உன்முன்னே வந்தவரும் உன்னோடே வந்தவரும்
இன்றெங்கே உள்ளார் இயம்பு?
(1)
உன்பின்னே யாரென்றும் உம்மோடு யாரென்றும்
என்றறிவோர் யாரோ இயம்பு?
(2)
வந்தவர்கள் போகுமிடம் வாராதோர் வாழுமிடம்
எந்தயிடம் கண்டால் இயம்பு?!
(3)
சென்றவர்கள் சொன்னதில்லை செல்பவர்கள் சொல்லயில்லை
என்னவழி உண்டோ இயம்பு?
(4)
வந்தவரும் சென்றவரும் வந்துவந்து சென்றுவிட்டால்
தந்தவர்யார்? வாடகையைத் தா!
(5)
இந்தா எனத்திரும்பி இப்போது பார்த்தாலோ
முந்திவந்து தள்ளிவிடும் மூப்பு!
(6)
பள்ளி மறவாத பாலகனாய் நானிருக்கப்
பள்ளி முடித்தமகன் பார்
(7)
உயர்ந்த இலக்கிற்காய் ஓடுகின்ற கால்கள்
வயதை உணராது நம்பு
(8)
நீர்க்குமிழி வாழ்வில் நிஜமாக நிற்பதென்ன
பேர்சொல்லும் செய்கைதான் பேறு
(9)
வந்தபின் தங்கி மறுபடியும் போவதெனும்
மந்தை வழிமுறையை மாற்று!
(10)
No comments:
Post a Comment