#நன்மைதரும்_பொய்
நம்பிக்கை ஆக்ஸிஜனாய் நாம்சொல்லும் பொய்யிருந்தால்
தெம்பிற்காய்ச் சொல்லலாம் பொய்
(1)
உண்மையைச் சொன்னால் உயிர்போகும் என்றானால்
உண்மையில் பொய்தானே மெய்
(2)
மனவலி இல்லார்க்கு மாற்றி உரைத்தல்
மனவழி செய்யும் மருந்து
(3)
கவியில் நிறையும் கவிண்மிகு பொய்யால்
கவிச்சுவை கூடிடும் காண்
(4)
ஊடலை வெட்ட உரைக்கின்ற பொய்யெல்லாம்
கூடலின் மெய்க்கான கூட்டு
(5)
இருதலைக் கொள்ளி எறும்பாகிப் போனால்
ஒருபக்கம் சாயாது மெய்
(6)
புகழ்கின்ற வர்ணனைப் பொய்தான் எனினும்
புகழ்கையில் புன்னகை ஏன்?!
(7)
நிலாநிலா ஓடிவா நில்லாமல் என்றே
உலாவரும் பாடலும் பொய்
(8.)
காணா இறைவனா கண்களைக் குத்துவான்?!
ஆனாலும் நன்மைக்கேப் பொய்
(9)
மெய்யாய்த் தெரிகின்ற மெய்யில்லா கானல்போல்
பொய்கூட ஆகாது பொய்
(10)
செ. இராசா
#வள்ளுவர்_திங்கள்_176
13/09/2021
நன்மைதரும் பொய் -------- வள்ளுவர் திங்கள் 176
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment