18/09/2021

கிணற்றைவிட்டு வெளியே வாருங்கள்

எல்லோராலும் எப்போதும் நல்ல படைப்புகள் தந்துவிட முடியாது என்பது உண்மைதான். அதற்காக நம் முயற்சியையும் பயிற்சியையும் விட்டுவிட முடியுமா? மேலும் நாம் எழுதும் அனைத்து வரிகளும் மேற்கோளாக அமைவதில்லைதான். அதற்காக மற்ற வரிகளின்றி வெறும் மேற்காளாகவே படைத்துவிட முடியுமா?! இப்படி சிலபல கேள்விகளோடுதான் ஒவ்வொரு படைப்பாளியும் மீண்டும் மீண்டும் நல்ல படைப்பைக் கொடுக்க முயற்சி செய்கிறான். அப்படி அவன் தானாக தன்னுள் தேடிக்கொண்டிருக்கும்போது சில குழுமங்களில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொண்டு தன் திறமையை மேலும் வளர்க்க முயல்கிறான். இப்போதுதான் சிக்கலே ஆரம்பமாகிறது. அதுநாள் வரையிலும் தன்னாலும் எழுத முடியும் என்று எண்ணிக் கொண்டிருப்பவன் அங்கே கொடுக்கும் சான்றிதழ்களால் தன்னை மிகப்பெரிய கவிஞனாக உணர ஆரம்பிக்கின்றான். ஆரம்பத்தில் சில பல சான்றிதழ்களோடு போகும் பயணம் எல்லாப் பக்கங்களில் இருந்தும் சான்றிதழ்கள் குவியக்குவிய தன்னை ஒரு மாபெரும் எழுத்தாளுமையாக உணர ஆரம்பிக்கின்றான். இப்போது அவனை நடுவராகவும் அழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆகா....உச்சத்திற்கே சென்று விடுகிறான். அவன் எழுதுவதெல்லாம் கவிதை என்று உணர ஆரம்பிக்கின்றான். பாவம்...தான் ஒரு கிணற்றில் விழுந்த தவளையாகிவிட்டோம் என்பதை உணராமலேயே....

தங்களின் மேலுள்ள அக்கரையில்தான் கூறுகிறேன். தயவுகூர்ந்து சான்றிதழின் பின்னால் போகாதீர்கள். அவர்கள் தருவது சான்றிதழா இல்லை விளம்பரத் தட்டியா?! தங்களின் எழுத்துக்குச் சான்றிதழ் யார் தருவது? அதை யார் தீர்மானிப்பது? சற்றே யோசியுங்கள். ஒரு நிகழ்வில் கலந்து கொண்டால்கூட அவனுக்கு மாகவி விருதென்றால் இப்போது விருதுகள் வழங்குவோரின் நோக்கம் என்ன? அனைவரையும் கூறவில்லை. ஆனால் பெரும்பாலும் நல்லது செய்வதாய் நினைத்து தாங்களும் ஒரு கிணற்றில் நின்றுகொண்டு பிறரையும் கிணற்றில் போட முயற்சிக்கிறார்கள். தயவுகூர்ந்து கிணற்றைவிட்டு வெளியே வாருங்கள்...

கடல் பெரிது.....!!!

✍️செ. இராசா

(யாரையும் குறிப்பிட்டு அல்ல)

No comments: