22/09/2024

நம்புகிற விடயத்தில்

 

நம்புகிற விடயத்தில்
......நகையாடல் பண்ணுவது
நாகரிகம் இல்லை நண்பா!

வெம்புகிற இதயத்தில்
.......நெருப்பள்ளிப் போடுவது
வேதனையின் உச்சம் நண்பா!

வம்புவரும் பதிவுகளில்
.......மனமகிழ்ச்சி கொள்ளுவது
நற்செயலே இல்லை நண்பா!

தெம்புதரும் பதிவுகளைத்
.......தெளிவடையப் போடுவது
தீர்வுதரும் செய்கை நண்பா!

20/09/2024

குடியைக் கெடுக்கும் குடியே

 


தொகையறா
தமிழினமே ஒன்றுபடு
எழுச்சித் தமிழர் அழைக்கின்றார்
மது ஒழிப்பு மாநாடு
மக்கள் சேவகர் அழைக்கின்றார்..

எத்தனையோ தாய்மார்கள்
ஏங்கியழும் துயர் கண்டு
திசைமாறும் தலைமுறையைத்
திருப்பிவட மனம் கொண்டு
திருமா அண்ணன் அழைக்கின்றார்...

பல்லவி
குடியைக் கெடுக்கும் குடியே- உன்னை
ஒழிப்போம் தலைவர் வழியே
மதுவை மறக்கும் முடிவை- குரல்
கொடுப்போம் உலகம் அதிர

போராட நெஞ்சில் துணிவிருக்கு- எங்க
திருமா அண்ணன் துணையிருக்கு!
*வேரோட சாய்க்கும் வலுவிருக்கு*- *நம்ம*
*சிறுத்தை போல படையிருக்கு*

விடுவிடுடா குடிவிடுடா
முடிவெடுடா விடைகொடுடா
புதுவழியில் நடநடடா
புயலனவே புறப்படுடா
தனிவழிடா அறவழிடா
தமிழினமே எழுந்திடடா

சரணம்-1
நடக்கும் நடக்கும் நல்லதே நடக்கும்
எழுச்சித் தமிழனால் அது நடக்கும்
அடைக்கும் அடைக்கும் மதுக்கடை அடைக்கும்
போராட்டம் நிற்காது அது வரைக்கும்
கட்சிபேதம் இதில் ஒன்னுமில்லை
வேறநோக்கம் இங்க ஏதுமில்லை
வீட்டுக்கொரு ஆளுயிங்கே குடிக்கவேணுமா- இல்லை
நாட்டுக்கது கேடுயென்று தடுக்கவேணுமா

விடுவிடுடா குடிவிடுடா
முடிவெடுடா விடைகொடுடா
புதுவழியில் நடநடடா
புயலனவே புறப்படுடா
தனிவழிடா அறவழிடா
தமிழினமே எழுந்திடடா

சரணம்-2
தடுப்போம் தடுப்போம் மரணத்தைத் தடுப்போம்
குடியால வரும்நோய உடன் தடுப்போம்
கொடுப்போம் கொடுப்போம் ஒன்றாகக் கொடுப்போம்
இனியேனும் எதிராகக் குரல் கொடுப்போம்!.
தேர்தல்பற்றி இதில் எண்ணவில்லை
போதைவெறி அது நல்லதில்லை
குடிக்கிறத தவறுயென்று தடுக்கவேண்டுமா?- இல்லை
குடிமகனே குடியென்று கொடுக்கவேண்டுமா?

விடுவிடுடா குடிவிடுடா
முடிவெடுடா விடைகொடுடா
புதுவழியில் நடநடடா
புயலனவே புறப்படுடா
தனிவழிடா அறவழிடா
தமிழினமே எழுந்திடடா


17/09/2024

தான்தான் தானென்று


தான்தான் தானென்று
....தற்பெருமை பேசாமல்
...... தன்நிலையை நோக்குவீரோ?!
நான்தான் கோனென்றே
....நான்போல் யாரென்றே
.......நான்பெருமை பாடுவீரோ??
ஏன்தான் வாழ்வென்றே
.... எப்போதும் நெஞ்சுக்குள்
.......எண்ணியதில் மூழ்குவீரோ?
தேன்தான் இஃதென்றே
.....தேள்சிந்தும் நஞ்சினையும்
........ தேவையென கொள்ளுவீரோ?!

16/09/2024

முட்டிமுட்டி மோதிமோதி

 

முட்டிமுட்டி மோதிமோதி
...நொந்துவெந்து போகிறேன்!
பட்டிதொட்டி போயிவென்ற
...பாடலின்னும் வல்லையே..
எட்டியெட்டி ஏறியேறி
...இன்னுமேற பார்க்கிறேன்!
தட்டிதட்டி தோள்கொடுக்கும்
....சூழலொன்றும் வல்லையே...
எண்ணியெண்ணி என்னுளெண்ணி
....இன்னுமிங்கே ஓடுறேன்!
உண்மைவெல்லும் என்றசொல்லை
.....உண்மையாக்கு தெய்வமே..
திண்ணமோடு வேங்கைபோல
......தேடியின்னும் பாய்கிறேன்
மண்ணைவிட்டு போகுமுன்னே
.......வாகைசூட வையுமே‌..🙏

✍️செ. இராசா

13/09/2024

நல்லதே ஆனாலும்

 



நல்லதே ஆனாலும்
நான்சொன்னா கேட்பானா?
சொல்லுறவன் சொன்னாத்தான்
ஜோரும்பான்- இல்லைன்னா
பூமரு மாமாம்பான்..
போகுதுபார் டாபரும்பான்..
பேமஷா ஆனாத்தான்
பேரு!

கலோக்கியல் வெண்பா

07/09/2024

ஆனை முகத்தழகு பிள்ளையாரே

 

பொல்லா வினைதீர்க்கும்
......புண்ணியனே! என்றைக்கும்
இல்லார் உடனிருக்கும்
.....ஏகனே- வல்லோனே!
நல்லார் நலம்காக்கும்
.....நாயகனே! நான்கவிக்கும்
சொல்லாய் வருவாய்
.....துணை!
(வேறு)
ஆனை முகத்தழகு பிள்ளையாரே
உங்களாசிய வேண்டுகிறோம் பிள்ளையாரே...
அரச மரத்து-அடிப் பிள்ளையாரே
எங்களாசைய தீர்க்கவேணும் பிள்ளையாரே...
ஓடி உழைக்கின்றோம் பிள்ளையாரே
ஒருவெற்றிதரச் செய்வீரோ பிள்ளையாரே..
தேடித் திரிகின்றோம் பிள்ளையாரே
பெரும்சக்தியென வாரீரோ பிள்ளையாரே
காலமும் நேரமும் வந்துட்டாலே- நல்ல
ஞானமும் யோகமும் வந்திடாதோ?!
ஆர்வமும் வேகமும் வந்துட்டாலே- தெய்வ
ஆசியும் மோட்சமும் வந்திடாதோ?!

05/09/2024

பாக்கியராஜ் சொன்னதுபோல்

 

பாக்கியராஜ் சொன்னதுபோல் .
......பச்சையா சொல்லனும்னா
ஊக்கம் குறையுதெனில்
......ஓர்வழிதான்- நோக்கிங்கே
நாளும் முருங்கைக்காய்
.......நன்றாக சாப்பிட்டால்
நீளுகின்ற வாழ்வமையும்
.......நம்பு

04/09/2024

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு


கற்றவர் சிறக்க வேண்டின்
...கற்பனைப் பெருக வேண்டின்
நற்புகழ் கிடைக்க வேண்டின்
...நல்லவை நடக்க வேண்டின்
சொற்பொருள் பலிக்க வேண்டின்
...சுயவொளி மிளிர வேண்டின்
முற்றிலும் தந்து பாரீர்
...முதல்வனே ஆட்டு விப்பான்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு இப்பாடல் சமர்ப்பணம்

 

ஓம்நமோ நாராயணாய


ஓம்நமோ நாராய
.......ணாயவெனும் மந்திரத்தால்
மேம்படும் வாழ்வுவரும்
.......மேதினியில்- நாம்கூற
என்றுணர்ந்த எம்பெருமான்
.......யாம்பெற்ற மந்திரத்தை
சொன்னதிந்த கோட்டியூர்
........தான்! 

02/09/2024

பத்துமலை வேலவனே!


பத்துமலை ஆள்கின்ற
.....பைந்தமிழ் வேலவனே!
முத்துமலை வந்த
.....முருகனே!- சித்தனே!
முத்தமிழ்க் காவலனே!
.....முக்திதரும் ஆண்டவனே!
வித்தகன் ஆக்காய்
.....விரைந்து!
(1)
நீரில்லா ஊரினிலே
...நீர்பெருகச் செய்தவனே!
நீரின்றி உண்டோ
...நிலமிங்கே!- பாரிங்கே!
வானுயர நிற்பவனே
.....வான்புகழ் கொண்டவனே!
நானுயரச் செய்வாயோ
....வந்து!
(2)
எழுகோண வீட்டில்
.....எழுந்தருளி யுள்ளோன்!
எழுபிறவித் தீதை
.....எரிப்போன்!- முழுமுதலோன்!
ஆறுபடை அத்தனையும்
.....ஐக்கியமாய் ஆனவன்!
மாறுதலைத் தந்திடுவான்
......நம்பு!

(3)