"#புகை_நமக்குப்_பகையாம்"
இது...
புகை பற்றிய விழிப்புணர்வு வாசகம்
எனில் எல்லாப் புகையும் பகையா?!
எப்படிப் பகையாகும்?!
உலை வைக்க வழியின்றி
ஓரமாய்க் கிடக்கும்
ஊதாங்குழலைக் கேளுங்கள்;
ஏழைத்தாயின் குழலிசை
எவ்வாறு இசைக்குமென்று
ஏக்கத்தோடு சொல்லும்!
எந்தெந்த புகைக்கு
எந்தெந்த மணமென்று
கம்ப காவியம் பாருங்கள்!
அகில் என்னும் அத்தரோடும்
ஆகுதி நெய்யோடும்
அயோத்தீ புகைவது புரியும்!
அனுமன் வைத்த தீயால்
ஆகாயம் எங்கும் புகையாம்..
பாஞ்சாலி பிறந்த தீயால்
பாரத வானில் புகையாம்..
ஆம்...
நெருப்பில்லாமல் புகையாதுதானே..
யார் சொன்னார்கள்?!
அருவியில் வரும் நீரும்
காற்றில் தவழும் மேகமும்
மார்கழியில் காணும் பனியும்
நெருப்பின்றி புகையுமே..
எனில்
புகைமொழியின் அர்த்தமென்ன?!
மங்களப் புகையும்
குளிர்ப் புகையும்
உலைப் புகையும்; கொஞ்சம்
உற்று நோக்கினால்
உன்னதப் புகைகளே..
இலைப் புகையும்
இரசாயணப் புகையும்
வாகனப் புகையும்; ஐயோ
வாழ்வைக் கொல்வதால்
வக்கிரப் புகைகளே..
இங்கே...
இயற்கையின் மூச்சை
இடையூறு செய்து
ஓசோன் போர்வையை
ஓட்டை போட்டு
உலகைக் கெடுக்கும்
உருவப் புகைகள் மட்டுமல்ல..
உயரத்தை நோக்கி
உடையவன் போகையில்
சில வயிற்றெரிச்சலில் வரும்
அருவப் புகைச்சல் இருக்கிறதே.
அப்புகைதான் ஆபத்தான புகை
ஆம்...
புகை நமக்குப் பகையே...
செ.இராசா
30/08/2020
புகை நமக்குப் பகையாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment