நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடையும் நாட்கள் என்று சொன்னால், கண்டிப்பாக அதுநான் புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ளும் நாளையே சொல்வேன். அந்தவகையில் நேற்றுநான் புதிதாக கற்றுக் கொண்டது மட்டுமல்ல, அடச்சே இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே என்று வருத்தமும்பட்டேன். ஆமாங்க.... உண்மைதான். பீடிகையெல்லாம் போடாமல் சம்பவத்திற்கு வருகிறேன்.
நேற்று அலுவலகம் செல்ல எனது (Car) வாகனத்தை எடுத்தால், அதில் ஒரு சக்கரத்தில் காற்று இல்லை என்றக் குறியீடு வந்தது. சரியென்று அருகேயிருந்த பெட்ரோல் வங்கிக்குப் போனால், வழக்கமாகக் காற்று நிரப்பும் நிலையத்தில் யாருமே இல்லை. கேட்டால்.... இலவசத் தானியங்கி இயந்திரத்தில் நாமே பிடித்துக் கொள்ளலாம் என்றார்கள். அட..இது என்னடா சோதனையென்று நிரப்பப் போனால், காற்றழுத்தம் குறைந்து கொண்டே வருகிறது. அப்போது அருகே இருந்த பாகிஸ்தானி "என்ன பாய்...காற்றெல்லாம் வெளியே விடுகிறாய்" என்று அதட்டி அவரே நிரப்பியும் தந்தார். அவருக்கு ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அப்படியே அலுவலகம் சென்றேன்.
நடந்த நிகழ்வைப்பற்றி நம்ம இராமநாதபுரம் நண்பர் விஜி செல்வத்திடம் பகிர்ந்தேன். அப்போது அவர் "ஏன் சார் நீங்க உங்கப் புது வண்டிக்கு நைட்ரஜன் ஏர் தானே நிரப்புறீங்க?" என்று கேட்டார். நான் உடனே "நைட்ரஜன் ஏரா?! புரியவில்லையே..." என்றேன். அவர்தான் அதுபற்றிய விபரங்களை இப்படி அடுக்கினார். அதாவது சாதாரண காற்று அடித்தால் ஆகும் அசௌகரியம் இதில் இல்லையென்று பின்வருமாறு விளக்கினார்;
1. தொலைதூரம் ஓட்டினாலும், வெயிலில் ஓட்டினாலும் இயல்பாக உண்டாகும் வெப்பம் டயரில் ஏற்படாது. எப்போதும் குளிராக இருக்கும்.
2. வெப்பத்தால் டயர் வெடிக்கும் அபாயம் இதில் இல்லை.
3. அடிக்கடி காற்று பிடிக்கும் தேவை இருக்காது. காரணம் நைட்ரஜன் அவ்வளவு எளிதாகக் கசியாது.
4. அடையாளத்திற்காக பச்சை மூடி போடுகிறார்கள். நைட்ரஜன் ஏற்றிய டயரில் வேறு வழியில்லையென்றால் வேறு காற்றும் ஏற்றலாம்.
5. வாகனம் மிதப்பதுபோல் பயணிப்பதால் மைலேஜும் கொடுக்குமென்று அடுக்கினார்.
உண்மையிலும் உண்மைதாங்க. நானும் வாகனம் ஓட்டும்போது கவனித்தேன். குறிப்பாக மண் சாலையில் நன்றாகவே உணர முடிந்தது. அடச்சே இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சேப்பா...?!!
அதான் சொல்லுவாங்க அறிய அறியத் தெரிவது யாதென்றால் நாம் அறியாத அறியாமையே என்று. சரிதானே?!!
ஒரே ஒரு குறைதாங்க. என்னன்னா நைட்ரஜன் காற்று ஏற்ற கொஞ்சம் காசு அதிகம்தான். ஆயினும் சௌகரியம், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது நைட்ரஜன் காற்றுக்குக் கொடுக்கும் விலை சரியென்றே சொல்வேன். இருப்பினும் நிறைய நபர்கள் போட்டி போட்டு நிரப்பினால் ஒருவேளை விலை குறையலாம்தானே?!!
No comments:
Post a Comment