30/09/2024

கற்றது கையளவு

 

No photo description available.

கற்றது கையளவு

நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடையும் நாட்கள் என்று சொன்னால், கண்டிப்பாக அதுநான் புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ளும் நாளையே சொல்வேன். அந்தவகையில் நேற்றுநான் புதிதாக கற்றுக் கொண்டது மட்டுமல்ல, அடச்சே இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே என்று வருத்தமும்பட்டேன். ஆமாங்க.... உண்மைதான். பீடிகையெல்லாம் போடாமல் சம்பவத்திற்கு வருகிறேன்.
நேற்று அலுவலகம் செல்ல எனது (Car) வாகனத்தை எடுத்தால், அதில் ஒரு சக்கரத்தில் காற்று இல்லை என்றக் குறியீடு வந்தது. சரியென்று அருகேயிருந்த பெட்ரோல் வங்கிக்குப் போனால், வழக்கமாகக் காற்று நிரப்பும் நிலையத்தில் யாருமே இல்லை. கேட்டால்.... இலவசத் தானியங்கி இயந்திரத்தில் நாமே பிடித்துக் கொள்ளலாம் என்றார்கள். அட..இது என்னடா சோதனையென்று நிரப்பப் போனால், காற்றழுத்தம் குறைந்து கொண்டே வருகிறது. அப்போது அருகே இருந்த பாகிஸ்தானி "என்ன பாய்...காற்றெல்லாம் வெளியே விடுகிறாய்" என்று அதட்டி அவரே நிரப்பியும் தந்தார். அவருக்கு ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அப்படியே அலுவலகம் சென்றேன்.
நடந்த நிகழ்வைப்பற்றி நம்ம இராமநாதபுரம் நண்பர் விஜி செல்வத்திடம் பகிர்ந்தேன். அப்போது அவர் "ஏன் சார் நீங்க உங்கப் புது வண்டிக்கு நைட்ரஜன் ஏர் தானே நிரப்புறீங்க?" என்று கேட்டார். நான் உடனே "நைட்ரஜன் ஏரா?! புரியவில்லையே..." என்றேன். அவர்தான் அதுபற்றிய விபரங்களை இப்படி அடுக்கினார். அதாவது சாதாரண காற்று அடித்தால் ஆகும் அசௌகரியம் இதில் இல்லையென்று பின்வருமாறு விளக்கினார்;
1. தொலைதூரம் ஓட்டினாலும், வெயிலில் ஓட்டினாலும் இயல்பாக உண்டாகும் வெப்பம் டயரில் ஏற்படாது. எப்போதும் குளிராக இருக்கும்.
2. வெப்பத்தால் டயர் வெடிக்கும் அபாயம் இதில் இல்லை.
3. அடிக்கடி காற்று பிடிக்கும் தேவை இருக்காது. காரணம் நைட்ரஜன் அவ்வளவு எளிதாகக் கசியாது.
4. அடையாளத்திற்காக பச்சை மூடி போடுகிறார்கள். நைட்ரஜன் ஏற்றிய டயரில் வேறு வழியில்லையென்றால் வேறு காற்றும் ஏற்றலாம்.
5. வாகனம் மிதப்பதுபோல் பயணிப்பதால் மைலேஜும் கொடுக்குமென்று அடுக்கினார்.
உண்மையிலும் உண்மைதாங்க. நானும் வாகனம் ஓட்டும்போது கவனித்தேன். குறிப்பாக மண் சாலையில் நன்றாகவே உணர முடிந்தது. அடச்சே இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சேப்பா...?!!
அதான் சொல்லுவாங்க அறிய அறியத் தெரிவது யாதென்றால் நாம் அறியாத அறியாமையே என்று. சரிதானே?!!
ஒரே ஒரு குறைதாங்க. என்னன்னா நைட்ரஜன் காற்று ஏற்ற கொஞ்சம் காசு அதிகம்தான். ஆயினும் சௌகரியம், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது நைட்ரஜன் காற்றுக்குக் கொடுக்கும் விலை சரியென்றே சொல்வேன். இருப்பினும் நிறைய நபர்கள் போட்டி போட்டு நிரப்பினால் ஒருவேளை விலை குறையலாம்தானே?!!


ers

ஒவ்வொரு நாட்களுமே புதியதுவே


ஒவ்வொரு நாட்களுமே புதியதுவே
மாறாமல் தினந்தோறும் பிறக்கிறதே
ஒவ்வொரு வலிகளுமே சொல்கிறதே
தீதான வினையாவும் கழிகிறதே
என்னதான் நடந்திடும் இன்னும் நடக்கட்டுமே..
சுற்றிடும் சக்கரம் யாவும் சுழலட்டுமே
வருமே ஓ வருமே நம் காலமுமே
பொறுமே நீ பொறுமே வினை தீரட்டுமே 

29/09/2024

முருகா


No photo description available.
தமிழாய் இனிதாய்த்
.....தனியாய் வருவாய்
அமிழ்தாய்ப் பொழிவாய்
.....அருளாய்க்- குமிவாய்
கலையாய் அழகாய்
.....கவியாய் நிறைவாய்
மலையாய் உயர்த்துவா
....யே!
முருகா குமரா
...முதலாம் கிழவா
சருகா துளிரா
....தனையார்ப்-புரிவார்?
தனியாய் அமர்வோர்
....தனிலே உறைவோர்
இனிதே அறிவார்
......இசைந்து!
கந்தா கடம்பா
.....கதிர்வேலா கேளாயோ!
இந்தா எனநான்
......எதனையும்- தந்தால்
அனைத்தும் உனதே!
.....அதனால் இறைவா
எனைத்"தான்" தருவேன்
.....இனி!

(மனைவியின் விருப்பத்திற்கிணங்க எழுதிய வெண்பாக்கள்)

All reactions:
Ammansathish, Sri Vinoth Kannan and 64 others

 

25/09/2024

உசுர கொடுக்கும் உறவ

 பல்லவி

உசுர கொடுக்கும் உறவ- நாம்
மதிப்போம் உசுருக்கும் மேல‌
பழச மறக்கும் உறவ -நாம்
மறப்போம் பிசிறுக்கும் கீழ..
என்ன சொன்ன?!
பிசிறு...பிசிறு...
ஓ... எனக்குக் காதுல தப்பாக் கேட்டுச்சுப்பா
மாறாத நட்பின் துணையிருக்கு- அதுக்கு
மாறாக என்ன உறவிருக்கு?
தீராத காயம் பலயிருக்கு- கானல்
நீரான சேர்க்கை நமக்கெதுக்கு?
விடுவிடுடா முடிவெடுடா
புயலனவே புறப்படுடா
விடைகொடுடா விரைந்தெழுடுடா
புதுவழியே புகுந்திடடா
முடிந்ததடா கழிந்ததடா
வினையெனவே நினைந்திடடா..
நடக்கும் நடக்கும் நல்லதே நடக்கும்
நினைக்கும் படியே அது நடக்கும்
கிடைக்கும் கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
முயற்சி தொடர்ந்தா அது கிடைக்கும்
சொந்தம் பந்தம் ஒன்னும் செய்யவில்லை
இங்கே மட்டும் இன்னும்
விடியவில்லை
பஞ்சப் பாட்டு பாடிக்கிட்டே
திரிய வேணுமா? இல்லை
நெஞ்சத் தூக்கி
நிக்காமநீ ஓட வேணுமா?!
விடுவிடுடா முடிவெடுடா
புயலனவே புறப்படுடா
விடைகொடுடா விரைந்தெழுடுடா
புதுவழியே புகுந்திடடா
முடிந்ததடா கழிந்ததடா
வினையெனவே நினைந்திடடா..

22/09/2024

நண்பன் என்ன எதிரி என்ன


நண்பன் என்ன எதிரி என்ன
...நகரும் வாழ்வில் யாரடா?!
நண்பன் மாறி எதிரி யாகும்
...நடப்பைக் கூர்ந்து நோக்கடா!
உண்மை நட்பு தோற்ப தில்லை
...உரைத்த மாந்தர் யாரடா?
உண்மை கூட வெல்வ தெங்கே
... உரக்க நீயும் கேளடா?!
போக விட்டுப் புறணி பேசி
....புகையும் மாந்தர் யாரடா?
சாக விட்டுப் பெருமை பேசும்
... சகத்தை எண்ணிப் பாரடா...
தேகங் கெட்டு தெருவில் வந்து
... திரியும் கூட்டம் யாரடா?
போகம் தேடி போதை ஏற்றி
.....புரளும் மாந்தர் தானடா... 

நம்புகிற விடயத்தில்

 

நம்புகிற விடயத்தில்
......நகையாடல் பண்ணுவது
நாகரிகம் இல்லை நண்பா!

வெம்புகிற இதயத்தில்
.......நெருப்பள்ளிப் போடுவது
வேதனையின் உச்சம் நண்பா!

வம்புவரும் பதிவுகளில்
.......மனமகிழ்ச்சி கொள்ளுவது
நற்செயலே இல்லை நண்பா!

தெம்புதரும் பதிவுகளைத்
.......தெளிவடையப் போடுவது
தீர்வுதரும் செய்கை நண்பா!

20/09/2024

குடியைக் கெடுக்கும் குடியே

 


தொகையறா
தமிழினமே ஒன்றுபடு
எழுச்சித் தமிழர் அழைக்கின்றார்
மது ஒழிப்பு மாநாடு
மக்கள் சேவகர் அழைக்கின்றார்..

எத்தனையோ தாய்மார்கள்
ஏங்கியழும் துயர் கண்டு
திசைமாறும் தலைமுறையைத்
திருப்பிவட மனம் கொண்டு
திருமா அண்ணன் அழைக்கின்றார்...

பல்லவி
குடியைக் கெடுக்கும் குடியே- உன்னை
ஒழிப்போம் தலைவர் வழியே
மதுவை மறக்கும் முடிவை- குரல்
கொடுப்போம் உலகம் அதிர

போராட நெஞ்சில் துணிவிருக்கு- எங்க
திருமா அண்ணன் துணையிருக்கு!
*வேரோட சாய்க்கும் வலுவிருக்கு*- *நம்ம*
*சிறுத்தை போல படையிருக்கு*

விடுவிடுடா குடிவிடுடா
முடிவெடுடா விடைகொடுடா
புதுவழியில் நடநடடா
புயலனவே புறப்படுடா
தனிவழிடா அறவழிடா
தமிழினமே எழுந்திடடா

சரணம்-1
நடக்கும் நடக்கும் நல்லதே நடக்கும்
எழுச்சித் தமிழனால் அது நடக்கும்
அடைக்கும் அடைக்கும் மதுக்கடை அடைக்கும்
போராட்டம் நிற்காது அது வரைக்கும்
கட்சிபேதம் இதில் ஒன்னுமில்லை
வேறநோக்கம் இங்க ஏதுமில்லை
வீட்டுக்கொரு ஆளுயிங்கே குடிக்கவேணுமா- இல்லை
நாட்டுக்கது கேடுயென்று தடுக்கவேணுமா

விடுவிடுடா குடிவிடுடா
முடிவெடுடா விடைகொடுடா
புதுவழியில் நடநடடா
புயலனவே புறப்படுடா
தனிவழிடா அறவழிடா
தமிழினமே எழுந்திடடா

சரணம்-2
தடுப்போம் தடுப்போம் மரணத்தைத் தடுப்போம்
குடியால வரும்நோய உடன் தடுப்போம்
கொடுப்போம் கொடுப்போம் ஒன்றாகக் கொடுப்போம்
இனியேனும் எதிராகக் குரல் கொடுப்போம்!.
தேர்தல்பற்றி இதில் எண்ணவில்லை
போதைவெறி அது நல்லதில்லை
குடிக்கிறத தவறுயென்று தடுக்கவேண்டுமா?- இல்லை
குடிமகனே குடியென்று கொடுக்கவேண்டுமா?

விடுவிடுடா குடிவிடுடா
முடிவெடுடா விடைகொடுடா
புதுவழியில் நடநடடா
புயலனவே புறப்படுடா
தனிவழிடா அறவழிடா
தமிழினமே எழுந்திடடா


17/09/2024

தான்தான் தானென்று


தான்தான் தானென்று
....தற்பெருமை பேசாமல்
...... தன்நிலையை நோக்குவீரோ?!
நான்தான் கோனென்றே
....நான்போல் யாரென்றே
.......நான்பெருமை பாடுவீரோ??
ஏன்தான் வாழ்வென்றே
.... எப்போதும் நெஞ்சுக்குள்
.......எண்ணியதில் மூழ்குவீரோ?
தேன்தான் இஃதென்றே
.....தேள்சிந்தும் நஞ்சினையும்
........ தேவையென கொள்ளுவீரோ?!

16/09/2024

முட்டிமுட்டி மோதிமோதி

 

முட்டிமுட்டி மோதிமோதி
...நொந்துவெந்து போகிறேன்!
பட்டிதொட்டி போயிவென்ற
...பாடலின்னும் வல்லையே..
எட்டியெட்டி ஏறியேறி
...இன்னுமேற பார்க்கிறேன்!
தட்டிதட்டி தோள்கொடுக்கும்
....சூழலொன்றும் வல்லையே...
எண்ணியெண்ணி என்னுளெண்ணி
....இன்னுமிங்கே ஓடுறேன்!
உண்மைவெல்லும் என்றசொல்லை
.....உண்மையாக்கு தெய்வமே..
திண்ணமோடு வேங்கைபோல
......தேடியின்னும் பாய்கிறேன்
மண்ணைவிட்டு போகுமுன்னே
.......வாகைசூட வையுமே‌..🙏

✍️செ. இராசா