10/06/2018

அன்பெனும் அகல்விளக்கு


அன்பெனும் அகல்விளக்கு
..........அகத்தினில் தோன்றிவிட்டால்
கண்டிடும் காட்சியெல்லாம்
..........கடவுளாய்த் தோன்றிடுமே!
அன்பெனும் தத்துவத்தின்
..........அர்த்தம் புரிந்துவிட்டால்
அகிலத்து உயிர்களெல்லாம்
..........இறைவனாய்த் தெரிந்திடுமே!

அன்பெனும் ஆயுதத்தால்
..........அகிலத்தை வென்றிடவே
அண்ணல் காந்தியன்று
..........அகிம்சையைத் தந்தாரே!
அன்பெனும் மருந்துடனே
..........அக்கரை குணம்கொண்டே
அன்னை தெரசாவும்
..........அன்பினைப் பொழிந்தாரே!

உள்ளத்தில் அன்புவைத்து
.........உண்மையாய்ப் பழகிடுவோம்!
உதிரத்தில் அன்புவைத்து
.........உயிர்ப்புடன் வாழ்ந்திடுவோம்!
அன்பின் எல்லையினை
.........அண்டமாய் ஆக்கிடுவோம்!
அன்பில்லா எதிரியையும்
.........அன்பினால் வென்றிடுவோம்!

பாசமாய் நேசமாய் பிறந்த அன்பு
காதலாய் கவிதையாய் வளர்ந்த பின்னே
நட்பாய் உறவாய் வடிவம் பெற்று
பக்தியாய் அருளாய் உயர்ந்தால் சிறப்பு!

No comments: