படுத்தவுடன் தூக்கம் வருகிறதா? எனில் பாக்கியவான்கள் நீங்கள்
புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம்
முரண்டு பிடிக்கின்றதா?!
எனில் இன்சோமியாவா இருக்கலாம்
எதற்கும் பரிசோதியுங்கள்.
என்ன பயமுறுத்துகின்றீர்....
அதுதான் பகலில் தூங்கி
பரிகாரம் செய்கிறோமே....
கதிரவன் கதவு தட்டினாலும்
இமைப்போர்வையை
இழுத்துப் போர்த்துகிறோமே...
இப்படி எல்லாம் வாதாடுபவரா நீங்கள்?!
சற்றே பொறுங்கள்...
தூங்காத லெட்சுமணனுக்காய்
தூங்கிய ஊர்மிளாபோல்;
ஆறுமாதம் விழித்ததற்காய்
ஆறுமாதம் உறங்கிய கும்பகர்ணன் போல்
இப்படி இராமாயண உறக்கமெல்லாம்
இங்கே எல்லோருக்கும் சாத்தியமில்லை
இந்த நேரத்தில் இப்படித்தான் என்ற
இயற்கையின் விதியில்
இடையூறு செய்யாதீர்..
எனில் தூக்க மாத்திரை போடலாமா?
இரண்டு மாத்திரை கூடுதலாகப் போட்டு
தோல்வியைத் தழுவிய
ஹிட்லர் கதை தெரியும்தானே?!
எனில்...
நீங்கள் உரைக்கும்போதே
நாங்கள் உறங்கிவிடட்டுமா?!
இப்படி
அர்ச்சுணன் உரைக்கும் போது
அசந்து உறங்கிய சுபத்திரையால்
சக்கர வியூகத்திலே சரிந்த
அபிமன்யு கதை அறிவீர்கள் தானே?
உரைத்தது உறைக்குமானால்
உணர்ந்து நடங்கள்....
என் உரையினைக் கேட்க
கொஞ்சம் செவியினைத் திறங்கள்..
அதிகமாய்த் தூங்கும் வரம் குழந்தைக்கானது
அது உள்ளுறுப்புகளை வளர்க்க...
சரியாய்த் தூங்கும் வரம் நமக்கானது
அது வளர்ந்த உறுப்புகளை சீரமைக்க...
மொத்தமாய்த் தூங்கும் வரம்
முக்தி அடைய வைப்பது
அது மொத்த உறுப்புகளுக்கு மட்டுமல்ல
இந்த உலக வாழ்விற்கே ஓய்வுதர
ஆம்..
தூக்கம் குறைந்தாலும் துக்கம்
தூக்கம் மிகுந்தாலும் துக்கம்
ஆனால்
சரியான தூக்கம்
சரியான மருந்து
உடல் மொழி அறியுங்கள்
உயிர் மொழி கேளுங்கள்
மன மொழி புரியுங்கள் .
தூக்கம் தூங்க ஓடி வரும்
துன்பம் தூர ஓடி விடும்
செ. இராசமாணிக்கம்
No comments:
Post a Comment