27/06/2018

யாரும் கேட்கலையே...


கத்திகத்திச் சொன்னாலும்
கத்துவது கேட்கலையே.....
சத்தம்போட்டுச் சொன்னாலும்
சத்தியத்தை உணரலையே

வெள்ளைக்கோழி திண்ணாக்க
வெளங்காமப் போவோமுன்னும்
நாட்டுக்கோழி திண்ணாக்க
நன்றாக இருப்போமுன்னும்....கத்திகத்தி

சூரியகாந்தி எண்ணெயில
சூனியமா போவாமுன்னும்
நம்ம ஊரு எண்ணெயில
நல்ல தரம் இருக்குதுன்னும்... கத்திகத்தி

சீனியும் சக்கரையும்
சீக்கிரமே அனுப்புமுன்னும்
நாட்டுக் கருப்பட்டியே
நம்மை வாழ வைக்குமுன்னும்..கத்திகத்தி

புரோட்டாவைத் தின்னாக்க
புட்டுக்குட்டு போவாமுன்னும்
நவதானியம் தின்னாக்க
நலமாக இருப்போமுன்னும்...கத்திகத்தி

நூடுல்சு உணவெல்லாம்
நாள் குறிக்கும் உணவென்றும்
இடியாப்பம் பனியாரம்
இனிமைமிகு உணவென்றும்..கத்திகத்தி

சாக்கலேட்டும் குக்கீசும்
சமாதி கட்டுமென்றும்
எள்ளு கடலை உருண்டையே
தரமான மாற்றென்றும்......... கத்திகத்தி

ஓட்சும் பீசாவும்
காசுக்காக வந்ததென்றும்
ஆப்பமும் இட்லியுமே
ஆரோக்கிய உணவென்றும்....கத்திகத்தி

............

(அடப்போங்க ஜி......ச்சும்மா.....முதல்
உங்க வீட்ல கேட்டாங்களா?

புரியுது...புரியுது....

இருந்தாலும் சொல்லுவது கடமையல்லவா)

✍️செ. இராசா

No comments: