12/09/2021

இலக்கிய அரங்கில் என் மகன்

 

இன்றைய தினம் மிகப்பெரிய இலக்கிய அரங்கில் என் மகன் கலந்து கொண்டு தன் கன்னிப்பேச்சை இனிதே தொடங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அவனுக்கு இவ்வாய்ப்பை நல்கிய தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவைக்கும்
தலைவர் திரு சேக்கிழார் அப்பாசாமி ஐயா அவர்களுக்கும், தளபதி திரு புருஷோத்தமன். ஜி.கே. ஐயா அவர்களுக்கும், பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் திருமதி முல்லை நாச்சியார் அக்கா அவர்களுக்கும், சிறுவர் மன்றத் தலைமை திருமதி. அம்பிகா குமரன் அவர்களுக்கும் எம் இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
அனைவருக்கும் முதல் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிவேன். அதுவும் பாரதியார் பற்றி பேசக்கிடைக்கும் வாய்ப்பெல்லாம் மிகப்பெரிய விடயம். இப்படியெல்லாம் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் அமைப்பில் அடியேனும் நிர்வாகியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இங்கே பதிவிடுவதன் ஒரே நோக்கம், அனைவரும் தங்களின் குழந்தைகளை அடுத்தடுத்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்பதே..... 💐💐💐
நன்றி நன்றி நன்றி 💐

#பாரதி

 

காலம்

தனக்கான தேவைகளைத்

தானே தீர்மானித்து கொள்கிறது!

 

அது

மந்தை மந்தையாய்

வந்து போவோரை யெல்லாம்

தன்

காலச் சுவட்டில் பதிவேற்றி

கால விரயம் செய்வதில்லை!

 

இவர்களுக்கு முன்

இவர்களுக்குப் பின் என்று

யார் தன்னை வகுக்கிறார்களோ

அவர்களுக்கே இடம் தந்து

அவர்களாலேயே தன்னையும் காட்டுகிறது!

 

ஆம்...

அப்படித் தமிழ் கூறும் நல் உலகில்

அகத்தியர் காலம்

தொல்காப்பியர் காலம்

வள்ளுவர் காலம்

கம்பர் காலம் என்ற புலவர் வரிசையில்

பாரதி காலம் என்று பேசவைத்தாரே...

நம் முண்டாசுக் கவி சுப்பிரமணிய பாரதி

அந்த மாகவி பாரதி பற்றித்தான்

இப்போது பேச வந்துள்ளேன்...

அவையோர் அனைவருக்கும் வணக்கம்!

 

ஒரு காலத்தில் காலூன்றிய இனம்

மறு காலத்தில் சறுக்குவதும்

அந்நேரம் அந்நியர் மேலேறி

அடக்கிட முயல்வதும்

அந்நேரம் சிலரால்

திடீரென புரட்சி வெடிப்பதும்

வரலாற்றுச் சக்கரத்தில்

வாடிக்கையான நிகழ்வே..

 

அப்படி நம் இந்திய துணைக்கண்டம்

ஆங்கிலேயர் பிடியில் சிக்கியபோது

நம்மையெல்லாம் தட்டி எழுப்ப

நம் தாய்த் தமிழ்த்திருநாட்டில்

எட்டையபுரத்தில் இருந்து ஓர் குரல்

எட்டுத்திசைகளிலும் முழங்கியதால்தான்

நம் பாரதி தேசியக் கவி என்றும்

புரட்சிக்கவி என்றும் போற்றப்படுகிறார்!

 

அப்போதெல்லாம் கவிதை பாடியோர்

எப்போதும் போலவே பாடினர்!

இலக்கண வரம்பு மீறாமல்

இலக்கிய சுவை கோணாமல்

யாருக்கோ துதிபாட

யாப்பினைப் பற்றி வந்தபோது

படித்தவர்க்கும் பிடித்தவர்க்குமல்ல கவிதை

பாமரருக்கும் பாட்டாளிகளுக்கும்தான் கவிதை என்று...

புதுக்கவிதையும் வசன கவிதையும் புனைந்து...

புதுவித நடைபோட்டார் நம் பாரதி....

 

"சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்"

 

என்று சாதிகளுக்கு எதிராக சாட்டையடி வரிகளை அமைத்து, அதன்வழி படிக்கும் பிள்ளைகளுக்கு அன்றே புகுத்த நினைத்தவன் பாரதி. இன்று நாம் காணும் கலப்புத் திருமணங்களுக்கு வித்திட்டவரே நம் பாரதிதான்.

 

உண்மையில், அவர் கருத்தை இச்சமூகம் முழுமையாக உள்வாங்கி இருந்தால்...நாம் இந்நேரம் எங்கோ சென்றிருப்போம்.

 

எனக்கு மிகவும் பிடித்த ஒருபாடல்

 

தேடிச் சோறு நிதந் தின்று

பல சின்னஞ் சிறு கதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

கொடுங் கூற்றுக் கிரை எனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?!

 

இப்பாடலில் உள்ள கருத்து யாதெனில்...

வந்தோம்....

தின்றோம்...

பேசினோம்..

வயதானோம்...

செத்தோம்...என்பதல்ல வாழ்வு...

வாழ்ந்தோம்...செத்தாலும் வாழ்வோம் என்பதே...

 

இப்படி...

அவர் பாடிய எத்தனையோ பாடல்கள் பக்தி, ஞானம், பெண்விடுதலை, இலக்கியம் என.. நம்மையெல்லாம் நெறிப்படுத்தி வழிகாட்டக்கூடியவை என்பதால்....அவரின் புகழ் பாடுவதோடு நின்றுவிடாமல்...அவரின் சிந்தைவழி சென்று நம்மை சீர்படுத்தி சிறப்புறுவோம் என்று கூறி

எமக்குப் பேச வாய்ப்பளித்த அனைவருக்கும்

நன்றி கூறி விடைபெறுகிறேன்.

 

நன்றி வணக்கம்!

No comments: