21/08/2020

குறளுரையாடல-6

 


 

 #குறளுரையாடல்_6
(மருத்துவர் ஐயாவும் நானும் அவ்வப்போது
குறள் வெண்பாவில் உரையாடுவது உண்டு.
அதன் தொடர்ச்சியாக இது)

#ஐயா_1
ஓரசை நற்கண்(டு) ஒழுங்காய் முடிவெண்பா
சீரசை ஈற்றாய்ச் சிறப்பு

#நான்_2
சிறப்பான வெண்பாபோல் சேர்ந்தநம் நட்பை
இறவாமல் காக்கும் இறை

#ஐயா_3
இறையருளால் வெண்பா இயற்ற மறையா
மறைபொருள் ஈயும் மறை.

#நான்_4
மறையா மொழியும் மறையின் மொழியும்
இறையின் மொழியும் இது

#ஐயா_5
இதுஇங்கே இக்கணம் இங்கண் உளதாம்
அதுவே இறைநீ அது.

#நான்_6
அதுஇது வென்றே அலையாமல் நின்று
புதுப்புது நன்நூல் படி

#ஐயா_7
படித்தல் இடையே பகரும்நல் வெண்பா
வடித்தல் படைக்க வா

#நான்_8
வாருங்கள் திங்களில் வள்ளுவம் போற்றுவோம்
தாருங்கள் எம்மோடு கை

#ஐயா_9
கைவிரல் தானெழுதும் ஐந்திணை யாவும்உன்
மைவிழியில் பைந்தமிழ் மை

#நான்_10

மையக் கருவின்றி வார்க்காத யாவையும்
பைய விலக்கிடுவர் பார்

#ஐயா_11
பார்வை ஒளியுணர்வால் பாரெலாம் ஆழ்நோக்கி
தேர்ந்தெடுக்கும் செந்தமிழ்ப்பா தேன்.

#நான்_12
தேன்தமிழை யாசித்துத் தீராமல் வாசித்த
நான்கூட ஆகலையா தேன்

#ஐயா_13
தேன்சொட்டிப் பாயும் தெவிட்டாத் தீந்தமிழை
நான்விட்டுப் பாடுமாம் நா

#நான்_14
நாவில் விடமின்றி நற்சொல்லாய்ச் சொல்வோர்க்கு
வாழ்வில் பெருகும் வளம்

#ஐயா_15
வளத்துடன் வாழ்வாங்கு வாழ கவிதை
உளத்துடன் வாழும் உயிர்

#நான்_16
உயிரில் உறைகிற ஒவ்வொரு செல்லும்
பயிர்போல் துளிர்க்கப் படி

#ஐயா_17
படிக்கும் பொழுது பகுத்தறிந்து ஆயும்
பிடிக்கும் உளத்தைப் பிடி

#நான்_18
பிடித்ததைப் பற்றிப் பிடித்தவர் வென்றால்
பிடிப்பார் எதையும் பிறகு

#ஐயா_19
பிறகு வடிப்பதாய்ப் பின்தள்ள பாவாய்
சிறகு விரிக்காதாம் சீர்.

#நான்_20
சீராய் அடுக்கியே செய்கின்ற வெண்பாவில்
கூராய் இயம்பலாம் கூற்று

#ஐயா_21
கூற்றும் பொருட்சுவையும் கூடி யெழுதினால்
சாற்றும் கவிதை சரி

#நான்_22
சரியாகச் செய்தும் தவறாகிப் போகத்
தெரியுமே ஊழின் செயல்

#ஐயா_23
செயலும் உளத்தின் செயலும் இணைந்தால்
இயலும் கவிதை இயல்

#நான்_24
இயலும் இசையும் இணையும் தருணம்
இயல்பாய் நடனம் எழும்

#ஐயா_25

எழுத்தும் எழும்சொல்லும் எண்ண உருவாய்
அழுக்கிலா உள்ள அழகு

#நான்_26
அழகுத் தமிழில் அமையும் கவிபோல்
பழகும் உறவினைப் பற்று

✍️ மருத்துவர் ஐயாவுடன் & நான்

No comments: