31/08/2020
துன்பத்திலும் நகுக----------வள்ளுவர் திங்கள் 126
30/08/2020
கவனிக்கா விட்ட கவிதைகள்
கைப்பேசி கரும்பலகையானது
கைப்பேசி கரும்பலகையானது
இணையம் வகுப்பறையானது
கொரானா சொந்தமானது
எடப்பாடி சாமியானது
தேர்வுகள் சமாதியானது
ஊரடங்கு வேள்வியானது
பொருளாதாரம் கேள்வியானது
வாழ்வாதாரம் ...............................?!
.
.
.
.
.
.
.
எங்கோ மௌனமானது!!!
#இனி_எல்லாம்_இப்படித்தானோ?
செ.இராசா
புகை நமக்குப் பகையாம்
"#புகை_நமக்குப்_பகையாம்"
இது...
புகை பற்றிய விழிப்புணர்வு வாசகம்
எனில் எல்லாப் புகையும் பகையா?!
எப்படிப் பகையாகும்?!
உலை வைக்க வழியின்றி
ஓரமாய்க் கிடக்கும்
ஊதாங்குழலைக் கேளுங்கள்;
ஏழைத்தாயின் குழலிசை
எவ்வாறு இசைக்குமென்று
ஏக்கத்தோடு சொல்லும்!
எந்தெந்த புகைக்கு
எந்தெந்த மணமென்று
கம்ப காவியம் பாருங்கள்!
அகில் என்னும் அத்தரோடும்
ஆகுதி நெய்யோடும்
அயோத்தீ புகைவது புரியும்!
அனுமன் வைத்த தீயால்
ஆகாயம் எங்கும் புகையாம்..
பாஞ்சாலி பிறந்த தீயால்
பாரத வானில் புகையாம்..
ஆம்...
நெருப்பில்லாமல் புகையாதுதானே..
யார் சொன்னார்கள்?!
அருவியில் வரும் நீரும்
காற்றில் தவழும் மேகமும்
மார்கழியில் காணும் பனியும்
நெருப்பின்றி புகையுமே..
எனில்
புகைமொழியின் அர்த்தமென்ன?!
மங்களப் புகையும்
குளிர்ப் புகையும்
உலைப் புகையும்; கொஞ்சம்
உற்று நோக்கினால்
உன்னதப் புகைகளே..
இலைப் புகையும்
இரசாயணப் புகையும்
வாகனப் புகையும்; ஐயோ
வாழ்வைக் கொல்வதால்
வக்கிரப் புகைகளே..
இங்கே...
இயற்கையின் மூச்சை
இடையூறு செய்து
ஓசோன் போர்வையை
ஓட்டை போட்டு
உலகைக் கெடுக்கும்
உருவப் புகைகள் மட்டுமல்ல..
உயரத்தை நோக்கி
உடையவன் போகையில்
சில வயிற்றெரிச்சலில் வரும்
அருவப் புகைச்சல் இருக்கிறதே.
அப்புகைதான் ஆபத்தான புகை
ஆம்...
புகை நமக்குப் பகையே...
செ.இராசா
29/08/2020
கண்களை மூடிக் கணபதி
28/08/2020
ஒற்றைச் சொல்லில் கவிதை
ஒற்றைச் சொல்லில் கவிதை சொன்னேன்
27/08/2020
கல்யாணம் பண்ணி வய்யிப்பா
#கல்யாணம்_பண்ணிவை
#பாடல்
#மதுரை_வழக்கு
#கற்பனையல்ல_நிஜம்
#கதை_நாயகன்_தம்பி_தினேஷ்
#அவரின்_கதையே_பாடலாக
கல்யாணம் பண்ணி வய்யிப்பா- எனக்கு
கல்யாணம் பண்ணி வய்யிப்பா
கல்யாணம் பண்ணி வய்யிப்பா- எனக்கு
கல்யாணம் பண்ணி வய்யிப்பா
என்னடா அவசரம்.....?!
குடுகுடுன்னு பண்ணிக்கிட்டால்
சடசடன்னு பெத்துக்கலாம்...
சடசடன்னு பெத்துக்கிட்டால்
கிடுகிடுன்னு வளர்ந்துடுங்க..
கிடுகிடுன்னு வளந்துச்சுன்னா
விடுவிடுன்னு விலகிடலாம்..
விடுவிடுன்னு விலக்கிப்புட்டால்
சரிவிடுன்னு ஒதுங்கிடலாம்!
.....(கல்யாணம் பண்ணி..)
என்னடா சொல்ற?!
தடபுடலாக் கேட்கலப்பா
கடகடன்னு பண்ணிவைய்யி
காசுபணம் இல்லையினா
கடன உடன வாங்கிடலாம்..
கடனும் உடனே கிடைக்கலைனா
எவனும் வேணா விலக்கிடுப்பா
அதுவும் உனக்குப் பிடிக்கலைனா-நீ
அப்பனே இல்லை விலகிடுப்பா..
.....(கல்யாணம் பண்ணி..)
இவன் யார்ரா?
பொண்ணு வேணுமுலடா??
அங்குட்டு இங்குட்டு எங்குட்டுப் போற
அத்தை பெத்தது இருக்குதுல்ல..
கட்டையோ குட்டையோ உனக்கு என்ன
கட்டிட்டு வந்தால் இருக்குமுள்ள..
கட்டிலும் மெத்தையும் எதுக்கு வேணும்
கட்டாந் தரை இருக்குதுல்ல..
இன்னும் என்ன வயசு இல்லை
யோவ்.......நானும் உன்னோட புள்ளை..
.....(கல்யாணம் பண்ணி..)
செ.இராசா
(இதில் அந்த கோட்டு போட்டவர்தான் அந்தத் தம்பி...என் அன்புத் தம்பி)
வயசுமேல வயசுஏறி
வயசுமேல வயசுஏறி வருசம் ஓடுது!
வயித்துக்காகத் தேடித்தேடி வாழ்க்கை முடியுது!
எதுக்குஇந்த மனுசப்பொழப்பு எதுவும் புரியல!
அதுபுரியும்போது உசுருதங்க அதுக்குப் புடிக்கல!
பெரியமனுசன் பேசுறப்பக் கேட்கத் தோனலை- நாம்
பெருசாகி பேசுறப்ப யாரும் கேட்கல!
செ.இராசா
#நிலையாமை
26/08/2020
குறளுரையாடல்-7 ஒருவிதை_இருகரு
#ஒருவிதை_இருகரு
#குறளுரையாடல்_7
இங்கே
முதல் குறள் வெண்பாவை மருத்துவர் ஐயா எழுதியவுடன் நான் இரண்டு கருக்கள்
வைத்து எழுதினேன். பிறகு ஒரே நேரத்தில் இரட்டைக் குழந்தைகளாய் குறளுரையாடல்
தொடர்ந்தது. அதை படிக்கும் வசதிக்காக இரண்டாகப் பிரித்துள்ளேன்.
#முதல்_பகுதி #அகப்பா (காதல் இன்பம்)
#ஐயா_1 (முதல் குறள்)
தேனினிக்கும் நற்காதல் தேன்பாவாய் காதினிலே
தானினிக்கும் சொற்பதமாய்த்
தான்.
#நான்_2
தானென்று நான்சொல்ல தானென்ன நீதான்; ஆம்
நானென்று நீசொன்னால் நான்
#ஐயா_3
நானழிந்து நாளெல்லாம் நானாக நீமாற
வானழிந்து நீதோன்றும் வான்.
#நான்_4
வானாய் உயர்த்திடவா வந்தாய்நீ என்னுள்ளே
தேனாய் இனியென் தினம்
#ஐயா_5
தினமும் உனதுள் திகழும் எனதால்
மனமும் தனதுள் மகிழ்.
#நான்_6
மகிழ்வின் பொருளாய் மனதில் நிறைந்த
சகியின் இருப்பே ஜெயம்
#ஐயா_7
செயமுண்டாம் உன்னால் செயலாற்ற என்றும்
பயமில்லை சொல்லும் பதம்
#நான்_8
பதமாய் ஒருவார்த்தை பைங்கிளிநீ சொன்னால்
இதமாய் இருக்கிறதே ஏன்
#ஐயா_9
ஏனெனும் கேள்வி எனதுயிரே உன்னிடம்
நானெழுப்ப மாட்டேன் நவில்.
#நான்_10
நவில்கின்ற போதுந்தன் நாவினைக் கண்டால்
கவிதையும் பெண்ணென்பார் கள்
#இரண்டாம்_பகுதி
#அகவாய்வு (தற்சோதனை)
#ஐயா_மூலக்குறள்_எண்_0
தேனினிக்கும் நற்காதல் தேன்பாவாய் காதினிலே
தானினிக்கும் சொற்பதமாய் தான்.
#அகவாய்வு_கருவில்
#நான்_1
தான்தோன்றி போலிங்கு தன்போக்கில் போகாமல்
தான்யார்? விடையினைத் தோண்டு
#ஐயா_2
தோண்டி எடுத்துத் தொடுக்க நினைக்கும்'தான்'
தாண்டி மறையும் தனது.
#நான்_3
தனதென்றும் தானென்றும் தன்னையே எண்ணாமல்
மனதென்றும் மற்றோர்க்காய் வாழ்
#ஐயா_4
வாழ்வு எனப்படும் வந்தோர்க்கு நற்சேவை
தாழ்வு எனப்படும் தான்.
#நான்_5
தான்தான் எனச்சொல்லி தற்பெருமை கொண்டோரை
ஏன்தான் படைத்தான் இறை
#ஐயா_6
இறையருளின் பேராற்றல் இவ்வுலகில் யாண்டும்
நிறைந்திருக்கும் உன்னுள் நினை.
#நான்_7
நினைப்பது போலவே நிச்சயம் கிட்டும்
நினைவிலே என்றும் நிறுத்து
#ஐயா_8
நிறுத்தி ஒலிக்கா நிமிடம் தவத்தால்
இறுக்க நொடியும் இனிது.
#நான்_9
இனிதென்றால் யாதெனில் இக்கணத்தில்
வாழும்
மனிதம் நிறைந்த மனம்
#ஐயா_10
மனத்தில் படிந்ததும் மங்கலாக்கும் மாசு
சினத்தில் கறுக்கும் இனம்
ஐயாவுடன் நான்