29/10/2024

ஒவ்வொரு கல்லுக்கும் ஓர் அதிர்வலை உண்டு

 

ஒவ்வொரு கல்லுக்கும்
ஓர் அதிர்வலை உண்டு
அது எறியும் கற்களின்
அளவைப் பொறுத்ததுமட்டுமல்ல
வேகத்தைப் பொறுத்ததும்கூட..
ஆம்....
வேகம் அதிகரிக்க அதிகரிக்க
அழுத்தமும் அதிகரிக்கும்
அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க
அதிர்வலைகளும் அதிகரிக்கும்...

குளக்கரையில் அமர்ந்துகொண்டு
கொக்கரித்தால் மட்டும் போதாது
கல்லெறியும் கலையை
முறையாகக் கற்க வேண்டும்...

குதித்துக் குதித்து போக
ஓரவாக்கில் எறிய வேண்டும்
அதேபோல் கல்லும்
சப்படையாக இருக்கவேண்டும்..
நடுவில் பார்த்து எரிந்தால்
வட்ட எல்லையின் அளவு
சற்றேப் பெரிதாய் இருக்கும்

இப்படி
கல்லறியும் கலையை
முறையாகக் கற்றறியுங்கள்...

முக்கியமாக குளங்களில்
மட்டும் எறியுங்கள்
அதைவிடுத்து
உங்களின் இருப்பைக் காட்ட
எங்கள்மேல் எறியாதீர்கள்; ஆம்
எங்கள்மேல் எறியாதீர்-கல்

இல்லை
எறிவதாய் இருந்தால்
சொல்லிவிட்டு எறியுங்கள்...
நாங்களும் தயாராகிக் கொள்கிறோம்
எறிபவரை அடையாளம்காண...

காரணம்
எதிரிகள்கூட
எதிரிருந்துதான் எறிகிறார்கள்..
ஆனால்.....
சில துரோகிகள்தான்...
திடீரென்று எறிகிறார்கள்..

அட..
இதற்காகவெல்லாம்
குளம் கலங்குமா என்ன?
எறியுங்கள்..
எறியுங்கள்...
பாவம்...
உங்களால் அதுதானே முடியும்...

28/10/2024

காலத்தின் கட்டாயம்

 

கட்சிகள் தோன்றுவது காலத்தின் கட்டாயம்
நட்டமென்ன சொல்வீர் நமக்கு?
(1)

கொள்கைத் தலைவரெனக் கோடிட்டு காட்டி:அதில்
தள்ளுவதைத் தள்ளியது சால்பு!
(2)

கூத்தாடி என்றால் குறையென்ன கண்டீர்கள்
மூத்தோர்கள் இல்லையா முன்பு?!
(3)

வருவதாய்ச் சொல்லி வடைசுடுவோர் முன்னே
வருவதும் நல்வரவே வா!
(4)

அரசியல் என்பதென்ன அப்பனின் சொத்தா?!
வரவரத்தான் மாற்றம் வரும்!
(5)

நாளைய தீர்ப்பெழுத நம்பிக்கை கொண்டவரின்
ஊழை எவரறிவார் ஓய்!
(6)

அதைஇதைச் சொல்லித்தான் ஆகின்றார் பின்னே
எதையும் புரிவதில்லை ஏன்?
(7)

உதயநிதி யெல்லாம் உரையாற்றும் காலம்
புதியவிதி செய்வீர் புரிந்து!
(8)



நீட்டி முழக்காமல் நேரடியாய் சொல்லிவிட்டார்
ஆட்சியில் பங்குண்டாம் அங்கு!
(9)

காசுபணம் செய்கின்ற காட்சியும் உள்ளதனால்
தூசில்லை வெற்றித் தொடர்!
(10)

26/10/2024

ஆன்லைனில் ஆர்டர்பண்ணி அடிக்கிறானுங்கோ

 

ஆன்லைனில் ஆர்டர்பண்ணி அடிக்கிறானுங்கோ
பேம்லைட்டில் போவதாக நினைக்கிறானுங்கோ

ஏ-ஒன்னா ஆகனுன்னு துடிக்கிறானுங்கோ
வா-ஒன்னோ போகலான்னு இழுக்குறானுங்கோ..

என்ன ஏஜ் ப்ரோ
சொன்னா கேளு ப்ரோ
வேணாம் பஃப்பு ப்ரோ
தூக்கிப் போடு த்ரோ..

23/10/2024

புதிய தமிழ்த்தாய் வாழ்த்து


ஒலிதோன்றி மொழிதோன்றா
காலத்தே - மண்ணில்
முதல்தோன்றி கிளைபரப்பி
விரிந்தபெரும் தமிழினமே...

கரைதாண்டி கடல்தாண்டா
காலத்தே- நீரில்
கலமேற்றி நிலமேறி
ஆண்டதமிழ்க் குடியினமே

பிறப்பெலாம் ஒன்றென்றும்
பிரிவினைத் தப்பென்றும்
அறமுறைப் போதித்த
வள்ளுவ வழியினமே....

ஊரெலாம் தமதென்றும்
உறவினர் தானென்றும்
சமத்துவம் போதித்த
தனித்துவ மொழியினமே

வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழ் வாழ்க வாழ்கவே
தமிழன் வாழ்க வாழ்கவே
அகிலம் வாழ்த்தவே...
அறங்கள் போற்றவே...
வாழ்கவே வாழ்கவே வாழ்கவே..

22/10/2024

மீன்

மீன்


தசாவதாரத்தில்
முதல் அவதாரமே
மீன் என்னும்
மச்ச அவதாரம்தானே?

பாண்டியர் கொடியில்
பட்டொளி வீசிப் பறப்பதுவும்
இந்த மீன்தானே?

அன்றைய வள்ளுவர் முதல்
இன்றைய கவிஞர்கள்வரை: இன்னும்
கண்களின் உருவகங்கள்
கயல்விழி தானே?

இது
கடல் சூழ் உலகென்றால்
மீன் சூல் கடலென்பேன்...
சரி தானே?!

உங்களுக்கொன்று தெரியுமா?
கல்கத்தாவில் மீனை
அவாவும் சாப்பிடுவா..
அட..அவாவுக்கும்
அவா இருக்கும்தானே
அதுமட்டுமா?!.
மருத்துவத்தில்கூட
மீனுக்கே முக்கிய இடமாம்...

இங்கே
மீனவர்கள் வலையில் மாட்டுவது
வெறும் மீன்கள் அல்ல
பலபேரின் நம்பிக்கை...

இங்கேயும்..
தொண்டைக்குள் தூண்டில்விடும்
நம்பிக்கைத் துரோகங்கள்
இல்லாமல் இல்லை
என்ன செய்ய
சிலபேருக்கு இது பொழுதுபோக்கு
பலபேருக்கு இதுவே பிழைப்பு..

அதிபத்த நாயனார்க்குத்
தங்க மீன் கிடைத்ததாம்....

இரண்டு மீன்களையும்
ஐந்து அப்பங்களையும் கொண்டே
பலபேர் பசி தீர்த்தாராம் இயேசு..

தேனில் ஊறவைத்த மீன்களை
இராமனுக்காய்க் கொண்டுவந்து
பாசத்தைப் படையலிட்டாராம் குகன்!

இப்படி
மீனை வைத்துதான்
எத்தனைக் கதைகள்?!!

மீன் செத்தாக் கருவாடு
நீ செத்தா வெறுங்கூடு
இப்படி
மீனை வைத்துதான்
எத்தனை தத்துவங்கள்?!

தண்ணியில மீனழுதால்
கண்ணீரைக் கண்டது யார்?
இப்படி
மீனை வைத்துதான்
எத்தனை பாடல்கள்?!

யார் சொன்னது.
மீனின் அறிவு குறைவென்று?
கண்ணாலே குஞ்சு பொரிக்கும்
மணத்தாலே இலக்கடையும்
ஒலியாலே உரையாடும்
சுவைகண்டே இரை தேடும்
தொடுமுன்னே விரைந்தோடும்
எனில்..
மீன்களின் அறிவுதான் எத்தனை?

ஆறறிவுள்ளதாய்
அலட்டிக் கொள்ளும் நீங்கள்தான்
கடலையும் பிரித்து
எல்லையென்பீர்..
ஆனால்..
அவைகளுக்கில்லை இல்லை
ஆழமும் நீளமும் மட்டுமல்ல
அகலமும் அகிலமுமே அதன் எல்லை!

மாறுவோம்...
நாமும் அந்த மீனைப்போல...

20/10/2024

வாய்மையில்லை நேர்மையில்லை

 

வாய்மையில்லை நேர்மையில்லை
...வாய்கிழியப் பேசுவான்!
தூய்மையில்லை உண்மையில்லை
... சூதுகவ்வத் தேடுவான்!
ஆய்வதில்லை ஆர்வமில்லை
....ஐந்திலேயே வாழுவான்!
ஓய்வதில்லை சோர்வதில்லை
....ஊறுசெய்யக் கூடுவான்!
திராவிடத்தின் நாடுயென்று
...திட்டமொன்று தீட்டியும்
வராதுயென்று கண்டபின்னே
...நம்மைநம்பச் சொல்கிறான்!
நிராசையுற்ற கட்சியெல்லாம்
...நேர்த்தியாகச் செய்திடும்
திராவகத்தைத் தீர்த்தமென்றே
...தீர்வுசெய்ய வேண்டுமோ?!

19/10/2024

மாட்டுவண்டிப் பந்தயம்

 




தகட தகட தகட தகட தகட தகட தகட
தகட தகட தகட தகட தகட தகட தகட

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட

பல்லவி
அடிச்சு ஓட்டு பிடிச்சு ஓட்டு அடிச்சு பிடிச்சு ஓட்டு
வெடிச்சுக் காட்டு ஜெயிச்சுக் காட்டு வெடியா வெடிச்சுக் காட்டு
யாரு யாரு யாரு யாரு சாரதின்னா யாரு
யாரு யாரு வேற யாரு ஜெயிக்கிறவன் பேரு
தகட தகட.........

சரணம்
பந்தயன்னா சும்மா இல்லை
...படிக்க வேணும் பாடம்
பச்சைப்புள்ளை பருவத்தில
... பழக்கினாத்தான் ஓடும்
கொஞ்ச நேரம் தண்ணிக்குள்ள
....குளிக்க நீந்த விடனும்
இஞ்சி வெள்ளம் வெங்காயத்த
....இடிச்சு இடிச்சுத் தரணும்
நல்ல எண்ணை போட்டுப்போட்டு
....நல்லாய் தேச்சு விடனும்
எல்லாம் கூடி வந்தபின்னே
.... எல்லைக் கோட்டைத் தொடனும் தொடனும்

தகட தகட...

மாட்டின் வகைகள்
மச்சக்காளை மயிலைக்காளை
மஞ்சள்வாலன் முட்டிக்காலன்
கட்டைக்காளை கள்ளக்காளை
காரிக்காளை கத்திக்கொம்பன்
குட்டைச்செவியன் குத்துக்குளம்பன்
கூழைவாலன் கூடுகொம்பன்
நெட்டைக்கொம்பன் நெட்டைக்காலன்
குண்டுக்கண்ணன் கொட்டைப்பாக்கன்
அத்தக்கருப்பன் அழுக்குமறையன்
அணறிகாலன் ஆனைச்சொறியன்
பொட்டைக்கண்ணன் பொங்குவாயன்
பட்டிக்காளை படலைக் கொம்பன்
குட்டைநரம்பன் கொண்டைத்தலையன்
கட்டுக்கொம்பன் கள்ளநாடன்
வட்டைச்செவியன் வள்ளிக்கொம்பன்
வட்டைவிரியன் வெள்ளைக்கண்ணன்
காரிமாடு செவலைமாடு காங்கேயம் காளை மாடு
நாட்டுமாடு நல்லமாடு இதுக்கு ஈடு எந்த மாடு?

தகட தகட....

உரையாடல்
எங்களுக்கு எப்பவும் பேராசைதான்
ஆமாம்....
நல்ல பேர் எடுக்கனும்
எடுத்த நல்ல பேரைக் காப்பத்தனும்
அப்படிங்கிற பேர்....ஆசை மட்டும்தான்

கோரஸ்

வாடிவாசல் வழியேவந்தா அதுதான் ஜல்லிக்கட்டு
அப்படியே அவுத்துவிட்டா அதுவே மஞ்சுவிரட்டு
மாட்டுவண்டி பந்தயந்தான் எங்கவூரு கெத்து
மாறாத ஆளுங்கதான் நம்மளோட சொத்து

#சரணம்_2
பூட்டாங் கயிறப் போட்டதுமே
...பட்டுன்னு கிளம்பும் மாடு
தோட்டாப் போலத் தொட்டதுமே
...சட்டுன்னு பறக்கும் பாரு
ரேக்குளாவில் எப்போதுமே
...நாங்க தாண்டா கில்லி
நாக்குமுக்கா ஆட்டமில்லை
....நீயும் போடா தள்ளி
பத்துதலை வேணுமுடா
....பக்கோட்டியா மாற
ஒத்ததலை பத்தாதுடா
....ஒத்திநீயும் போடா!

தகட...தகட...


சீறி வருது பாரு இது சிவகங்கைக் காளை..
திமிறி வருது பாரு இது சிறாவயல் காளை..
அடங்காத காளை இது அம்மன்பட்டி காளை
தொடவேணாம் வாலை இது தூக்கிடுன்டா ஆளை

✍️செ. இராசா