ப தில்லையே‌