08/06/2018

கவிச்சரம்- வறுமையற்ற வாழ்வு- சிக்கனம்



97வது கவிச்சரம்- வறுமையற்ற வாழ்வு- சிக்கனம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தமிழ்த்தாய் வணக்கம்
*********************
உடலோடு உயிர்சேர
உருவான உயிரினங்கள்;
உருவாக்கும் ஒலிகளினால்
உருவான மொழிகளிலே;
உயிரோடு மெய்யாக
உலவுகின்ற மொழியான;
உயரத்தில் வீற்றிருக்கும்
உயர்திருத் தமிழ்த்தாயை;
உளமார வாழ்த்துகின்றேன்!
உள்ளத்தில் போற்றுகின்றேன்!

🌹 🌷 🌹 🌷 🌹 🌷 🌹 🌷 🌹

கவிச்சரத் தலைமை வணக்கம்
******************************
ஏழு சுவரங்களுக்குள்
எத்தனையோ கீர்த்தனம்போல்
எழில்மிகுக் கவிச்சரத்தில்
எழுந்துள்ள கீர்த்தனா பிருத்விராஜ் அவர்கள்
எழுசீர் குறள்களைப்போல்
என்றும்வாழ வாழ்த்துகின்றேன்!

🌼 🌸 🌼 🌸 🌼 🌸 🌼 🌸 🌼 🌸 🌼

அவை வணக்கம்
****************
பகலவனின் பெருமைக்கு
பரவுகின்ற ஒளி சாட்சி!
பழகுகின்ற கவிஞருக்கு
பட்டறைத் தமிழ் சாட்சி!
நற்றமிழ் சபையினை நான்
நன்றியுடன் வணங்குகின்றேன்!

💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

வறுமையற்ற வாழ்வு
*******************
இளமையில் வறுமை
...........:இடர்மிகுக் கொடுமை!
முதுமையில் வறுமை
...........:அதைவிடக் கொடுமை!

அறிவின் வறுமை
............:அறியாமை ஆகும்!
இருப்போரின் வறுமை
.............:ஈயாமை ஆகும்!

சிந்தையில் வறுமை
.............:சிறப்பின்றிப் போகும்!
அன்பில் வறுமை
.............:அழிவினைக் காட்டும்!

வளமுடன் வாழ
.............:வழியினைத் தேடு!
வசதியைப் பெருக்கி
.............:வறுமையை விரட்டு!

🍃 💐 🍃 💐 🍃 💐 🍃 💐 🍃 💐 🍃

சிக்கனம்
*********
சீமான் ஆனாலும்
கோமான் ஆனாலும்
சிக்கனம் இல்லையெனில்
சீக்கிரம் அழிந்திடலாம்
சிந்தையில் ஏற்றிடுவீர்!

கூத்தாடி ஆனாலும்
பாட்டாளி ஆனாலும்
சிக்கனம் இல்லையெனில்
சீக்கிரம் சரிந்திடலாம்
சிந்தையில் ஏற்றிடுவீர்!

இக்கணம் சேமித்தால்
நற்கணம் நாளையாகும்!
சிக்கனம் கடைபிடித்தால்
எக்கணமும் உனதாகும்!

☘️ 🍁 🍀 🍁 🍀 🍁 🍀 🍁

நன்றி நவில்தல்
***************
எட்டி எட்டி கால் வைத்து
எட்டு பேரவை கண்ட தளம்!
எட்டு திசை புகழ் பரப்பி
எட்டாது உயர்ந்த தளம்!
தமிழ் கொஞ்சும் அத்தளத்தில்
தமிழ் கற்கும் அடியேனும்
கவி எழுத வாய்ப்பளித்த
கவிச்சரத்தின் அவையினரை
மனம் மொழி மெய்களினால்
மறுபடியும் வணங்குகின்றேன்!

நன்றி! நன்றி!! நன்றி!!!

🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

No comments: