30/12/2024

பிரியாணி

 

புதினாவும் போடாம
கொத்தமல்லியும் போடாம
பிரியாணி சாத்தியமான்னு
பிரியமானவளிடம் கேட்டேன்....
அட..
உங்களால் முடியும்
நீங்க கிண்டி இறக்குங்கன்னா...
...
சத்தியமா சொல்றேங்க
ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும்
அவுங்களும் இருக்காங்கங்க..
ஆங்...


24/12/2024

ஒன்றுமே செய்யாமல் ஓரமாய் ஒதுங்கவா

 

ஒன்றுமே செய்யாமல் ஓரமாய் ஒதுங்கவா
உன்மகனை உலவ விட்டாய்?
என்றுமே வெல்லாமல் ஏக்கமாய்த் திரியவா
இப்பிறவி எடுக்க வைத்தாய்?
நன்றியே இல்லாதோர் நஞ்சினைப் பகிரவா
நண்பரெனப் பழக விதித்தாய்?
தன்மையே இல்லாதோர் தன்வினை புரியவா
தண்டனைபோல் எமையும் படைத்தாய்?

23/12/2024

நைநைம்பான்

 

(ஒரே படம்தான் வெவ்வேறு காலகட்டங்களில்
இந்தக் கவிதைகளைப் பிரசவித்துள்ளது)

**************

தொப்புள் கொடியிலே தூளிகட்டி
தொங்கியே வாழ்ந்த காலத்தைப்போல்
தோரணக் கொடியிலே காகிதமாய்
தொங்கிட வைத்தல் சரிதானோ?!!

(டேய் அப்பா... இறக்கிவிடுறா.... முள்ளு குத்துது)

23.12.2018

எப்பப்பா ஏற்றினாய்
....எப்பநீ சொல்லப்பா
அப்பப்பா அப்பப்பா
......அப்பாநீ- தப்பப்பா
முள்ளுப்பா முள்ளுப்பா
......முட்டுதே பாரப்பா
தள்ளுப்பா வேணாம்பா
.......தப்பு!

03.08.2019

பழக்கத்துக் கோசரம்
......பார்க்குறேன் இல்லை
பழத்துலயா ஏத்துற
......பாடு- கிழபோல்டு
கீழ இறங்குனேன்
......கீச்சிறுவேன் பார்த்துக்க
வீழநான் மாட்டேன்டா
.......வெல்ரு!

23.12.2022

வாமச்சி வான்னா
‌......வரனும்பா இல்லைன்னா
நாமயென்ன செஞ்சாலும்
.......நைநைம்பான்- பூமருங்க
எல்லோரும் இப்படித்தான்
.......ஏத்திநம்ம குந்தவச்சு
நல்லா இளிப்பாய்ங்க
.......வா

23.12.2024

21/12/2024

வான்படைத்த நாயகத்தை

 

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

வான்படைத்த நாயகத்தை
வந்துவந்து பார்க்கிறேன்!
நான்பிறந்த காரணத்தை
நான்தெரிந்து கொள்ளவே..

தேன்படைத்த நாயகத்தைத்
தேடிவந்து பார்க்கிறேன்
தேன்கொடுத்த ஈக்களெல்லாம்
சேர்வதெங்கே கேட்கவே..

மான்படைத்த நாயகத்தை
மண்டியிட்டுக் கேட்கிறேன்
வேங்கையெல்லாம் வேட்டையாடும்
தேவைபற்றி வேண்டவே.‌..

ஊண்கொடுத்த நாயகத்தை
ஒன்றுமட்டும் கேட்கிறேன்
சாண்வயிற்றின் தீப்பசிக்குத்
தேடலென்னுள் நீங்கேவே...

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

✍️செ. இராசா 

உலக தியான தினம்

 

தூங்காமல் தூங்கிச்
.....சுகம்காணும் வித்தையை
பாங்காய்ப் பழகிப்
.....பயனடைவீர்- தீங்கின்றி
இக்கலையைக் கற்றோர்
......இளமையாய்த் தோன்றுவதே
அக்கலைக்குச் சான்றாகும்
......ஆம்!

நல்ல அலைச்சுழலில்
....நாம்விடும் எண்ணத்தால்
நல்லவை யாவும்
.....நடந்தேறும்- இல்லையேல்
அல்லல் படுத்தும்
......அலைச்சுழலாய்ச் சூழ்ந்துபல
தொல்லைகள் நீளும்
..... தொடர்ந்து!

தவமாய்த் தவமிருந்தும்
.....தப்புகள் செய்வோர்
அவமென எண்ணி
....அதன்பின்- தவறாமல்
செய்யும் தவத்தைச்
....சிறப்பாகச் செய்துவர
பொய்மை விலகும்
....புரிந்து!

✍️செ. இராசா


19/12/2024

எழுதாத தாளில்

 எழுதாத தாளில் எழுதலாம்...

எழுதிய தாளில் எழுத முடியாது; அஃதே
நிரம்பிய மூளைக்குள் நிரப்ப முடியாது

16/12/2024

கண்கவர் இளநீர்

 



நன்றாகச் சீவி
நளின உடையுடுத்தி
முன்னே தெரியாமல்
மூடிவிட்டுச்- சின்னதாய்க்
கண்ட உடனேயே
கவ்வுகின்ற பெண்தானோ?
கண்கவர் இவ்விளநீர்
காண்!

✍️செ. இராசா

(இளநீருக்குப் போட்ட உடையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் சுவைதான் சரி இல்லை. வியட்நாம் இளநீர்.... மக்களே...நாம் கூட இப்படி டிசைன்செய்து வித்தா நல்லாதான் இருக்கும்னு நினைக்கிறேன். ஆமாம்..அப்பவாவது குடிப்பாங்கல்ல)

யாரென்ன சொன்னாலும் திமுகனா கெத்துங்க

 

யாரு யாரு வருவதாரு
இதில என்ன டௌட்டு
வேற யாரு சின்னவரு
வருவதுதான கரைட்டு
ஊரி ஊரி வருவதுதான்
எதிரணியின் ரூட்டு
வேற மாறி வெல்வதுதான்
தளபதியார் வெயிட்டு
யாரென்ன சொன்னாலும்
திமுகனா கெத்துங்க
யாரெதிர் நின்னாலும்
டெபாசிட்டே டௌட்டுங்க
கலைஞரு பேரெனெங்க
உதயநிதி யாருங்க
அமைச்சரா மின்னியிங்க
கலக்குறாருப் பாருங்க..
அதிரடியாகப்பேசி
அசத்துறது யாருங்க
தளபதி அனுப்பிவச்ச
உதயநிதி அண்ணங்க
சாதிமதத்தைச் சொல்லி பிரிக்கிறது யாருங்க?
நீதிபுகட்ட எண்ணி போடவேணும் ஓட்டுங்க...
மோதிஜெயிக்க இங்கே பேசுவதைக் கேளுங்க..
நீதிஜெயிக்க எண்ணி நம்மயாரு காட்டுங்க....
யாரென்ன சொன்னாலும்
திமுகனா கெத்துங்க
யாரெதிர் நின்னாலும்
டெபாசிட்டே டௌட்டுங்க
தமிழினம் வாழ்த்துகின்றத்
தங்கமகன் யாருங்க?
தென்னகம் பெருமைகொள்ளும்
சிங்கமிவர் தானுங்க..
சென்னையில் வெற்றிகண்ட
உதயநிதி யாருங்க?
நம்மினம் நிமிரவச்ச
கழகத்தோட தூணுங்க...
மாநில உரிமை காக்க நாமவெல்ல வேணுங்க
மாறிடும் சூழ்நிலைய நினைச்சு வோட்டப் போடுங்க
நாட்டையே அடகுவச்ச மோசமான கூட்டங்க
நாமதான் தடுக்கவேணும் சின்னம் பார்த்து போடுங்க
....நம்ம சின்னம் பார்த்துப் போடுங்க!
யாரென்ன சொன்னாலும்
திமுகனா கெத்துங்க
யாரெதிர் நின்னாலும்
டெபாசிட்டே டௌட்டுங்க

15/12/2024

எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா

 

ஹேய்
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக நம்மக் கட்சி வேணும்
தில்லு இருந்தா மோதிப் பாரு
உன்னால முடியாது தம்பி
அட நாதியத்துப் போகுதுபார்
தமிழ்நாட்டில் மலராம வெம்பி...
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்..
தன் நேரத்தை எப்போதும் நமக்காகக் கொடுத்தது
கலைஞரின் மூளையப்பா.‌‌
அதைக் கொடுத்தாலும் அப்பப்போ மதிக்காம விட்டது
நாம்செஞ்ச பாவமப்பா........(1 × 2)
கலைஞர் விதைச்ச நிலம் பாரு
இப்போ முளைச்ச களைநூறு
தலைவர் வழியில் மகன்பாரு
களைய அறுக்க வருவாரு
தமிழ்நாட்டக் காக்கும் தலையாரு?
தமிழ்வாழ அரணா இருப்பாரு...
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்
சரணம்_2
அட.
நான் நீன்னா ஒட்டாது
நாமென்றால் ஒட்டும்னு.
கலைஞரய்யா சொன்னதுங்க
ஆட்சி
இருந்தாலும் உழைப்பாங்க
இழந்தாலும் உழைப்பாங்க
நாம்கண்டு கொண்டதுங்க
அண்ணா பெரியார் கொடுத்ததெல்லாம்
மானம் காக்கும் கொள்கை தானுங்க
ஸ்டாலின் ஐயா நினைப்பதெல்லாம்
யாவும் யார்க்கும் கிடைக்கவேணுங்க
தலைவர்
வாரி கொடுத்தத நினைச்சுப்பாரு
தொடர்ந்து ஆட்சி நடந்திட ஓட்டப்போடு
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக நம்மக் கட்சி வேணும்
தில்லு இருந்தா மோதிப் பாரு
உன்னால முடியாது தம்பி
அட நாதியத்துப் போகுதுபார்
தமிழ்நாட்டில் மலராம வெம்பி...
எல்லோரும் வாழனுன்னு - நினைச்சா
அதுதானே நல்லக் கொள்கையாகும்
அதுக்காக வந்தக் கட்சி வேணும்..

14/12/2024

அனுபோகம் வேண்டுமா?

 


கரை வீணையை மீட்டி
அலை விரல்கள் எழுப்பும்
அற்புத சிம்பொனியில்
அணுஅணுவாய்க் கரைகின்ற
அந்த அனுபோகம் வேண்டுமா?
இதோ இந்தக்
கடலோரக் கவிதையை வாசியுங்கள்!

13/12/2024

குறள் அந்தாதி வெண்பாக்கள்


அடைமொழியின் உள்ளே அடைபட்டோம் என்றால்
தடைப்பட்டுப் போகும் தமிழ்.
(1)

தமிழை உயர்த்துவதாய் தம்பட்டம் போட்டுத்
தமிழால் உயர்கின்றார் தான்.
(2)

தான்தான் உயர்வென்று தற்பெருமை பேசினால்
சான்றோர்முன் தாழும் தரம்.
(3)

தரமில்லாச் செய்கை தரம்தாழ்த்தும் என்றும்
சிரமுயரச் செய்தால் சிறப்பு.
(4)

சிறந்தவராய் மாற சிலகாலம் ஆகும்
திறமை குறையாமல் தேடு.
(5)

தேடுகின்ற அத்தனையும் சேர்வதில்லை என்றாலும்
ஓடுகின்ற காலத்தில் ஓடு.
(6)

ஓடுகின்ற காலத்தில் ஓயாமல் ஓய்ந்துவிட்டால்
கேடுறும் வாழ்க்கைதான் தீர்வு .
(7)

தீர்வில் தெளிவோடு தேடுகின்ற ஓட்டத்தால்
யார்க்கும் எளிதாம் இலக்கு.
(8)

இலக்கின்றிப் போனால் எளிதும் அரிதாம்
இலக்கை முதலில் எழுது!
(9)

எழுத்தென்னும் ஆயுதத்தால் எண்ணத்தைக் கீறி
அழுத்தமுற வெற்றி அடை!
(10)

✍️செ. இராசா

10/12/2024

இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா

 



பார்க்கப் பழகப்
.....பசுபோல் இருந்தாலும்
சேர்க்கை அழுக்கென்றால்
.....சேர்வதில்லை- தீர்க்கமுடன்
தன்னைப் பெரிதென்றே
......தானெங்கும் காட்டாத
இன்பக் கலிலே
......இவர்!

தேடல் ஒருபக்கம்
.......தேவை மறுபக்கம்
பாடல் பயணமெனப்
........பாடுபட்டே- ஓடுகின்ற
இன்பக் கலிலென்னும்
.......இன்னிசை வேந்தருக்கு
நண்பனாய் நான்தரும்
.......வாழ்த்து!

✍️செ. இராசா