#கொடி
கொடிகட்டி பறந்தான் என்றால்
கோலாச்சியதாய் அர்த்தமாகிறது!
கொடி பறக்குதா.... என்றால்
கொக்கரிப்பின் உச்சமாகிறது!
இங்கே..
கொடி என்பது என்ன?!
நிலத்தை ஆள்வோரின் குறியீடா?!
இல்லை...
நீரோடும் நாவாய்களின் அடையாளமா?!
கோட்டைகளில் கொடி சரி...
கோவில்களில் கொடிக்கம்பம் ஏன்?
ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும்
நிலாவில் கால் வைத்தார்கள் சரி..
அங்கே ஏன் கொடி நட்டார்கள்?
ஹிலாரியும் டென்சிங்கும்
இமயமலையில் ஏறினார்கள் சரி
அவர்களும் ஏன் கொடி நட்டார்கள்?!
கார்கில் மலையோ
கைலாஷ் மலையோ
பற்றிய அடையாளமாய்
பறைசாற்றுவது எது?
கொடிதானே..!
ஆமாம்..
இங்கே ஒவ்வொரு கொடிக்கும்
எத்தனை வரலாறுகள்?!
அண்ணா ஏற்றியது திமுக கொடி
அண்ணாவை ஏற்றியது அதிமுக கொடி
வெள்ளைதான் என்றும் சமாதானக் கொடி
கறுப்போ சிலநேரம் துக்கக் கொடி
சிவப்பு பெரும்பாலும் புரட்சிக் கொடி
நீலமும் மஞ்சளும் சாதியக் கொடி
காவியும் பச்சையும் மதங்களின் கொடி
இராட்டை இருந்தால் காங்கிரஸ் கொடி
சக்கரம் இருந்தால் இந்தியக் கொடி
இங்கே...
எல்லாக் கொடிகளையும்
எல்லோரும் ஏற்ற முடியுமா என்ன?
குடியரசு தினத்தில்
குடியரசுத் தலைவர் ஏற்றினால்
ஆளுநர் இங்கே
மாநிலத்தில் ஏற்றுவார்!
சுதந்திரத் தினத்தில்
பிரதமர் ஏற்றினால்
முதல்வர் இங்கே
மாநிலத்தில் ஏற்றுவார்!
இந்தக் கொடிக்குத்தான்
எத்தனை மரியாதை?
ஆமாம்...
தாய்சேய் இணைப்புக் கொடியை
தொப்புள் கொடியென்றானே தமிழன்
காரணம் என்னவாய் இருக்கும்?!
தனக்கென்று கொடிநாட்டவா....?!
தமிழா...
தனக்கென்று கொடி நாட்ட வா.....!!
செ. இராசா
#ஓவியம்_தந்து_இன்ப_அதிர்ச்சி_அளித்த
#கர்நாடக_ஓவியர் Aslam Kadur அவர்களுக்கு எம் இனிய மனமார்ந்த நன்றி
THANK YOU VERY MUCH ASLAM JI
No comments:
Post a Comment