கரிகூட வைரமாகும் காலத்தால் ஆனால்
கரிக்கில்லை அம்மதிப்பு காண்!
(1)
அறியார் அறியார் அரிதான தொன்றை
அறிவார் அறிஞர் அகன்று
(2)
காலத்தால் பேசாமல் காலமுற்றால் பேசுவது
ஞாலத்தின் போக்கோ நவில்
(3)
மதிக்கின்ற பேரை மதிக்கின்ற மாண்பே
மதிப்பாகும் என்றும் மதி
(4)
மதியாதார் கூட மதித்திட வேண்டின்
மதிப்போடு நிற்பாய் வளர்ந்து
(5)
இகழ்ந்தின்று பார்க்கும் இளந்தாரி கூட்டம்
புகழ்ந்திட வைப்பாய்ப் புரிந்து!
(6)
வாய்ப்பு வருமென்று நாட்களைப் போக்காமல்
வாய்ப்பை உருவாக்கி வா
(7)
முயற்சித்த பின்னுமா முன்னேற்றம் இல்லை?
வியப்பில்லை எல்லாம் வினை
(8)
கற்கண்டும் கல்லும் கழுதைக்குக் கல்லே
அற்பர்க்கும் அஃதே அறி!
(9)
மதியாரை எண்ணி மனம்நோகும் காலம்
மதிப்பாகா தென்றே மற!
(10)செ.இராசா
No comments:
Post a Comment