01/04/2025

டீ..டீ...டீ சாய்...சாய்

 

டீ..டீ...டீ
சாய்...சாய்.. சாய் என்னும்
இந்தக் குரல்களின் பின்னால்தான்
எத்தனை வலிகள்?
எத்தனை வரலாறுகள்?
எத்தனை பசிகள்?
எத்தனை வியாபாரங்கள்?
எத்தனை அதிகாரங்கள்?
எத்தனை அடிமைத்தனங்கள்?
ஆம்...

யோசித்துப் பாருங்கள்?
சீனாவில் உதயமாகி
ஜப்பானில் வளர்ந்து
ஐரோப்பாவில் புகுந்து
இன்று உலகலாவிய கிளைபரப்பிய
இந்தத் தேநீர் இருக்கிறதே...
இதில் இருப்பது
தேயிலையின் சாறுமட்டுமா?
இல்லை இல்லை...
பலபேரின் இரத்தமும்தான்..

இதற்காகத்தானே
சைனாவில் ஓபியப் போர் நடந்தது?
இதற்காகத்தானே
அமெரிக்கா சுய எழுச்சி பெற்றது?

இங்கே...
உதக மண்டலம் மட்டுமா
தேயிலை மண்டலமானது?!

இலங்கை
மலேசியாவென
ஆங்கிலேயர்கள் ஆண்டதால்
சாயும் சகவாசம் கொண்டது!!
நம் நாவும் சாய்வாசம் உண்டது!

ஒரு காலத்தில்
உயர்தரப்புக்கே உரிய
ஒய்யார பானமிது...
இன்றோ
உணவில்லா தரப்பிற்கும்
உற்சாக பானமிது...

ஒரு காலத்தில்
சண்டையிட்டுப் பெற்ற
சரித்திர பானமிது..
இன்றோ
சண்டையைத் தவிர்க்கும்
சமத்துவ பானமிது..

ஆமாம்...
டீக்கடை பெஞ்ச் என்பதென்ன?
இக்கால வாட்சப் குழுபோல்
அக்கால வாயப் குழுக்கள்தானே..

இனியும்...
டீ...மாஸ்டரை
டீ மாஸ்டர்தானே என்று
எள்ளி நகைக்காதீர்
யாருக்குத் தெரியும்?
அதில் இன்னொரு மோடியும்
இருக்கலாம்....
இல்லை பில்கேட்ஷே சந்திக்கும்
சாய்வாலாவும் இருக்கலாம்..

உங்களுக்குத் தெரியுமா?

ஆளுநரின் தேநீர் விருந்தை
ஆளுங்கட்சிகள் புறக்கணிப்பது: அவர்களுக்கு
சர்க்கரைநோய் இருப்பதால் அல்ல
சர்க்காரிய மாடலால்...

பெண்வீட்டாரின் தேநீர் விருந்தை
மாப்பிள்ளை வீட்டார் ருசிப்பது: வெறும்
டீ பார்ட்டி செய்வதற்காக அல்ல
டீல் பார்ட்னர் கிடைப்பதால்...
உண்மைதான்....
தேநீரை வைத்தே
விருந்து நடந்தாலும்
இங்கே
தேநீர் இரண்டாம்பட்சமே

ஆனால்...
காசே இல்லாத வேலையில்
தேநீர்தான் முதலாம்பட்சமே..
இல்லை...
முதலாம் பட்சனமே..

ஆம்...
தேநீர்..
ஏழைகளுக்கு விருந்து
ஓட்டுநர்களுக்கு மருந்து
கவிஞர்களுக்கு அபின்
கலைஞர்களுக்கு ஒயின்
விளையாடுபவர்க்கு பூஸ்ட்
வெறுப்பவர்க்கு வேஸ்ட்

ஜென் தியானம்போல்
டீ தியானமும் பேர்போனதாம்...
இனியும்
டீயை வெறும்
டீ யென்று எண்ணாமல்
டீயோடு ஒன்றுங்கள்...

டீ... களைப்பை நீக்க மட்டுமல்ல
டீ... கரையவும்தான்....

✍️செ. இராசா

No comments: