நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள் நம் மண்ணை விட்டுச் சென்றாலும், அவர்கள் விதைத்த அனைத்தையும் விருட்சமாக்கி நம் கலாச்சாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்து வருகிறோம். ஆம் அப்படி அவர்கள் விதைத்துச் சென்ற ஒன்றுதான் இந்த கேக் வெட்டும் நிகழ்வு. முன்பெல்லாம் பெரிய பெரிய நடிகர்கள் அல்லது அரசியல் தலைவர்கள்தான் தங்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். நாமெல்லாம் அதிகபட்சம் கோவில்தான் சென்று வந்து சாக்லட் அல்லது மிட்டாய் இனிப்புகள் கொடுப்போம். அவ்வளவே.....ஆனால், இப்போது அப்படியா உள்ளது? கிராமம் முதல் நகரம் வரை இந்த பிறந்தநாள் கலாச்சாரம் வெவ்வேறு வடிவங்களில் சென்றுவிட்டது. சிலர் பிரியாணியென்றும், சிலர் டிபனென்றும், சிலர் மதிய வேலையிலும் , சிலர் மாலை வேலையிலும்..பட்டிதொட்டியெங்கும் புட்டி இடித்தும் இடிக்காமலும் இந்த நிகழ்வு சீமைக் கருவேலமரமாய் எங்கெங்கும் பரவியுள்ளது. வசதிக்கேற்றாற்போல் இந்நிகழ்வை எப்படிக் கொண்டாடினாலும், இந்த கேக் வெட்டும் நிகழ்வு மட்டும் இல்லாமல் யாரும் கொண்டாடுவதாக இல்லை.
ஆமாம், இந்த கேக் வெட்டும் கலாச்சாரத்தில் நாம் செய்வது என்ன? மெழுகுவர்த்தி ஏற்றி, அதை வாய்வைத்து ஊதி அணைத்து, அப்புறம் தலையில் எதையெல்லாம் போடணுமா போட்டு, அந்த கிரீம் பூசிய, அதிகக் கலோரி நிறைந்த, உடலுக்கு கேடான மற்ற இத்யாதி இத்யாதி என அனைத்தும் நிரம்பிய கேக்கை ஒரு வெட்டு வெட்டுகிறோம். இதெல்லாம் தேவையா என்கிற கேள்வியே....நம்மை இங்கே அந்நிய படுத்திவிடுவதால், இதற்கு மாற்று உண்டா என்கிற யோசனை எனக்குள்ளே பல நாட்களாக ஓடுகிறது.
ஒன்று அந்த கேக்கை எப்படி ஆரோக்கியமான பதார்த்தமாக மாற்ற முடியும் என்பதே அது. . (எனக்கு சமையல் பற்றிய அறிவுக்குறை உள்ளதால் அதை யாரேனும் கண்டுபிடித்தால் நல்லது). மற்றொன்று இந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பது .. இதை என் வீட்டில் நான் எப்போதோ மாற்றிவிட்டேன். அதாவது ஊதி அணைப்பதற்குப் பதிலாக, ஒரு விளக்கை ஏற்றுவது. ஏன் நல்ல நாளில் அணைக்க வேண்டும். விளக்கை ஏற்றிவிட்டு, சிறிது நேரம் கழித்து பூஜை அறையில் வைத்தால் ஏதாவது தப்பா என்ன?!அதெப்படி மரபை உடைக்கலாமா? புதிதாய்ப் புகுந்த ஒரு பண்பாடு மரபாய் மாறியதென்றால், அந்த மரபை உடைத்து நாம் ஏன் புதிய மரபை உருவாக்கக்கூடாது? உலகம் சிரிக்காதா? ஹா ஹா....இந்த நாகரீக சமுதாயத்தில் தவறெல்லாம் சரியென்றானால் நாம் அம்மரபை துணிந்து உடைப்போமாக.........
செ. இராசா
No comments:
Post a Comment